நடுவயதில் | Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

நடுவயதில்

பெருந்தேவி, ஓவியம் : மணிவண்ணன்

மோசமான உன்னை
ஆக மோசமானவனாக மாற்றக்கூடியது காதல்
நாற்பத்தி நான்கு வயதில்
ரத்தம் தலைக்கேறி எதிராளியை நோக்கி
உன்னைக் காறி உமிழவைக்கிறது
எதிராளி ஒன்றும் செய்திருக்கமாட்டான்
உன் காரை அவன் கார்
முந்திச் சென்றிருக்கும்
நிதானமாக ஹாரனில்கூட கைவைக்காமல்
ஆனால், உன் கார் கண்ணாடியை இறக்கிவிட்டு
அவனை நோக்கி நடுவிரலைக் காட்டுவாய்
காறித் துப்புவாய்
அவனால்தான்
இன்றைக்கு நீ தாமதமாகப் போகிறாய்
அவனால்தான் நேற்று
உன் கணினியை வைரஸ் தாக்கியது
அதற்கு முந்தைய தினம்
உன் நெருங்கிய நண்பன் செத்தான்
அவனால்தான் போன வாரம்
நீ பைக்கோடு விழுந்து வாரி
சில்லறை பொறுக்கினாய்
அதற்கு முந்தைய வாரம்
உன் பர்ஸைத் தொலைத்தாய்
அவனால்தான் சென்ற மாதம்
உன் காதல் உன்னைக் கைவிட்டுப்போனது
அதற்கு முந்தைய மாதம்
உனக்கும் உன் காதலிக்கும்
அந்த மோசமான வாக்குவாதம் வந்தது
அவனால்தான் போன வருடம்
உன்னை நட்டாற்றில் தள்ளிய அவளைச்
சந்தித்துத் தொலைத்தாய்
எல்லாவற்றுக்கும்
காரணம் கார்காரன்தான்

நீங்க எப்படி பீல் பண்றீங்க