முழுமதி

குட்டி ரேவதி, ஓவியங்கள் : செந்தில்

முழுமதி,தனக்கு இரண்டு தலைகள் இருப்பதை அன்றுதான் உணர்ந்தாள். எல்லோருக்கும் அதுபோலத்தான் இருக்கும் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். பகலில் ஒரு தலையுடனும் இரவில் வேறு தலையுடனும்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்று அவள் நம்பிக்கொண்டிருந்தாள். இரவிற்குள், இருளில் கலந்துபோகையில் அவள் தலையும் அது சிந்திக்கும் விதமும் மாறிப்போயிருப்பதை உணர்ந்தபோது, விசித்திரமான கிளர்ச்சி தோன்றியது. ஓடிச்சென்று கண்ணாடியின் முன்னின்று பார்த்தாள். கண்ணாடியில் உருவம் தெரியவில்லை, விளக்கைப் போட்டாள். விளக்கின் வெளிச்சம் பரவியதும் பகலின் உணர்வு ஏற்பட்டு, பகலுக்கான தலை அவள் உடல்மீது ஏறியிருந்தது. பதினைந்து ஆண்டுகளாய் இரண்டு தலைகளுடன் வாழ்ந்த அதிசயத்தை மனதில் ஓட்டிப்பார்த்தாள்.

இரவில் தலை அப்பொழுதுதான் மலர்ந்திருந்த மலரைப்போல லகுவாகவும் கற்பனைகளுக்கு இடமாயும் இருந்தது. மதிக்கு எதுவுமே உண்மையாக நிகழ வேண்டாம். நிகழ்ந்ததுபோன்ற கற்பனையை மனதில் நிகழ்த்திப் பார்த்து உணர்ந்து இன்புற அல்லது துக்கிக்க முடியும். ஒருவகையில் எல்லா மனிதர்களும் அப்படித்தான் என்று நினைத்திருந்தாள். இரவின் தலைக்குக் கற்பனை செய்யும் சக்தியும் திறனும் இயல்பாகவே இருக்கிறது என்று எண்ணியிருந்தாள். மதியின் தலைக்கு மட்டும்தான் அப்படி. ஏன் இப்படித் தனக்கு மட்டும் இரண்டு தலைகள்? பிரசவப் பிழையா? உடலுறுப்புக் குறையா? குறை இல்லை, மிகை.

அம்மாவும் அப்பாவும் அவள் கருவுற்றிருக்கும்போதே சண்டை ஏற்பட்டுப் பிரிந்துவிட்டார்கள். கணவரைப் பிரிந்து வந்து ஒரு பெரிய பங்களாவில் தனியாக வாழ்ந்து வந்த முதிய பெண்ணான எஸ்தர் வில்லியம்சுக்குச் செயலாளராகப் பணியாற்றினாள் அம்மா அருண்மொழி. பங்களாவை ஒட்டியிருந்த குடியிருப்பிலேயே அருண்மொழி குழந்தையுடன் தங்கியிருந்தாள். குடியிருப்பு என்றாலும் பங்களாவின் அத்தனை வசதிகளுடன் இருந்தது. நாற்காலிகள், கண்ணாடிகள், படுக்கைகள், மெத்தைகள், பாத்திரங்கள் எல்லாம் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்பதால், அருண்மொழி தங்கியிருந்த குடியிருப்புகளிலும் போடப்பட்டிருந்தன. சூழல் வசதியான சூழல், பங்களாவை ஒட்டிய ஒரு பெரிய மலையும் அதன் அடிவாரப் புனைவுகளும் அருண்மொழிக்கும் முழுமதிக்கும் வந்து சேர்ந்துகொண்டே இருந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick