நம்ம நாட்டு சண்டக்கோழிகள்!

பிள்யூ டபிள்யூ எஃப் - உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் பார்க்கப்படும் ரணகள சண்டை நிகழ்ச்சி, இப்பொழுது டபிள்யூ. டபிள்யூ. இ (WORLD WRESTLING ENTERTAINMENT) ஆக மாறிவிட்டது. டபிள்யூ. டபிள்யூ. எஃப் பார்த்து டி.என்.ஏ ( TOTAL NON-STOP ACTION), ஏ.பி.டபிள்யூ ( ALL PRO WRESTLING) , என்.டபிள்யூ.ஏ (NATIONAL WRESTLING ALLIANCE), என விதவிதமாக ஆரம்பித்து விதவிதமாக அடித்துக்கொண்டு கிடக்கிறார்கள். பொதுவாகவே அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களுமே ஆதிக்கம் செலுத்துகிற இது போன்ற குஸ்தி நிகழ்ச்சிகளில், ஆச்சரியமாக இந்தியர்கள் சிலரும் கலந்துகொண்டு கலக்கியிருக்கிறார்கள். அவர்களைப் பற்றிப் பார்ப்போமா?

கடோவார் சிங்

உயரம்: ஐந்து அடி 10 இன்ச், எடை: 102 கிலோ

80-களில் டபிள்யூ.டபிள்யூ. எஃப்பை மிரட்டிய இந்த முரட்டு சிங்கம். இப்பொழுது 60 வயதான கிழட்டு சிங்கம். அப்போது ஜாம்பவன்களாக இருந்த முராக்கோ, ராடி பைப்பர், பாப் ஆர்டன் போன்றவர்களைப் பறக்கவிட்டு பந்தாடியவர். வருடத்தில் மூன்று மாதங்கள்தான் சண்டை போடுவாராம். மற்ற நாட்களில் உலகம் சுற்றும் வாலிபன். நன்றாக ஊர் சுற்றியதாலோ என்னவோ, இப்போது ரியல் எஸ்டேட்டில் பெரும்புள்ளி.


தலிப் சிங் ரானா

உயரம்: ஏழு அடி ஒரு இன்ச், எடை: 157 கிலோ

இந்திய குஸ்தி வீரர்களிலேயே மிகப் பிரபலம். டபிள்யூ.டபிள்யூ.எஃப்., டபிள்யூ. டபிள்யூ. இ யாக மாறியதற்குப் பிறகு என்ட்ரி கொடுத்த முதல் இந்தியன். ஏ.பி.டபிள்யூ-வில் இருந்த காலத்தில் பிரயன் ஓங் எனும் வீரர், தலிப் அடித்த அடியில் செத்தே போனார். அதனாலயே ஏ.பி.டபிள்யூ-வில் இருந்து விலகிய தலிப், 2006-ம் வருடம் டபிள்யூ. டபிள்யூ. இ-யில் தனது பெரிய்ய்ய்யய... வலது காலை எடுத்து வைத்தார். அங்கேயும் ரத்த வெறியோடு பலரையும் காயப்படுத்தியவர், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குஸ்தியை வெறுத்து சினிமாப் பக்கம் தன் பார்வையைத் திருப்பிய தலிப், நான்கு ஹாலிவுட் படங்கள், இரண்டு பாலிவுட் படங்கள், நிறையத் தொலைக்காட்சித் தொடர்கள் என பிஸியாக இருக்கிறார்.


ஜீத் சிங் ஹான்ஸ்

உயரம்: ஆறு அடி மூன்று இன்ச், எடை: 120 கிலோ

1960-ம் வருடம் பாக்கெட்டில் வெறும் ஆறு டாலர்களை வைத்துக்கொண்டு பஞ்சாப்பில் இருந்து கனடாவுக்குக் கிளம்பியுள்ளார் ஜீத் சிங். அங்கு ஃபிரட் ஆட்கின்ஸ் என்பவரிடம் முறைப்படி குஸ்தி கற்றிருக்கிறார். 70-களில் ஜீத் சிங், என். டபிள்யூ. ஏ-வின் சூப்பர் ஸ்டார். பின்னர், ஜப்பானில் 20 வருடங்கள், தென்னாப்பிரிக்காவில் 10 வருடங்கள் வாழ்க்கையை ஓட்டினார். ஒரு சுமோ வீரரைத் தோற்கடித்த முதல் குஸ்தி வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான ஜீத் சிங்கை ஜப்பான் மக்களுக்கு மிகவும் பிடித்துப்போக அவரை வைத்து ஒரு காமிக் கதாபாத்திரமே உருவாக்கியுள்ளனர். ஜீத் சிங் குஸ்திக்கு வரும்போது வாளை வாயில் வைத்துக்கொண்டு அதிரடியாக என்ட்ரி கொடுப்பாராம். இவருடைய மகன் குருஜித் சிங் ஹான்ஸும் இவரைப் போலவே குஸ்தி வீரர்தான்.


குருஜித் சிங் ஹான்ஸ்

உயரம்: ஆறு அடி ஐந்து இன்ச், எடை: 124 கிலோ

தாய்லாந்தில் கிக் பாக்ஸிங் கற்றுக்கொண்டு, தன் தந்தை ஜீத் சிங்குடன் ஜோடி சேர்ந்து நியூ ஜப்பான் ப்ரோ ரெஸ்ட்லிங் (NJPW) நிகழ்ச்சியைக் கலக்கியவர், 1997-ல் டபிள்யூ. டபிள்யூ. எஃப் பக்கம் சென்றார். அங்கே வெற்றிக்கொடி நாட்டி 2002-ம் வருடம் வெளியே வந்த அலி சிங் அடுத்த ஆறு வருடத்துக்கு குஸ்தியே போடவில்லை. பின்னர், 2008-ம் வருடம் தன் பெயரை ‘டைகர் ஜீத் சிங் ஜூனியர்’ என மாற்றிக்கொண்டு மறுபடியும் தன் தந்தையுடன் ஜோடி போட்டு ஜப்பானில் குஸ்தி போடுகிறார்.


ரித்தேஷ் பெல்லா

உயரம்: ஐந்து அடி எட்டு இன்ச், எடை: 84 கிலோ

33 வயதான ரித்தேஷ் இதுவரை அனைத்து இடங்களிலும் மல்லுக்கட்டி இருந்தாலும், பெரிதாகப் பிரபலம் அடையாதவர். அடிக்கடி பெயரை மாற்றிக்கொள்வார். மான்ஸ்டர் ஜே, ஸ்க்வாக் தத், சமோசா மான்ஸ்டர் (சமோசாவா?) இதெல்லாம் ரித்தேஷுடைய பெயர்கள்தான். தற்பொழுது ரித்தேஷுடைய பெயர் சஞ்சய் தத்.


மஹாபலி ஷேரா

உயரம்: ஆறு அடி இரண்டு இன்ச், எடை: 120 கிலோ

இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம். குஸ்தி வாழ்க்கையை ஆரம்பித்து சில மாதங்களே ஆன ஷேரா, அடித்து தூள் கிளப்பிக்கொண்டிருக்கிறார். ‘மஹாபலி ஷேரா இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட குஸ்தி வீரர்களிலேயே மிகவும் திறமை யானவர்’ என குஸ்திக்காரர்கள் பாராட்டித் தள்ளுகிறார்கள். மிக முக்கியமான விஷயம் இவர்கள் எல்லோருமே பஞ்சாபி சிங்(கங்)கள்தான்!

- ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick