அடுத்து என்ன? - மொழியோடு வலியையும் சேர்த்தே பெயர்க்கிறேன் | Anuradha Anand talks about her translation work in Literature - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

அடுத்து என்ன? - மொழியோடு வலியையும் சேர்த்தே பெயர்க்கிறேன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

அனுராதா ஆனந்த், படம் : அருண் ஏ துரை

ல்லாப்  பருவங்களிலும் இடங்களிலும் சூழலிலும் என்னைவிட்டு அகலாமல், கூடவே தொடர்ந்து வரும் பழக்கம் வாசிப்பு மட்டும்தான். கடக்கவியலா பொழுதுகளைக் கடக்க அல்லது அதிலிருந்து  தற்காலிகமாக வேணும் தப்பிக்க, குலைந்த சமநிலைகளை மீட்டெடுக்க, தக்கவைக்க வாசிப்பே எனக்குத் துணையாயிருக்கிறது.  வாழ்வின் துடுப்பாகவும் இருக்கிறது. நாம் எல்லோரும் வார்த்தைகளால் ஆனவர்கள்தானே.

“நாம் வார்த்தைகளுக்கு வெகுமுன்பே தொடங்கியவர்கள்; வார்த்தைகளைக் கடந்தும் தாண்டியும்தான் முடிக்கப் போகிறவர்கள்; நம் நாள்கள் வார்த்தைகளின் விஷமேறியவை; நாம் உண்மையாகச் சொன்னவை, நம்பாமல் சொன்னவை, உணர்ச்சிகளிலிருந்து விவாகரத்தானவை, காயப்படுத்தும் வார்த்தைகள், மறைக்கும் வார்த்தைகள், குறைக்கும் வார்த்தைகள்... இறந்த வார்த்தைகள் எல்லாமுமே” என்கிறார் பென் ஓக்ரீ (Ben Okri).

தொடக்கக் காலங்களில் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் வாசித்தேன். அரிதாகத் தமிழில் வாசிக்கும் பழக்கம் தொடங்கி, இப்போது ஆங்கிலத்திலும் தமிழிலுமாகச் சமஅளவில் உள்ளது. ஆங்கிலத்தில் எந்தப் படைப்பை வாசித்தாலும் ஆழ்மன ஓட்டத்தில் எப்போதும் அதன் தமிழ்  மொழியாக்கம் மனதிற்குள் எங்கோ  ஓடிக்கொண்டேயிருக்கும். பலமுறை அதை நான் உணர்ந்திருக்கிறேன். அதுவும் என்னை மிகவும் பாதித்த பிரதியெனில், அதன் தமிழாக்கம் உடனே மனதில் தோன்றி, கூடவே வரும். அப்படி என்னிடம் மொழிபெயர்ப்பைக் கோரிய பிரதிகளை முதலில் கையில் எடுத்தேன். அவை பெரும்பாலும் கவிதைகளாகவே இருந்தன. அதை எழுதத் தொடங்கி, செம்மைப் படுத்தும்போது மனதிற்கு மகிழ்ச்சியாகவும் பிடித்த காரியத்தைச் செய்ததுபோலவும் ஒரு நிம்மதியிருந்தது.

மொழிபெயர்ப்புப் படைப்புகளை  வாசிக்கும்போது, நமக்குக் கிடைப்பது முற்றிலும் புதிய அனுபவங்கள், புதிய  காட்சிப் பதிவுகள், புதிய நிலப்பரப்பு, புதிய வாழ்வியல் முறைகள், புதிய படிமங்கள், புதிய வடிவங்கள், புதிய சொல்லாடல்கள், புதிய கூறல்முறைகள், புதிய அதிர்வுகள்... எனவே, புதிய தேடல்களை அவை நமக்கு ஏற்படுத்தித் தருகின்றன.

நான் வாசித்துணர்ந்த சில பிறமொழிப் படைப்புகளை நம்மவர்களிடம் அறிமுகப் படுத்துவதுதான் முக்கிய நோக்கம். ஒரு கலைப்படைப்பை அனுபவிக்க, மொழி தடையாக இருக்கக் கூடாது அல்லவா? அதனால், மொழிபெயர்ப்புப் பணியை விரும்பிச் செய்கிறேன்.

பிற மொழிகளின் சமகால எழுத்தைச் சமகாலத்திலேயே வாசிக்கும் அனுபவம் என்பது, முற்றிலும் வேறான ஆழமான தாக்கத்தை வாசகனுக்குத் தரவல்லது. வறட்சியான அன்றாடச் செய்திகளைக் காட்டிலும், ஒரு நிலத்தின் அரசியலை வெகு தெளிவாகவும் சரியான நோக்கிலும் கடத்தவல்லது புனைவுகளே. அதனால்தான், தற்காலப் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்கத் தொடங்கினேன். தொடக்கத்தில் ஆங்கிலக் கவிதைகளை மட்டுமே  மொழிபெயர்த்தேன். இப்போது, தற்கால ஆங்கிலச் சிறுகதைகளையும் மொழிபெயர்த்துவருகிறேன். சில அபுனைவுகளையும் மொழிபெயர்க்கும் எண்ணம் உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க