தடை செய்யப்பட்ட தமிழ் நூல்கள்

வீ.அரசு படங்கள் : எஸ்.தேவராஜ்

ச்சு ஊடகம் நடைமுறைக்கு வந்த காலம் முதல், ஒரு குறிப்பிட்ட கருத்திற்கு எதிராகக் கண்டன நூல் எழுதும் மரபு தமிழில் உருவானது. ஆனால், அரசு அதிகாரத்தின்கீழ் அச்சு ஊடகம் வந்த பிறகு, அரசுக்கு எதிராக எழுதப்படும் புத்தக வடிவிலான எழுத்துகளைத் தடைசெய்யும் வழக்கம் உருவாயிற்று.  தடைசெய்வதில் பல அடிப்படையான அம்சங்கள் உள்ளன- ஆளும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகள் என்று கருதித் தடைசெய்வது, ஒரு குறிப்பிட்ட சமயப் பிரிவினருக்கு உகந்ததாக இல்லை என்று தடைசெய்வது, ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவுபடுத்துகிறது என்ற நோக்கில் தடைசெய்வது, குறப்பிட்ட தேசிய இனத்தைத் தவறாக விமர்சிப்பது என்று தடைசெய்வது, மிகப் புகழ்வாய்ந்த ஆளுமைகள் குறித்துத் தவறான சித்திரிப்புகளை மேற்கொண்டிருப்பதாகக் கருதித் தடைசெய்வது, ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக எழுதுவது என்று தடைசெய்வது என்று இது நீள்கிறது.

  இருபதாம் நூற்றாண்டில், பாரதி எழுத்துகளுக்கே முதன்முதலில் தடைவிதிக்கப்பட்டது. டிசம்பர் 6, 1911-ல், பாரதியின் ‘ஆறில் ஒரு பங்கு’ எனும் நூலுக்குத் தடைவிதிக்கப்பட்டது. இந்த நூலில், சாதிப் பிரிவுகளுக்கு எதிராகவும் சமய முரண்பாடுகள் குறித்தும் பாரதி எழுதினார். ‘ஒரு ஜாதி ஓர் உயிர்; பாரத நாட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு ஜாதி. வகுப்புகள் இருக்கலாம்; பிரிவுகள் இருக்கலாகாது. வெவ்வேறு தொழில் புரியலாம்; பிறவி மாத்திரத்தாலே உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கூடாது.  மத பேதங்கள் இருக்கலாம்; மத விரோதங்கள் இருக்கலாகாது.” இந்தச் சிறிய நூலில் பாரதி பிரம்ம சமாஜத்தில் ஈடுபாடுகொண்ட இளைஞனைப் பற்றிப் பேசுகிறார். அவ்விளைஞன்மூலம் மடாதிபதிகள், சன்னிதானங்கள் ஆகியோரை விமர்சனம் செய்கிறார். ‘நம்மில் ஆறில் ஒரு பங்கு ஜனங்களை நாம் தீண்டாத ஜாதியாக வைத்திருப்போமானால், நமக்கு ஈசன் நல்ல கதி கொடுப்பாரா?’ என்று கேட்கிறார் பாரதி. ‘ஜாதிக் கொள்கை வேரூன்றிக் கிடக்கும் நாட்டில், மனுஷ்ய ஸ்வதந்திரம், ஸமத்துவம், ஸஹோதரத்துவம் எனும் கொள்கைகளை நிலை நிறுத்துவது என்றால் அது ஸாதாரண வேலையா?’ என்றும் இந்தப் புத்தகத்தில் பாரதி பேசுகிறார்.   ‘எல்லா வகுப்பு மக்களுக்கும் சரியானபடி படிப்பு சொல்லிக் கொடுத்தால், எல்லோரும் ஸமான அறிவுடையோராய் விடுவார்கள்’ என்றும் பாரதி கூறுகிறார். பாரதி பேசியுள்ள கருத்துகள் தடைசெய்யும் அளவுக்கு தவறானதாகப் படவில்லை. ஆனால், பாரதியின் எழுத்துகளை மொழிபெயர்த்து, பிரித்தானியருக்குக் கொடுத்தவர்கள் இந்தக் கருத்துகளுக்கு உடன்பாடு இல்லாதவர்களாக இருந்திருக்க வேண்டும். பிரித்தானிய அரசுக்கு எதிராகச் செயல்பட்ட பாரதியைக் கண்டிக்க இது ஒரு சாக்காயிற்று.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick