மெய்ப்பொருள் காண் - மொடை

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நர்சிம்

ந்தச் சொல் குறித்து எழுதலாம் என்ற யோசனையில் ஒரு நாள் முழுக்கக் கழிந்தது. ஏதேனும் எழுத வேண்டும் என்று முடிவெடுத்தால், உடனே இல்லையென்றாலும் சற்றைக்கெல்லாம் நூற்கண்டின் நுனி பிடித்திழுத்தல்போல் சொற்கள் சுழன்றுவந்து விழுந்துவிடும். எப்படி நம் சிந்தனைக்கு இவ்வளவு மொடையாகிப்போனது என மனம் நினைத்த மாத்திரத்தில் மூளைக்குள் சூழ்கொண்டது ‘மொடை’ என்ற சொல்.

ஆம். இந்தச் சொல்லைப் பயன்படுத்தாத சம்சாரி வீடே இல்லை எனலாம்.  “அட அத ஏனப்பா கேட்குற, பண மொட, இப்பண்டு பார்த்துச் சடங்கு காதுகுத்துண்டு எதையாச்சும் வச்சுப்புடுறானுங்க, மொய் செய்யணுமா இல்லையா” எனப் பெரும்பாலும் அலுப்பும் சலிப்புமாகவே மொடை என்ற சொல்லின் பயன்பாடு அமையும்.

செழிப்பு, செழிம்பு என்ற சொற்களின் நேரெதிர்ப் பதம்தான் மொடை. “அப்பிடி என்னடா மொட ஒனக்கு” என்று விசனம் விசாரிப்பதும் உண்டு.

மழை பொய்த்துவிடுதல், மாடு இறந்துபோதல், குடிசை எரிந்துபோதல், என விவசாயியின் வாழ்க்கையில் இயற்கையும் இல்லாமையும் இயலாமையும் ‘மொடை’ ஆக்குகின்றன. “அம்புட்டுத்தான், ஆளு மொடங்கிருவாரு” என்ற சொல்லே கிராமத்து மருத்துவரின் கடைசிக் கண்ணாடிக் கழட்டல்.

“இப்பிடி ஒரேடியா மொடங்கிப் போயிருவோம்னு கனவுலகூட நெனச்சதில்ல” வாழ்ந்து கெட்டவர்களிடம் இந்த வார்த்தைகள் வெளிப்படும்போது, மொடங்கிப் போதலின் வலியை உணரலாம்.

ஒரே இடத்தில் அடைபடுதல், வேறு வழி இல்லை, மாட்டிக்கொள்ளுதல் என்பதாக ‘மொடை’ குறிக்கப்படுகிறது. எனில், ‘மடை’ என்ற சொல்லின் கிளையாகவும் மொடை என்ற திரிபு உருவாகியிருக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick