கவிதையின் கையசைப்பு - 8 - ஒரு சொல், இன்னொரு சொல்லை அழைக்கிறது

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
எஸ்.ராமகிருஷ்ணன்

‘இரண்டு வார்த்தைகளுக்கு இடையிலுள்ள நிசப்தம் ஒருபோதும் ஒன்று போலிருப்பதில்லை’ என ராபர்டோ ஜுரெரோஸின் ஒரு கவிதை வரி தொடங்குகிறது. இதை வாசித்தவுடன் மனம் திகைத்துவிடுகிறது. அற்புதம் என வியப்புறும் அதே தருணத்தில் இரண்டு வார்த்தைகளின் இடையிலுள்ள மௌனம் ஒன்றுபோலானது என ஏன் நினைத்துக் கொண்டேன் என்ற சுயவிசாரணையும் தொடங்குகிறது. ஊதுவத்தியின் புகை, அறை முழுவதும் நிரம்புவதுபோலக் கவிதை, மனம் முழுவதும் நிரம்பத் தொடங்குகிறது. பின்பு, ஊதுவத்தி எரிந்து அடங்கினாலும், வாசனை அடங்காதது போலக் கவிதையின் வாசனை மனதை ஆக்கிரமித்துக்கொண்டே யிருக்கிறது. அதுதான் உயர்வான கவிதையின் அடையாளம்.

வார்த்தைகளைப் பொருள் சார்ந்து மட்டுமே நாம் அணுகும்போது, ராபர்டோ அதை நிசப்தம் சார்ந்து அணுகுகிறார். அத்துடன் இரண்டு வார்த்தைகளுக்கு இடையேயுள்ள நிசப்தம் எவ்வளவு பெரியது. எவ்வளவு ஆழமானது என விசாரணை செய்கிறார். உண்மையில் இரண்டு சொற்களும் நிசப்தம் வழியாகவே ஒன்று சேர்ந்திருப்பதன் பிணைப்பை அடையாளம் காட்டுகிறார்.

ஒரே நிசப்தம்தான் உலகெங்குமிருக்கிறது என்பதற்கு மாற்றாக, பல்வகை நிசப்தங்களை அறிமுகம் செய்துவைக்கிறார் ராபர்டோ. திடீரென நாம் நிசப்தம் என்பதன் மாறுபட்ட நிலைகளை, ஆழங்களை அறியத் தொடங்குகிறோம். நீர்க்குமிழி ஒன்று காற்றில் பறப்பதைப்போல நிசப்தம் பறக்கத் தொடங்குகிறது. இதே கவிதையின் இன்னொரு வரியில், ‘நிசப்தத்திற்கும் ஓர் அரிச்சுவடி இருக்கிறது. அதன் வரிசைகளை நாம் கற்கவில்லை’ என்று குறிப்பிடுகிறார். அத்துடன் நிசப்தத்தை எப்படி வாசிப்பது என்றும் கேள்வி எழுப்புகிறார்.

சப்தம், நிசப்தம் என்பதை ஒன்றின் எதிர்நிலை மற்றொன்று என்றே நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் கவிஞர், ‘இரண்டும் தனிப்பட்ட நிலைகள். சப்தம்போலவே நிசப்தமும் தனித்துவமானது. நாம் சப்த உலகிற்குப் பழகியிருக்கிறோம். ஆனால், நிசப்த உலகிற்குப் பழகவில்லை’ என்றே கூறுகிறார்.

பௌத்த சமயம், நிசப்தம் குறித்து விரிவாக ஆராய்ந்திருக்கிறது. நிசப்தத்தில் எப்படி ஆழ்ந்திருப்பது என்று கற்றுத் தருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick