தடை மற்றும் தணிக்கை எனும் கருத்தாக்கம்

ஜமாலன் , படங்கள் : ஸ்ரீதர் பாலசுப்ரமணியம்

னிதகுலம், நாகரிகம் எனும் `ஏதேன்’ தோட்டத்தில் வாழ சபிக்கப்பட்டுள்ளது.  `நாகரிகம்’ என்ற கருத்தாக்கத்தை அகழ்ந்தால், தடை மற்றும் தணிக்கை என்கிற இரண்டு கருத்தாக்கங்களைப் பெறலாம். காரணம், தடை மற்றும் தணிக்கைகள் வழியாகக் கட்டப்பட்டதே நாகரிகம். தடை செய்யப்பட்டதும், தணிக்கை செய்யப்பட்டதும், விலக்கப்பட்டதுமான சமூக அமைப்பால் அனுமதிக்கப்பட்ட ஒன்றில்தான் நமது வாழ்க்கை இருத்தப்பட்டுள்ளது. இதை வேறுவிதமாகக் கூறினால், சமூகம் தடைகள் மூலமே ஓர் அனுமதிக்கப்பட்ட வாழ்வெளியாக உள்ளது. சமூகம் என்ற நமது புழங்குவெளியே, தடை செய்யப்பட்ட, தணிக்கை செய்யப்பட்ட ஓர் ஒழுங்குமுறைக்கு உட்பட்டதே. தடை மற்றும் தணிக்கை என்ற செயல்பாடுகளைக் கட்டுடைத்தால், உள்ளிருப்பது சமூக ஒழுங்கு என்கிற விதிமுறைகளே.

இவ்வுலகு, தடைகளால் நாகரிக சமூகமாக மாறிய கதை, மனிதகுலத் தோற்றத்துடன் உறவுகொண்ட இரண்டு எடுத்துரைப்புகளால் (Narration) அறியப்படுகிறது. ஒன்று, மதங்களின் எடுத்துரைப்பான மனிதத் தோற்றம். இது `செமட்டி’-க் மதங்கள் எனப்படும் யூத-கிறித்துவ-இஸ்லாமிய மதங்களான ஆபிராகமின் வழிவந்த மதங்கள். இவை முன்வைப்பது நாம் வழக்கமாக அறிந்த இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதர்களான ஆதாம், ஏவாள் கதை.   ஏதேன் தோட்டத்தில் இறைவன் ஒரு குறிப்பிட்ட கனியை உண்ண தடை விதிக்கிறான். ஆனால், சாத்தானின் தூண்டுதலால் ஏவாள் தடை செய்யப்பட்ட அக்கனியை உண்கிறாள். இறைவன் அவர்களைச் சபிக்கிறான். அவர்கள் இப்புவியில் அறிவைப் பெற்று, உழைத்தும் களைத்தும் சந்ததிகளைப் பெருக்கியும் வாழ்வதற்காகச் சபிக்கப்படுகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick