புலிகளின் தொடர்ச்சியாக இருப்பதற்கு நீங்கள் புலிகளாக இருக்க வேண்டும் | Mullivaikkal Remembrance - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

புலிகளின் தொடர்ச்சியாக இருப்பதற்கு நீங்கள் புலிகளாக இருக்க வேண்டும்

ஷோபாசக்தி

முள்ளிவாய்க்காலில் புலிகள் இயக்கம் அழிக்கப்படுவதற்குப் பதினைந்து வருடங்கள் முன்னதாகவே, புலம்பெயர் நாடுகளில் வலுவாக இருந்த புலிகளின் கிளைகளைச் சிறுகச் சிறுக அழிக்க, மேற்கு நாடுகள் நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கி யிருந்தன. புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக மதிப்பிடப்பட்டு தடைவிதிக்கப் பட்டது. புலிகளின் செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டு, ஐரோப்பிய-அமெரிக்கச் சிறைகளில் அடைக்கப் பட்டார்கள். பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு குறைந்தபட்சத் தீர்வுக்குப் புலிகள் சம்மதிக்க வேண்டும், புலிகளிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்பதே மேற்கு நாடுகளின் உறுதியான நிலைப்பாடாக இருந்தது. இந்த அரசியல் கிடுக்கிப்பிடியை, புலிகளின் தலைமை சரிவர உணரவில்லையா அல்லது உணர்ந்தும் பிடிவாதத்துடன் போரில் ஈடுபட்டார்களா என்பதற்கான பதிலைச் சொல்வதற்கு இப்போது யாரும் உயிருடனில்லை. முள்ளிவாய்க்காலில் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டபோது, அதற்கு இணையாக வெளிநாடுகளிலும் புலிகளின் அமைப்புகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. இப்போது புலிகள் அமைப்பு, வீரமும் தியாகமும் பயங்கரமும் அழிவும் நிறைந்த அழியாத கடந்தகால வரலாறு மட்டுமே.