சுதந்திரனாய் வாழ்ந்த கலகக்காரர்!

இந்திரன்

“எப்படி வாழ வேண்டும் என்பதைத்தான் நான் கற்றுக்கொண்டு வருகிறேன் என்று நினைத்தேன். இப்போதுதான் தெரிகிறது நான் எப்படிச் சாக வேண்டும் என்பதைத்தான் இத்தனை காலமும் கற்று வந்திருக்கிறேன்.” -  லியோனார்டோ டாவின்ஸி

செத்துப்போனவர்கள் வசதியான வீரர்கள், அவர்களைப் பற்றி நாம் ஜோடித்துக் காட்டும் பொய்களை மறுப்பதற்காக அவர்கள் தங்கள் கல்லறையிலிருந்து எழுந்து வரப்போவதில்லை. எனவே, நாம் நமது மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நிம்மதியாக நம் குழந்தைகளுக்குப் போதிக்கலாம், ‘அவர் மிகப்பெரிய மனிதர்’ என்று.

பிரபஞ்சன் என்ற எழுத்தாளரைப் பற்றி நினைத்துப் பார்க்கிறபோது, அவரது மிகப்பெரிய சாதனை என்று நான் கருதுவது, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்ப் படித்த வைத்தியலிங்கம் சாரங்கபாணி, ‘பிரபஞ்சன்’ என்று கொண்டாடப்படும் ஒரு நிஜ எழுத்தாளராக மலர்ந்ததுதான்.

உண்மைதான். அவரை நான் முதன் முதலாக சந்தித்தது, 1983-ல் பாண்டிச்சேரியில் பாரதி வீதியிலிருந்த ‘பாரதி டுடோரியல்ஸ்’ எனும் நிறுவனத்தில் மக்குப் பையன்களுக்கும், பெண்களுக்கும் தமிழ்ப்பாடம் கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்த ஓர் ஆசிரியராகத்தான்.

மிருதுவாகப் பேசும் மனிதர் அவர். நடப்பதுகூட எங்கே கொஞ்சம் அழுந்தி நடந்தால் பூமிக்கு வலித்துவிடுமோ எட்டுவைப்பவர். பாண்டிச்சேரியில் கள்ளுக்கடை வைத்திருந்த ஒருவருக்கு மகனாகப் பிறந்த இவர், ஒரு முழுநேர எழுத்தாளராக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு, தனது 73 வது வயது வரை எழுத்தைத் தன் வாழ்க்கையாக வைத்திருந்தவர். பிரமிளா ராணி என்பவரை மணம்புரிந்து மூன்று மகன்களைப் பெற்ற பிரபஞ்சன் குடும்பம், பதவி, பணம், சொத்து என்று அதிகம் கவலைப்பட்டதில்லை. ‘பிரபஞ்ச கவி’ என்று கவிதையில் தொடங்கிய இவரது வாழ்க்கை, ‘பிரபஞ்சன்’ என்று சுருங்கிய வடிவத்தில் புனைகதை உலகிற்கு வந்து பரவலான கவனம் ஈர்ப்பதாக மாறியது. தனது 50 வயதிலேயே ‘சாகித்ய அகாதமி’ விருதினை ‘வானம் வசப்படும்’ எனும் தனது நூலுக்காகப் பெற்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick