முதன் முதலாக: வீடு திரும்புதல் | Interview with DeepaSelvan - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

முதன் முதலாக: வீடு திரும்புதல்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

தீபச்செல்வன், படம் : ஈழவாணி

ரண்டாயிரமாம் ஆண்டு. அப்போது, இடம்பெயர்ந்து கந்தபுரம் என்ற ஊரில் வசித்துக்கொண்டிருந்தோம். போர்க்களத்தில் போராளிகளுக்கு உதவுவதற்கு ஒவ்வொரு கிராமமாக மக்கள் செல்வது வழக்கமானது. பதுங்குகுழி அமைத்தல், உணவு சமைத்தல் போன்ற உதவிகள், ஒத்தாசைகளைச் செய்வதற்காகச் செல்வதுண்டு. அப்படிச் செல்பவர்கள் சண்டைகளில் சிக்கி இறப்பதும் உண்டு. பின்னர், அவர்கள் எல்லைப்படை வீரர்களாகப் புலிகளால் கௌரவிக்கப் படுவார்கள். அப்போது, எங்கள் ஊரில் இருந்தும் பலர் போர்க்களத்திற்குப் புறப்பட்டார்கள். எனக்கு அப்போது 17 வயது, இதனால் அனுமதி மறுக்கப்பட்டது. நானும் என்னுடைய நண்பன் ஒருவனும் எப்படியோ அந்தக் குழுவில் புகுந்து லாரிக்குள் ஏறிக்கொண்டோம்.

என் சகோதரன் இயக்கத்தில் இருப்பதால் அவனைப் பார்க்கலாம் என்பதற்காகவுமே புறப்பட்டேன். அப்போது, ஆனையிறவை புலிகள் இயக்கம் கைப்பற்றத் தயாராகியிருந்த நாள்கள். பூநகரி, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. யாழ்ப்பாணம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. பூநகரியின் கௌதாரி முனை என்ற பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய முகாம்கள் இருந்தன. கௌதாரிமுனை மிகுந்த முக்கியமான மையமாகச் செயற்பட்டது. அங்கு சண்டைகள் மூள்வதுடன், யாழ்ப்பாணத்திலிருந்தும் ராணுவத்தினர் பீரங்கித் தாக்குதல்களை நடத்துவதுண்டு. என்றாலும், கௌதாரிமுனை ஊடாகப் புலிகள் யாழ்ப்பாணத்துக்கும் ரகசியமாக ஊடுருவி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.

கந்தபுரத்திலிருந்து புறப்பட்ட, மக்களை ஏற்றிய லாரி, பூநகரி நோக்கி விரைந்தது. பூநகரி, மக்கள் யாருமற்று பாழடைந்து காணப்பட்டது. பழைமையான அந்த நகரத்தின் கடைத்தெருக்கள் எல்லாம் பற்றை மண்டியிருந்தது. எங்கு பார்த்தாலும் உருக்குலைந்த மண்மேடுகளும் ராணுவ முகாம்களுமாய் ஆளரவமற்றிருந்தது. நெடுங்காலம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து. 1993-ல் புலிகளால் கைப்பற்றப்பட்டபோதும், 1996-ல் கிளிநொச்சியின் ராணுவத்திடம் வீழ்ந்த பின்னரும்  யாழ்ப்பாணம், ஆனையிறவில் நிலைகொண்ட ராணுவத்தினரால் அங்கு மக்கள் வாழ முடியாத நிலை நீடித்தது.

அங்கு நேற்றும் கடுமையான சண்டை மூண்டதென லாரியில் இருந்தவர்கள் பேசிக்கொண்டனர். அண்ணா, அங்கே நிற்கக்கூடும் அல்லது அவனைப் பற்றிய தகவல்கள் எதையாவது பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையோடு சென்றேன். போராளிகள், எல்லைகளில் காவல் இருந்தனர். போராளிகளின் முன்னரங்குகளும் தெரிந்தன. எதிர்த்திசையில் ராணுவத்தினரின் காவலரண்களும் நடமாட்டங்களும் தெரியும். திடீரென விமானங்கள் வந்து தாக்கும். ராணுவத்தினரின் படகுகள் கடல்வழியில் தென்படும். போராளிகள் கரையிலிருந்து தாக்குவார்கள். போராளிகளின் படகுகள் கடலுக்குள் சென்று ராணுவத்தைத் தாக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க