முதன் முதலாக: பாடகியின் யானை

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அனார்

வாப்பாவின் நீலக்கூடை சைக்கிளில், முதன்முதல் பாடசாலைக்கு முன்னர் இறங்கி, கண்களின்முன் விரிந்திருந்த வெண்ணிறப் பளிங்காலான மாளிகைகள்போலத் தெரிந்த கட்டடங்களைப் பார்த்ததும், இனம்புரியாத குளிர்ச்சி உள்ளங்கைகள் இரண்டிலும் பரவியது. எங்கள் வீட்டின்முன் பரவியிருந்த குருத்துமணற் துணிக்கைகள் பாடசாலை வளவிலும் பரவியிருந்தது. வாப்பாவின் கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டேன். என் கண்மட்டத்தில் நிறைய கருவிழிகள் அலைந்துகொண்டிருந்தன. என்னைச் சுற்றிச் சிப்பிகள் அலைவதைப்போல வெண்ணிற உடையில் நிறைய பேர் திரிந்தார்கள். அவர்கள் தேவதைகள்போலத் தூய்மையானவர்களாக இருந்ததைப் பார்த்தபோது, இன்றிலிருந்து நானுமொரு தேவதையென்றும் நினைத்துக்கொண்டேன். வீட்டு முற்றத்துக் குருத்துமணலுக்குள் காலைப் புதைத்து நடப்பதைப்போல வாப்பாவின் கைகளை இறுகப் பிடித்தபடி குருத்துமணலுக்குள் காலைப் புதைத்து வேகமாக வெளியே உந்தினேன். மணற்துணிக்கைகள் நட்சத்திரக் கூட்டமொன்று விசிறிப் பறப்பதைப்போலத் தெறித்தன.

பாடசாலை சென்ற முதல் நாளிலிருந்தே ஆசிரியர்களின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டேன். அவர்கள் மிகவும் நல்லவர்கள்; வாப்பா சொன்னதுபோலவோ ராத்தா சொன்னதுபோலவோ “படி” என்று சொன்னதே இல்லை. அவர்கள் மிகுந்த பக்குவத்துடன் தமது மடியில் தூக்கிவைத்துத் தேவதைக்குத் தரும் மதிப்புடன் “பாட்டுப் படி” என்பார்கள். அதுவரை எனக்கு நானே பாடிக்கொள்ளும் முணுமுணுப்பு களெல்லாம் வெண்சுவர் நெடுகிலும் இசைக்கத் தொடங்கின. தேவதையின் பாடல்களை அவர்கள் பெரிதும் ரசித்தார்கள். அவர்களின் கண்களிரண்டும் கனிந்து என்மீது கவியும் அன்பு, என்னை எப்போதும் பாடவைத்துக்கொண்டே யிருந்தது. காற்றின் குளிர்மையோடு பாடசாலையெங்கும் என் குரலும் நிறைந்தது. அவர்களின் மடியிலிருந்து இறங்கி இரு சிறகுகளை இடுப்பில் பொருத்திக்கொண்டு உடலை அசைத்துப் பாடும் பக்குவம் வரும்போது ஐந்தாம் வகுப்பிற்கு வந்துசேர்ந்தேன். இரண்டு பாடங்களை அப்போது அடியோடு வெறுத்தேன். ஒன்று கணிதம் மற்றையது சித்திரம். ஒரு நேர்கோட்டையோ முழுமையான வட்டத்தையோ சரியாக வரையத் தெரியாமல், அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். நேர்கோடும் வட்டமும் தேவதைக்கெதற்கு? தேவதைகள் இசைக்கானவர்கள். ரோம இலக்கங்க ளிலிருந்து உடலும் தலையுமுள்ள பூதங்கள் வந்தன. அவற்றின் கோர வாயினால் தேவதைக் கனவுளையெல்லாம் ஒன்றொன்றாகத் தின்றுகொண்டிருந்தன. இப்போதும் அந்த நிலையில் பெரிய மாற்றங்கள் ஒன்றுமில்லை.  நான் கனவுகளை உருவாக்கிக்கொண்டேயிருந்தேன். தொடர்ந்து சங்கீதம் படிக்க வாப்பாவிடம் அனுமதி கேட்டுக்கொண்டிருந்தேன். அவர், “நீ தலைகீழாக நின்றாலும் சரி, சித்திரப் பாடம்தான் எடுக்கவேணும், சங்கீதம் படிப்பது ஹறாம்” என்றார். அவர் ஒவ்வொரு முறையும் அழுத்திச் சொல்லும்போது, அப்பளிங்கு மாளிகைகள் தனித்து அழுதுகொண்டிருக்கின்ற சிறகு உடைக்கப்பட்ட தேவதையின்மீது உடைந்து விழுவதாகக் கனவு வரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick