அடுத்து என்ன? - வாசு முருகவேல் - என் பெயர் அகதி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வாசு முருகவேல்

ன்னை அகதியாக்கிய காலமே, எழுத்தாளனாகவும் ஆக்கியிருக்கிறது. நாட்டைப் பிரிந்து உழலும் வேதனையில் என் சொற்கள் தத்தளிக்கின்றன. ஆதலால், எழுதிக் கடக்கும் வாழ்வைத் தொடங்கியிருக்கிறேன். சமூகம் குறித்து அவதானிக்கும் என்னுடைய பண்பானது, சிறிய வயது முதல் பழக்கத்திலிருக்கிறது. எனது பன்னிரண்டாவது வயதிலேயே நாளிதழ்களைப் புரட்டத் தொடங்கியிருந்தேன். தந்தையார் எனக்கு நாளிதழ்களின் மூலம் அரசியலைத் தெரியப்படுத்தினார். ஒருவகையில் அனைத்தின் தொடக்கமும் அதுதான்.

நான் ஈழத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு அகதியாகப் புகுந்த காலம் மிகவும் வித்தியாசமானது. ஈழம் குறித்த உரையாடல்கள் பெருமளவில் அப்போது நடைபெறவில்லை. ஈழப் பிரச்னை சார்ந்து தமிழ்நாட்டில் ஏற்பட்ட மௌனம் இன்னும் புரியப்படாதது.

நோர்வே மத்தியஸ்தம் வகித்த சமாதான காலகட்டத்தில், போர் மேகங்கள் கலைந்திருந்தது ஈழம். போருக்கு முந்தைய அமைதி, இளைப்பாறும் நிழலை உலகெங்கும் வாழும் தமிழீழர்களுக்கு வழங்கியது. அன்றைய காலகட்டத்தில் தமிழகத்திலிருந்து பலர் ஈழத்திற்குப் போவதும் வருவதும் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஈழத்தமிழர்கள் இந்தியாவிற்கு ஆன்மிகச் சுற்றுலா வந்தார்கள்; ஈழத்திற்கும் சென்றார்கள். ஆனால், பெருமளவிலானவர்களின் எண்ணம் தாயகத்திற்குச் செல்வதுபோல அமையவில்லை. அதையும் சுற்றுலாபோலவே எண்ணினார்கள்.

ஈழத்தமிழர் குறித்த நேரடியான பிம்பங்களாக வெளிநாட்டிலிருந்து வந்திருந்த இவர்கள்தான் தமிழகத்தில் தென்பட்டார்கள். எப்போதும்போலத் தமிழகத்தின் அகதிகள் முகாம்களில் குடிநீருக்குக்கூட வசதியற்று வாழும் ஈழத்தமிழ் அகதிகள் எவரின் கண்களுக்கும் தெரியவில்லை. ஒருவகையில் நானும் ஒருவனாக அதில் கலந்திருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick