விடுதியும் கிழவனும் | Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

விடுதியும் கிழவனும்

யவனிகா ஸ்ரீராம், ஓவியம் : வேல்

வேசியர் இல்லத்தில் ரத்தம்
சுக்கில சுரோணிதக் கறைகளை அலசித் துடைத்து
படுக்கைகளை இதயவடிவத் தலையணைகளோடு
அழகுற மீள்செப்பமிடும் ஒரு நரைத்த
முதியவனைத் தேநீரின் பொருட்டு அழைப்புமணியின் வழியே சோம்பலாய் வரவழைத்தேன்
என்னிடம் சில உடலுறவுக் காட்சிகளை
உள்ளடக்கிய அலைபேசி எப்போதும் காமத்திற்குப் போதுமானதாய்
இருந்த ஒரு காலம்
உங்களுக்கும் ஞாபகமிருக்கும்
பெண்கள் அதிகம் மதிப்புக்கூட்டப்பட்ட
இனிப்புப் பண்டங்கள்போலச் சந்தைக்குப் பெரும் குவியலாய்த் தருவிக்கப்பட்டிருந்தார்கள்
கிழவனுக்கு ஓர் இளம்பெண்ணின் மீது
பின்வாங்கும் கடலலைகளின் அவமானம்போல் தோய்ந்து அடிமையாய்
மிஞ்சிய உப்பின் காதல்
அதுவும் அவள் சுவைக்கத் தந்தது
அவன் நத்தைகளை வறுத்து கண்ணீர் மல்கும் காரத்துடன் அவள் உறங்கப்போகும்
இடுக்கில் தலைகோதி தின்னச் சொல்லிவிட்டு அவள் கால்நக்குவான்
போதையில் கிழட்டுத் தாயோளி எனச் சீறி அவன் அடிவயிற்றில் உதைக்கும்
அவள் பாதார விந்தங்களைப் பற்றி அணைத்து அவன் சிரிக்கும் ஒலிதான்
ஒரு பெருநகரத்தின் விடியலில் பறவைகளின் வலசையைத் தொடங்கிவிடுகிறது

நீங்க எப்படி பீல் பண்றீங்க