தலையங்கம்

ரு விதை விருட்சமாவதுபோல, ஒரு சொல் விதைக்கிறோம். 

தடம்.

இலக்கியம்தான் வாழ்க்கையைச் சொல்கிறது; வாழ்வதற்கும் சொல்லித்தருகிறது. ஒரு சமூகத்தைச் செதுக்குவதற்கும் செழுமைப்படுத்துவதற்கும் எப்போதுமே இலக்கியம் உதவியிருக்கிறது. அதிலும் நம் தமிழர்கள் தங்கள் வாழ்க்கையை அகம், புறம் எனப் பிரித்து இலக்கியம் படைத்தவர்கள்; வாழும் நிலப்பரப்பை ஐவகை நிலங்களாகப் பிரித்து திணைகளுக்கு இலக்கியம் படைத்து, திசைகளில் வெளிச்சம் பாய்ச்சியவர்கள். 

வாழ்வென்பதே பெரும் நிகழ் கலைதான். இது நம் தேடலுக்கான திசை. இது நம் ரசனைகளின் வெளி. இது நம் கலைகளின் சங்கமம். வரலாறுதோறும் பாய்ந்துவரும் கலை, இலக்கிய, சமூக, பண்பாட்டுப் பாய்ச்சலுக்கான களமாகவே ‘தடம்’ பதிக்கிறோம்.    

ஓலைச்சுவடிகளைத் தொலைத்துவிட்டு அதைத் தேடிக்கொண்டிருந்த நூற்றாண்டுகள், தமிழ் இலக்கிய வரலாற்றில் உண்டு. அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதும், புத்தகங்கள் உருவாகி விநியோகிக்கப்பட்டதும் மனித சமூகத்தின் அறிவு வரலாற்றில் நடந்த மகத்தான மாற்றம். அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்களுக்கு அப்பால், தனிமனிதர்களும் படைப்பாளிகளாகப் பங்குபெறும் சமூக ஊடகங்களும் வந்துவிட்டன. கனமான படைப்புகளும் காத்திரமான விவாதங்களும் இரவு பகலற்று இணையமெங்கும் மிதக்கின்றன.

இதுவரை இல்லாத அளவுக்கு, தமிழில் எழுதுபவர்களும் படிப்பவர்களும் உருவாகியிருக்கிறார்கள். ஏராளமான இளைஞர்கள் இலக்கியத்துக்குள் வந்திருக்கின்றனர். இன்னும் நாம் செய்யவேண்டிய பணிகளும் செல்லவேண்டிய தூரமும் அதிகம். உயிர்ப்புடன்கூடிய இலக்கிய இயக்கம் தமிழில் வலுவாக இருக்கிறது என்கிற புரிதலோடு, அதை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சி இது.

90-வது வருடம் தொடும் ஆனந்த விகடன் குழுமத்தின் நீண்ட, நெடிய பயணத்தில், எப்போதுமே எழுத்தாளர்கள்தான் அச்சாணிகள். இது நெகிழ்வாக, மகிழ்வாக, இன்னும் நெருக்கமாக இறுக்கிக்கொள்ளும் இதமான தருணம்.

தடம் - இலக்கியத்தை வாசிக்கும் நேசிக்கும் எல்லோருக்குமான இடம்.

மொழி செல்லும் வழி தொடர, அன்புடன் அழைக்கிறோம்.

நம்மை நாம் கொண்டாடுவோம்!

- ஆசிரியர்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
முதல் வணக்கம்
“இன்றைய இலக்கியத்துக்கு கறாரான விமர்சகர்கள் பத்து பேர் வேண்டும்!” - பிரபஞ்சன்
Advertisement

SPECIAL

காந்த முள் : 1  - தமிழ்மகன்
காந்த முள் : 1 - தமிழ்மகன்
ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா - ஒரு பார்வை
ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா - ஒரு பார்வை
எளிய விஷயங்களின் கலைஞன் -  ஞானக்கூத்தன் (அஞ்சலி)
எளிய விஷயங்களின் கலைஞன் - ஞானக்கூத்தன் (அஞ்சலி)
Advertisement
Advertisement