மனுவின் மெனு

படங்கள் : ஸ்ரீதர் பாலசுப்ரமணியம்

‘இதுவரையிலான சமுதாயம் அனைத்தின் வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே’ என்கிறது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. ‘இந்தியாவைப் பொறுத்தவரை, அப்போராட்டம் பௌத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையிலான போராட்டமாக நடக்கிறது’ என்பார் அண்ணல் அம்பேத்கர். இந்தப் போராட்டத்தின் தொடக்கமும் முடிவும், இந்தியாவின் பூர்வகுடிகளாகிய நாகர்களுடன் கலந்துருவாகி நிலைகொண்ட திராவிட நாகரிகத்திற்கும் வேதவழிப்பட்ட ஆரிய நாகரிகத்திற்கும் இடையிலான போராட்டத்தில் இருக்கிறது. கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் தேடி இந்தியப் பரப்பிற்குள் வந்த ஆரியர்கள், தம்மையும் வேதத்தின் முதன்மையை ஏற்றுக்கொண்டவர்களையும் உள்ளடக்கி, தம்மவர்களை நால்வர்ணங்களாகப் பிரித்துக்கொண்டார்கள். இவர்களை ‘வர்ண பாஹ்யர்கள்’ என்றும் கூறிக்கொண்டனர். (வர்ணபாஹ்யம் பெண்களுக்கு இல்லை.) வேதத்தை ஏற்காதவர்களும் பூர்வகுடிகளும் ஐந்தாம் வர்ணத்தவரல்ல, அவர்கள் அவர்ணர்கள்.

குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு, ஒருவர் இன்னொரு வர்ணத்திற்கு மாறிச்செல்லும் விதமானதாக நெகிழ்வுத்தன்மையுடன் இந்த வர்ணப் பிரிவினை இருந்தபோதிலும், குறிப்பிட்ட வர்ணத்தில் இருக்கும்போது, அவ்வர்ணத்திற்குரிய கடமைகளுக்கும் உரிமைகளுக்கும் கட்டுப்பட வேண்டியவராயிருந்தார். வர்ண பாஹ்யர்களின் ஒவ்வொரு பிரிவுக்குமான கடமைகளும் உரிமைகளும் பாரபட்சமானவை என்பதோடு, வர்ணக்கலப்பு நடந்துவிடாமல் தடுப்பதை நோக்கமாகவும் கொண்டவை. வர்ணத்தவர்களுக்குள்ளும், வர்ணத்தவருக்கும் அவர்ணத்தவருக்கும் இடையேயும் கலப்பு நடந்துவிடக் கூடாது என்பதற்காக, ஆரியர்கள் உருவாக்கிய தடைகள்தாம் இன்றளவும் இந்தியச்
சமூகத்தில் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறன்றன. இத்தடைகள், வர்ணங்கள் சாதியாக மாறிய காலகட்டத்தில், சாதியின் தூய்மையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக மேலும் இறுக்கமடைந்து, கலந்து உண்பதையும் புறமண முறையையும் தடுப்பதற்கானவை என்றாகின.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick