கலகமும் காமமும் தடை தாண்டும்

யமுனா ராஜேந்திரன்

ப்பானிய இயக்குநர் நகிசா ஒசிமா ‘உணர்ச்சிகளின் சாம்ராஜ்யம்’ எனப் பொருள்தரும்  ‘The Realm of the senses (1976)’ என்ற தலைப்பிலான  ஒரு படம் எடுத்தார். இயற்கையான பாலுறவை அதன் அத்தனை உக்கிரங்களுடனும் காட்சிப்படுத்திய படம் அது. திருமணமான ஓர் ஆணின்மீது காதல்கொண்ட ஒரு பெண், அவன் தனது மனைவியிடம் திரும்பிப் போகப்போகிறான் என்பதை உணர்ந்து, அவனது ‘சாமானை’க் கத்தியால் அறுத்துத் தன்னுடன் வைத்துக்கொண்டு, நாள்கணக்கில் அறைக்குள் அடைந்துகிடக்கிறாள். பின், டோக்கியோ நகரின் தெருக்களில் அலைந்து திரியும் ஒரு பெண் குறித்த சித்திரம் இப்படம்.

இது ஒரு நிஜ நிகழ்வின் அடிப்படையிலான படம். இப்படத்தின் ஒரு காட்சியில், வேகவைத்த முட்டையைத் தனது புழைக்குள் செலுத்தி, பின் வெளியிலெடுத்துத் தன் காதலனை ருசித்து உண்ணச் செய்வாள் காதலி. இப்படம் ஜப்பானில் உடனடியாகத் தடைசெய்யப்பட்டது. கலைகளின் தாயகமான பாரீசில் இப்படம் கொட்டகை நிறைந்தபடி ஓடியது. இப்படத்தைப் பார்க்கவெனவே ஜப்பானியர்கள் மூட்டைகட்டிக்கொண்டு விமானமேறி பாரீஸ் வந்து பார்த்துவிட்டுச் சென்றனர்.

ஒசிமாவின் படத்தின் அளவே மேற்கத்திய நாடுகளில் அதிர்வை உண்டாக்கிய இன்னொரு திரைப்படம், இத்தாலிய இயக்குநரான பெர்னார்டோ பெர்ட்டுலூசியின் ‘த லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ் (The Last tango in Paris (1972)’. அமெரிக்காவிலும் இத்தாலியிலும் இப்படம் தடைசெய்யப்பட்டது. யதேச்சையாகச் சந்திக்க நேரும் அந்நியர்களான மத்தியதர வயது ஆண், இளம் பெண் என இருவருக்கும் இடையில் பெருகும் விட்டுவிலகிய,  கட்டற்ற காமத்தை முன்வைத்த படம் இது. குதத்தில் பாலாடைக் கட்டியைத் தேய்த்து, பலவந்தமாக இளம்பெண்ணுடன் உறவுகொள்ளும் ஆணின் வன்முறையை இப்படம் காட்சியாகக் கொண்டிருந்தது.

இத்தாலிய சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநரான குசிப்பி தொர்னதோரின் ‘சினிமா பாரடைசோ (Cinema paradiso (1988)’ படத்தில் ஒரு காட்சி வரும். சினிமாக் கொட்டகையில் படம் வெகுமக்களுக்குப் போடப்படும் முன்னால், கையில் வெண்கல மணியுடன் ஒரு பாதிரியார் வந்து அமர்வார். படத்தில் எங்கெல்லாம் முத்தமும் ஆண் - பெண் கட்டிப்பிடிக்கும் காட்சியும் மார்பு விளிம்பு தெரியும் காட்சியும் வருகிறதோ, அப்போதெல்லாம் எரிச்சலுடனும் சலிப்புடனும் முகத்தை அஷ்டகோணலாக வைத்துக்கொண்டு, பாதிரியார் விசிறி விசிறி மணியாட்டுவார். மணியடிக்கப்பட்ட அந்தக் காட்சிகள் எல்லாம் படச்சுருளின் இடையில் காகித அடையாளம் வைக்கப்பட்டு, பின்னர் கத்திரியால் வெட்டி எடுக்கப்படும். இப்படி வெட்டியது போக மிஞ்சிய படத்தைத்தான் அந்த நாட்டின் மக்கள் பார்க்க வேண்டும். திரைத் தணிக்கையின் ஆதி வடிவம் என்பது இப்படித்தான் கிறித்தவக் கத்தோலிக்கத் திருச்சபையினால் ஐரோப்பாவில் கட்டுப்படுத்தப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick