ஜலசமாதி | Short Story - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

ஜலசமாதி

கல்யாணராமன், ஓவியங்கள் : வேல்

காலன் வந்திருக்கிறான். கடைசியாக நான் அவனை எப்போது சந்தித்தேன்? இந்திரஜித்தால் அடியுண்டு லக்ஷ்மணன் மூர்ச்சித்தபோது… அனுமன் சஞ்சீவி மலை தூக்கிவந்தபோது… ராவணன் வீழ்ந்தபோது… சீதையை பூமி விழுங்கியபோது… ஒவ்வொன்றும் துல்லியமாக என் ஞாபகத்தில் மின்னுகின்றன. வாலி மரணம்கூடக் கண்முன் உயிரோடு எழுகிறது. தசரதன் சாவில் தொடங்கிய பயணம், அதற்கப்புறம் எப்போதுதான் அமைதியுற்றது! ஒரே பரபரப்புதான்; இடையறாத ஓட்டம்தான். இன்று எல்லாமே ஆரம்பத் தேர்நிலைக்கே வந்துவிட்டன. கோசலையின் அன்பும் சீதையின் காதலும் எங்கோ நழுவிப்போயின. பரத விஸ்வாசமும் அனும பக்தியும்கூட அலுத்துவிட்டன. தாடகைக்குச் செய்த அநீதி மட்டும் உறுத்துகிறது. எத்தனை போர்களைப் பார்த்துவிட்டேன்! நான் பெற்ற வெற்றிகள் யாவும் அர்த்தமிழந்து என்னைப் பார்த்துச் சிரிக்கின்றன.அரியணையமர்வும் புகழ்மகுடமும் என்னைக் குத்துகின்றன. நிம்மதியாக நானுறங்கி எவ்வளவு வருஷமாகிறது? அதிருப்தி… அதிருப்தி… அதிருப்தி. ஆனால், இது ஒன்றும் எனக்குப் புதிதுமில்லையே. பார்க்கப்போனால், சீதையை நான் மணக்கும் முன் என்னதான் இருந்தது, என் வாழ்வில்!

அமுதூட்டும் கோசலையின் கரங்கள், உரிமையோடு கண்காணிக்கும் தசரதனின் ஆணைகள், முள்ளாய் நெருடும் கைகேயியின் பாசம், கனவாய்த் தொடரும் பரதனின் பவ்யம், குற்றவுணர்வைக் கிளப்பும் மந்தரையின் முகம், பாவனை சாந்தத்துடன் என்னைப் பார்த்துச் சிரிக்கும் வசிஷ்டன், வம்புக்கிழுத்து விளையாட்டுக் காட்டும் விஸ்வாமித்திரன்... மிதிலையை மிதிக்கும்வரை, என்னுடனிருந்த பெருவெக்கையை இப்போதும் நான் உணர்கிறேன். வேதஞானி ஜனகனாலும் என் மனப்புழுக்கத்தைக் கண்டுபிடிக்க முடிந்ததில்லை.யாரோடும் ஒட்டாத ஒரு தனிமை; எப்போது வைகுந்தம் மீள்வேன் என்ற தணியாத ஓர் அவசரம்; மனிதர்களைச் சந்திப்பதில் அவ்வளவு பயம்; வில்லும் அம்பும் விடுத்துச் சாமகானம் கேட்கும் வேட்கை; செயலற்றுச் செய்கைகள் பார்த்துக்கொண்டிருக்கும் பேரார்வம்; மண்ணில் கால் பாவா ஒரு மேலாந்தன்மை... இவ்வளவையும் ஒரே நொடியில் சீதை அழித்தாள். மூவாயிரம் வருஷம் பூமியாண்ட முசுகுந்த சக்ரவர்த்தியின் பேரன் நான் என ஒரே பார்வையில் அவள் புரியவைத்தாள். அதற்கப்புறம்தான், நான் நானானேன். அவள் மட்டும் என்னருகில் இருந்துவிட்டால், அது ஒன்றே போதும். வேறு யாரும் வேண்டாம்; எதுவும் எனக்குத் தேவையில்லை; நான் பரிபூரணன், நிகரற்றவன், குறைவிலன், நித்தியன் என்ற அந்தப் பேருணர்வு என் குருதியெங்கும் புகுந்துவிடும்.

அந்த ஏகச்சக்ராதிபதி தசரத மகாராஜா எனக்கு முடிசூட்ட நாள் குறித்தபோதும் நான் சிலிர்க்கவில்லை. என் சிற்றவை கைகேயி, காடே என் ஒரே கதி என்றென்னை வழிநடத்தியபோதும் நான் வாழ்வை வெறுத்துவிடவில்லை. சீதை இருக்கிறாள் என்ற அந்த ஒரு நினைப்பே போதாதா! பாதுகையாளும் அயோத்தியானால் என்ன, குரங்குகள் கூத்தாடும் கிஷ்கிந்தையானால் என்ன, அவளோடிருந்தால் எல்லாம் எனக்கு ஒன்றே. அவளால்தானே என் புலன்கள் விழித்தன, அவளால்தானே என் திசைகள் உதித்தன! நான் நரகத்திலேயே கிடந்துழன்றாலும், அங்கேயே சீதையும் இருந்துவிட்டால், அவள் சமீபமே என் சொர்க்கமாகிவிடுமே! இந்த எண்ணம் திடமாகி, எப்படியோ என்னுள் உரமேறிவிட்டது. சூர்ப்பனகை குறுக்கிடும்வரை, அந்தப் பால் பொசுங்காதே இருந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க