பெண்கள் @ பேஸ்புக்.காம்

ஃபேஸ்புக்கைக் கண்டுபிடித்த மார்க் ஸுக்கர்பர்க்குக்கு 'தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அதற்கொரு குணம் உண்டு’ என்பது தெரிந்திருந்தால், ஃபேஸ்புக்கைக் கண்டுபிடிக்காமலே இருந்திருப்பான். 'அதிகம் அக்கப்போர்கள் நடப்பது அசெம்பிளியிலா, ஃபேஸ்புக்கிலா?’ என்று ஏதாவது ஒரு சேனல் தீபாவளிக்கோ பொங்கலுக்கோ பட்டிமன்றம் நடத்தினால், டி.ஆர்.பி. ரேட்டிங் எகிறுவது நிச்சயம். அதிலும் இந்தப் பெண்கள் ஃபேஸ்புக்கை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதை மட்டும் ஆராய்ந்தால்... 

பெரும்பாலான பெண்களின் புரொஃபைலில் சிரிப்பது அவர்கள் அல்ல, நஸ்ரியா, சமந்தா, த்ரிஷா அல்லது அனுஷ்கா. சம்பந்தப்பட்ட நடிகைகளே தங்களுக்கு ஒரு ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பித்து தங்கள் போட்டோவை புரொஃபைலில் வைப்பது இல்லை. இன்னும் சில பெண்களோ இன்னும் மோசம். வட இந்திய சீரியல் நடிகையின் படத்தையோ  ஃபாரின் பெண் குழந்தை போட்டோவையோ புரொஃபைல் பிக்சராக வைத்துக் கொள்கிறார்கள். இதனால், பொண்ணு அழகா இருக்குமா, சுமாரா இருக்குமா என்று எப்போதும் பசங்களைக் குத்துமதிப்பான ஒரு கன்ஃப்யூஷனிலேயே வைத்திருப்பதில் அப்படி ஓர் ஆனந்தம்.

இந்த வகை ஃபேஸ்புக் பெண்கள் அப்படியே முதல் பாராவுக்குத் தலைகீழ். புரொஃபைல் பிக்சரோபோபியா நோய் தாக்கப்பட்டவர்கள் இவர்கள். வளைத்து வளைத்து தாங்கள் எழுதும் ஸ்டேட்டஸ்களுக்கு விழாத லைக்குகள் தாங்கள் சிரித்தபடி டீக்கடையில் நிற்பது, யாருடைய கார் முன்னோ  ஓனர் போல ஒய்யாரமாய் நிற்பது எனத் தாங்கள் 'அப்லோடிய’ போட்டோஸ்களுக்கு லைக்குகள் விழுவதால் வெறும் போட்டோக்களால் டைம்லைனை நிறைப்பார்கள். லைக்குகள் அள்ளுவதால் அதையே டிரெண்டாக மாற்றித் தொடர்ந்து நம்மை இம்சிப்பார்கள். வழக்கம்போல பல அண்ணாச்சிப் பழங்கள், 'அழகுடா’, 'சூப்பர்டா’, 'பேரழகுப் பெண் இவள்தான்’ என இஷ்டத்துக்கு வர்ணிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.    

மழை, ஒரு சொட்டு சென்னையில் பெய்துவிடக்கூடாது. உடனே திடீர் சாம்பார், திடீர் ரசம் போல திடீர் கவிதை எழுதி ஸ்டேட்டஸாகப் போடுவார்கள். படிக்க சுமாராக இருந்தாலும் பெண்கள் எழுதுவதாலேயே லைக்குகள் அள்ளும். இதற்குப் பயந்தே சென்னையில் மழை பெய்வது இல்லை. பேஸ்புக் பெண்கள் கவிதையால் பெய்யெனப் பெய்யா மழை.

இன்னும் சில பேர்... 'இன்னிக்குக் காலையில இருந்து ஒரே தலைவலி’ என்று ஒற்றை ஸ்டேட்டஸ் போட்டு அதற்கு 300 கமென்ட்டுகள் தட்டி இருப்பார்கள். 'டேக் கேர் டா’ என்பதை 30 பேரும், 'கெட் வெல் ஸ¨ன் பேபி’ என்பதை 50 பேரும் யுனானி, ஆயுர்வேத, அலோபதி மற்றும் டெலிபதி சிகிச்சைக்குப் பரிந்துரை செய்து 100 பேரும் கமென்ட்டால் ரிவிட் அடித்திருப்பார்கள். 'ஊருக்குப் போறியா செல்லம்? நான் கே.பி.என்-ல டிக்கெட் புக் பண்ணித் தர்றேன்’ என ஒரு சாமா மட்டும் ஓவராய் வழிந்திருப்பான். அடேய் பக்கீஸ்... இங்கே ஒருத்தன் ஒரு வாரமா டைஃபாய்டு காய்ச்சலால் சோறு தண்ணி இல்லாமக் கிடக்கிறான். அதைப்பத்தி நாலு ஸ்டேட்டஸ் போட்டும் நாலே நாலு பேரு மட்டும் 'சரக்கைக் குறைங்க பாஸ்’னு கமென்ட் போட்டிருக்கிறார்கள். ம்ம்ம்ம்... அப்புறம் ஏன்டா சுனாமி வராது?

'காதல்... காதல்... காதல்’ - நின்றால் காதல், நடந்தால் காதல், படுத்தால் காதல் என டைம்லைன் முழுக்கக் காதலாகிக் கசிந்துருகிக் கிடப்பார்கள். புரொஃபைலில் இந்தக் காதல் பெண்கள் 'மேரீட்’ எனப் போட்டிருந்தால் போச்சு.  ஒரே கன்ஃப்யூஸ் ஆஃப் இண்டியாவுடன்தான் அவர்களை அணுக வேண்டி இருக்கும். தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் போடும் ஸ்டேட்டஸுக்கு லைக் போட்டால், அம்பேல்தான். நண்பர்கள் வட்டாரம் உங்களை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்துவிடும். கொஞ்சம் அந்த ஸ்டேட்டஸ்களை உற்று அவதானித்தால் அம்புட்டும் வேறு யாரோ பிரபலம் தங்கள் புத்தகத்தில் எழுதியவை. அதாவது கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதுபோல.

இந்த யூத் பொண்ணுங்க, தன்னிடம் ஏழு டிரெஸ்ஸில் ஏழாவது டிரெஸ்ஸைப் போட்டுக்கொண்டு போட்டோ அப்லோட் செய்திருக்கும். அவ்வளவுதான், ஆண்கள் கூட்டம் அப்பித் தள்ளி 'லைக் அண்ட் ஷேர்’ செய்திருக்கும். 'ஹைய்யோ, நிஜம்மாவா சொல்றீங்க. என்கிட்டே இருக்கிறதிலேயே சுமாரான டிரெஸ் இதுதான்’ என்று அந்தப் பெண்ணும் கமென்ட் போடும்.

கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதீங்க ப்ளீஸ்!

- ஆர்.சரண்    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick