“ஹீரோயின்ஸ் நிர்வாணமாகவே நடிப்பாங்க!”

‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’, ‘வேலுபிரபாகரனின் காதல் கதை’ என்று சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய வேலுபிரபாகரனின் அடுத்த படம் ‘ஒரு இயக்குனரின் காதல் டைரி’. ஸ்டில்ஸைப் பார்த்தாலே இது என்ன மாதிரியான ‘டைரி’ என்று தெரிகிறது. பகுத்தறிவு, நாத்திகம் என்று பேசிக்கொண்டிருந்த வேலுபிரபாகரன் ஏன் இந்த மாதிரியான படங்களையே இயக்குகிறார்? ஆளைப் பிடித்து கேள்விகள் கேட்டால்...

“கடவுளை விவாதிச்சு, கேள்வி எழுப்பின மாதிரி, காதலைப் பற்றிய முழு உணர்வையும் சொல்றதுதான் இந்தப் படம். இது என்னோட வாழ்க்கைக் கதை. என் வாழ்க்கையில் நான் சந்தித்த பெண்கள், காதல், காமம் இதைப் பத்திதான் முழுக்கச் சொல்லப்போறேன். ஆணுக்குப் பெண்ணின் உடலையும், பெண்ணுக்கு ஆணின் உடலையும் பார்க்க வேண்டிய ஏக்கம்தான் இன்றைய காதலா இருக்கு. இப்போ வர்ற படங்களும் இதை சினிமா மூலமாகச் சொல்லி, திரையிலேயே விபசாரம் பண்றாங்க. இந்தப் படம் அதைக் கொஞ்சமாவது மாத்தும்” என்று ஆரம்பித்தார்.

‘‘அதெல்லாம் சரி. ஆனால், சமுதாயத்தை மாற்றுகிறேன்னு நீங்க எடுக்கிற படங்கள் எல்லாமே சமுதாயத்துக்கு சீரழிவுதான்னு ஒரு கருத்து இருக்கே?”

“இப்போ வர்ற 1,000 படங்கள்ல 999 படங்கள் காமத்தைப் பரப்புகின்றன. ரெளடிக்கு கவர்னர் மகள் மேல காதல், டாஸ்மாக்கில் வேலை செய்பவனுக்கு டாக்டர் மேல காதல், வேலையே இல்லாத பொறுக்கிப்பையனுக்கு இன்ஜினீயரிங் படிக்கிற பொண்ணு மேல காதல்னு படத்துல காட்டுறாங்க. இந்தப் படங்கள்தான் சமுதாயத்தைச் சீரழிக்குது. ஆனால், இதெல்லாம் காதல் இல்லை. அது ஓர் உணர்வு. அந்த உணர்வை எந்த அளவுக்குப் பண்பாடு, பக்குவத்தோட சீர்தூக்கிப் பார்க்கணும்னு என் படங்கள் சொல்லுது. அதை ஒரு மருத்துவனாக நான் சொல்லித்தர்றேன்.”

‘‘படத்தோட ஸ்டில்களைப் பார்த்தா, சென்ஸார்ல ஏகப்பட்ட வெட்டுகள் வாங்கும் போலிருக்கே?”

‘‘சென்ஸாரை விடுங்க. வெளிநாட்டுத் திரைப்பட விழாக்கள், திரையிடல் நிகழ்ச்சிகள், யூடியூப்னு ஒரு படைப்புக்கான இடம் அதிகமாயிடுச்சு. அதனால், என்னுடைய படத்தைத் திருட்டி விசிடியிலகூட பாருங்க, எனக்குக் கவலையே இல்லை. ஏன்னா, நான் பணம் சம்பாதிக்கிறதுக்காக படம் எடுக்கலை. காதல் பற்றிய புரிதலை மக்களுக்குத் தெரியப்படுத்துறது மட்டும்தான் என்னுடைய நோக்கம். ஒருவேளை இந்தப் படத்தைத் தடைசெய்தால், அது அரசாங்கத்துக்குத்தான் அவமானமே தவிர, எனக்கு இல்லை.”

‘‘ஒரு காலத்தில் முத்தக் காட்சிகளே பெரிய விஷயமா இருந்தன. ஆனா இப்போ வர்ற படங்களில் ஹீரோயின்ஸ் குடிப்பது, புகைப்பது போன்ற காட்சிகள் வருதே?”

“இதெல்லாம் சாதாரண விஷயம்தான். இன்னும் பத்தாண்டு கள்ல பாருங்க. எல்லாக் கதாநாயகி களும் நிர்வாணமாகவே நடிப்பாங்க. ஆனா, இதுக்கு இத்தனை வருடங்கள் தேவையில்லைங்கிறது என்னுடைய கருத்து.”

‘‘பெரியாரிஸ்ட் என்ற முறையில் கருணாநிதி அறிவித்த மதுவிலக்கு அறிவிப்பு பற்றி உங்க கருத்து?”

“மதுவிலக்குல எனக்கு விருப்பம் இல்லை. மக்கள் போராட ஆரம்பிச்சுட்டாங்க, நாமளும் அவங்க பக்கம் நிற்கிற மாதிரி காட்டிக்கணும்னு அவர் நினைக்கிறார். 100 அரசியல்வாதிகள்ல 99 பேர் குடிக்கிறாங்க. குடிக்கிறவனே கடையை அடிச்சு நொறுக்கினா எப்படி? பாண்டிச்சேரி போய் பாருங்க. மிகச்சிறந்த தமிழர்கள் அவங்கதான். கலாசாரத்தை, பண்பாட்டை, பழமையைப் போற்றிப் பாதுகாக்கிறார்கள். அங்கே இல்லாத சாராயக்கடையா? அதனால, மதுவைக் கட்டுப்படுத்தலாமே தவிர, அழித்து அரசியல் பண்ணக் கூடாது.”

‘‘நீங்க தொடர்ச்சியா கருணாநிதியை விமர்சிக்கிறீங்க, ஜெயலலிதாவைப் பாராட்டுறீங்களே, ஏன்?”

“தமிழ்நாட்டுல இருக்கிற அரசியல் தலைவர்கள் ரெளடிகளா, சுயநலம் மிக்கத் தலைவர்களா இருக்காங்க. அதுக்கு இந்தம்மா ஒரு சர்வாதிகாரி மாதிரி நடந்துக்கிறது எனக்குப் பரவாயில்லைனுதான் தோணுது. ஏன்னா, பெரிய முட்டாள்கள் கூட்டத்தை வழிநடத்த இரும்பு மனசும், சர்வாதிகாரமும் அவசியம். அது ஜெயலலிதாகிட்ட இருக்கு. மத்தபடி அவரோட அமைச்சர்கள் துதி பாடுறாங்க, காவடி தூக்குறாங்கனு புலம்பிக்கிட்டு இருக்கிறதெல்லாம் வேஸ்ட். எல்லா அமைச்சர்களும் கூடி மக்களை எப்படிக் காப்பாத்துறதுனு பேசுவாங்கனு நினைக்கிறது முட்டாள்தனம். அது எந்த ஆட்சியிலும் நடக்காது. மோடி வெளிநாடு பறந்தாலும் அரசு இயந்திரம் இயங்கிக்கிட்டுதானே இருக்கு. அது மாதிரி இங்கேயும் இயங்கிக்கிட்டுதான் இருக்கும்!”

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick