பேரீச்சை | Short Story - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

பேரீச்சை

அனோஜன் பாலகிருஷ்ணன் - ஓவியங்கள்: டிராட்ஸ்கி மருது

லண்டன் ஹித்துரு விமான நிலையத்தை இன்னும் பதினொரு நிமிடங்களில் அடைந்துவிடுவோம் என்று விமானி அறிவித்தபோது அதிகாலை மூன்று மணியாகியிருந்தது. யன்னல் கண்ணாடியை உயர்த்தி வெளியே பார்த்தான். கறுப்புப் போர்வைக்குள் வான் தத்தளித்துக் கொண்டிருந்தது; தூரத்தில் மஞ்சள் நிறத்தில் ஒளிச்சிதறல்கள் நீள்சதுர வடிவில் தென்படலாயின. அலுமினிய உடல் குலுங்கி, சின்ன திடுக்கிடலுடன் மெல்ல பதியலாயிற்று. ஊடுருவியிருந்த பேரமைதி ஒரு கணம் அவனைத் திடுக்கிடவைத்தது. கண்களை லேசாகத் திருப்பி சகபயணிகளைப் பார்த்தான். தூக்கத்திலிருந்து விழித்து, கலைந்திருந்த கேசத்தைச் சரிப்படுத்தியவாறு உடலை வளைத்து நெட்டி முறிந்து சுறுசுறுப்படைந்துகொண்டிருந்தார்கள். தனித்துவிடப்பட்ட பயம் மூச்சுக் குழாய்க்குள் சிக்கி அவனை அவதியுறச் செய்தது. பின்முதுகு எரிந்தது, உலோகக் கம்பிகளாலும் சிகரெட்டுகளாலும் சுடப்பட்ட காயங்களின் மீது மேல்சட்டையின் உரசல் தீண்டியிருக்க வேண்டும். தாடைகள் அழுத்த, பற்களை இறுக்கமாக் கடித்துக்கொண்டான். கழுத்துப் பட்டிக்கால் குளிர்காற்று உள்நுழைய, தேகம் சாதுவாக அதிர்ந்ததை அருவருப்போடு உணர... கை, தடித்த குளிரங்கியைத் தனிச்சையாக அழுத்திப் பற்றிக்கொண்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க