எஸ்.ராமகிருஷ்ணனின் இரவும் பகலும்

வரை விதைபோல இரண்டு பகுதிகளால் ஆனது பழைய நெல்லை அல்லது பண்பாட்டு நெல்லை. இப்போது பல மாவட்டங்களாக ஆனாலும்கூட    “நமக்கு திருநவேலிப் பக்கம் சார்” என்றுதான் பழைய நெல்லைக்காரர்கள் சொல்வார்கள். ஆனால் நெல்லையை அறிந்த எவரும், தங்களை நெல்லைப் பகுதியைச் சேர்ந்தவர் என ஒருவர் சொல்லிக்கேட்டால், “எந்தப் பக்கமா?” என்று கேட்பார்கள். ஏனென்றால்,  ‘நெல்லை’யில் இரண்டு உண்டு. தாமிரவருணி நனைத்துச் செல்லும் ஒரு நெல்லை, வானம்பார்த்த இன்னொரு நெல்லை.

ஈரமான, பசுமையான நெல்லை, நாம் நெல்லைக்குரியதென இன்று சொல்லும் அத்தனை தொல்பண்பாடுகளுக்கும் விளைநிலம். தாமிரவருணியின் இருமருங்கிலும் சைவப் பேராலயங்களும் வைணவப் பேராலயங்களும் நிரைவகுத்திருக்கின்றன. பசுமை அலையடிக்கும் வயல்வெளிகள். கோட்டை வீடுகள், நிரைந்த பெரிய தெருக்கள் கொண்ட வீடுகள். இன்றும் சாலைகளின் ஓரங்களில் கான்கிரீட் தூண்கள்போல் எழுந்து நிற்கும் நீர்மருத மரங்களின் திமிர்ப்பு அந்நெல்லையின் அடையாளம்.

சாதாரண பேருந்துப் பயணத்திலேயே கொஞ்சம் கண்ணசந்து விழித்தால், பசுமையான நெல்லையிலிருந்து வறண்டநெல்லைக்குள் நுழைந்துவிட்டிருப்போம். உடைமுட்களில்கூடப் பச்சை இல்லாத புகைந்த மண். தொலைவில் வான்கோடு வில்போல் வளைந்து எல்லையிட்டிருக்கும் விரிநிலம். தேவதச்சனின் சொல்லில் ‘அத்துவான வெளி’. கைவிடப்பட்ட கமலைக் கிணறுகள். வேளாண்மை நின்றுவிட்ட வெறித்த வயல்கள். பச்சையே இல்லாத மண்ணில் எதை அப்படி அவசரமாக மேய்கின்றன என வியக்கச்செய்யும் ஆட்டு மந்தைகள். அப்பால், வளைகம்புடன் காலமற்ற நிழலில் கண்மயங்கும் இடையன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick