பெரியார் ஆவி மட்டும் பேச மாட்டேங்குது!

தமிழ்நாட்டில் அறிவியல் ஆராய்ச்சி நடக்கிறதோ இல்லையோ, ஊருக்கு ரெண்டு பேராவது ஆவிகளை ஆராய்ச்சி செய்கிறார்கள். ஆவிகளை அழைத்துப் பேசவும் செய்கிறார்கள். அப்படி என்னதான் ஆராய்கிறீர்கள் என மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆவி ஆராய்ச்சியாளர்  ஆர்.ரமணியிடம் பேசினேன்.

''உலகத்துல இருக்கிற எல்லோருமே மரணத்துக்கு அப்புறம் ஆவிகள் உலகத்துக்கு தான் போறாங்க. ஆவிகள் உலகம் உங்களைச் சுற்றி இருக்கிற நான்கு கிலோ மீட்ட ருக்கு உள்ளேதான் இருக்கு (பார்ரா!). அந்த ஆவிகள் உலகத்துல பாவலோக ஆவிகள், மத்தியலோக ஆவிகள், புண்ணியலோக ஆவிகள்னு மூணு விதமான பிரிவுகள் இருக்கு. உயிரோட இருக்கும்போது மனிதன் எப்படி வாழ்கிறானோ அதுக்குத் தகுந்தபடி, அவர்களுடைய மரணத்துக்கு அப்புறம் இந்த மூணு உலகத்துல ஓர் உலகத்துக்குப் போவாங்க. பறவைகள், பூச்சிகள், விலங்குகள்னு எல்லா உயிரினங் களுக்கும் தனித் தனி ஆவியுலகம் இருக்கு. மத்தியலோக ஆவிகள் நல்லதும் பண்ணாது, கெட்டதும் பண்ணாது. புண்ணியலோக ஆவிகள் மனிதர்களோட சகஜமா பேசவும் பழகவும் செய்யும். நம்மளைத் தொந்தரவு பண்றதெல் லாமே பாவலோக ஆவிகள் மட்டும்தான். தவிர, நம்ம நாட்டுல இருக்கிற மாதிரி ஆவிகள் உலகத்திலேயும் சட்ட திட்டங்கள் இருக்கு. இதெல்லாம் ஆவிகள் உலகத்துல நான் பயணப்பட்டு தெரிஞ்சுக்கிட்ட விஷயங்கள்'' கொஞ்சம் டெரராகவே ஆரம்பித்தார் ரமணி.

''புண்ணிய லோகத்துல இருக்கிற ஆவிகள் மனிதனுக்கு ஏதாவது உதவிகள் பண்ணிக்கிட்டே இருக்கணும்னு ஆசைப்படும். 'கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தாலும் நான் செத்திருப் பேன்டா’னு யாராவது சொல்லியிருப்பாங்க. இதெல்லாம் புண்ணியலோக ஆவிகளோட செயல்தான். பாவலோக ஆவிகள் பற்றி நான் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை. சினிமாவுல காட்டுற பெரும்பாலான ஆவிகள் அதுகதான். இப்படி சக மனிதனுக்கு உதவணும்னு நினைக்கிற புண்ணியலோக ஆவிகளை வெச்சு என்கிட்ட வர்றவங்களோட பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறேன். தவிர, எல்லா ஆவிகள்கிட்டேயும் நல்லா பேசி, பழகி என்னோட ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்திக் குவேன்'' என்றவர், ''எனக்கு வழி காட்டுறதுக்கு ரமேஷ்ங்கிற புண்ணியலோக ஆவி இருக்கு. அவர்தான் என்னை ஆவிகள் உலகத்துக்கு கூட்டிட்டுப்போவார். அவர்கிட்ட உங்களுக்கு ஏதாவது உதவி கேட்டுப் பார்க்கிறீங்களா?'' என்றபடியே அவருக்குள் ரமேஷை இறக்கிக்கொண்டார்.

'சொல்லுங்க தம்பி. என்ன உதவி வேணும்?’ எனக் கரகர குரலில் 'ஆவி’ ரமேஷ் கேட்க, 'பெர்சனல் லோன் அப்ளை பண்ணியிருக்கேன். எப்போ கிடைக்கும்?'' என்றேன். கொஞ்சம் யோசித்துவிட்டு, 'இன்னும் ஐந்து மாசம் கழிச்சுதான் கிடைக்கும்’ என்றது அந்த ஆவி. ''சரிங்க... நான் ரமணி கிட்ட பேசணும். நீங்க கௌம்புங்க'' என்று அந்த ஆவியை அனுப்பிவிட்டு ரமணியிடம் பேச்சைத் தொடர்ந்தேன்.

''மனிதனோட நடுமூளையில என்டோபிளாசம்னு ஒண்ணு இருக்கு. அதோட லெவல் 50 சதவிகிததுக்கு  மேல இருந்தாதான் ஆவிகளோட பேசமுடியும். எனக்கு 100 சதவிகிதம் இருக்கிறதனால நான் ஆவிகளை நேரடியா பார்க்கவே செய்வேன். இதோ, என்னைச் சுற்றி ஐந்து ஆவிகள் உட்கார்ந்திருக்கு. நீங்களும் நானும் பேசிக்கிட்டு இருக்கிறதை அவங்களும் கேட்டுக்கிட்டு இருக்காங்க'' என்றார் சீரியஸாக.  ''பிரபலங்களின் ஆவிகளிடம் பேசிய அனுபவங்கள் என்ன?'' எனக் கேட்டேன்.

''அறிஞர் அண்ணா 'நான் நினைச்சது ஒண்ணு நடக்கிறது ஒண்ணா இருக்கு’னு புலம்பினார். 'கட்சியில இருக்கிறவங்க நான் காட்டின வழியில நடக்காம அவங்க இஷ்டத் துக்கு நடந்துட்டு இருக் காங்க’னு

எம்.ஜி.ஆர் ரொம்பவே வருத்தப்பட்டார். காமராஜரோ, 'நான் என்னென்ன நடந்துடக் கூடாதுனு பயந்தேனோ, அதெல்லாம் நடக்குது’னு கோபப்பட்டார். பெரியார்கிட்ட பேசணும்னு பல தடவை முயற்சி பண்ணிக் கூப்பிட்டும் வரவே இல்லை'' என்றவர், விடாமல் தொடர்ந்தார்.

''இதுவரை 30,000க்கும் அதிகமான ஆவிகள்கிட்ட பேசியிருக்கேன். மனிதர்களோட உலகத்தைவிட ஆவிகள் உலகம் ரொம்ப சந்தோஷமானதா இருக்கு. சராசரி நண்பன்கிட்ட பேசுற மாதிரி தினமும் அவங்களோட பழகுறேன். 'மனிதர்களை நம்புறதைவிட ஆவிகளை நம்பிடலாம்’ங்கிற மனநிலைக்கு வந்துட்டேன். ஏன்னா, ஆவிகள்ங்கிறது மாந்திரீகமோ, அமானுஷ்யமோ கிடையாது. அறிவியல். ஆவிகள் மனிதர்களுக்கு அடுத்த பரிணாமங்களில் இருக்கக்கூடிய உயிரினங்கள்'' என்றார் ரமணி!

  கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick