‘நமக்கு நாமே’ சினிமா!

தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ ‘நமக்கு நாமே’ பயணத்தை முடித்திருக்கிறார் ஸ்டாலின். இது அரசியலில்! சினிமாவிலும் ‘நமக்கு நாமே’ எனக் கிளம்பியிருக்கிறார்கள் சிலர். சினிமாவில் வாய்ப்புத் தேடுபவர்களை ஒருங்கிணைத்து, நமக்கு நாமே வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வதுதான் இவர்களுடைய நோக்கம். ‘டீக்கடை சினிமா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரிடம் பேசினேன்.

‘‘மதுரை எனக்கு சொந்த ஊர். சினிமாவுல உதவி இயக்குநரா சேர்ந்துடணும்னு ஆறேழு வருடங்களா முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். நண்பர்கள் சில பேர் நடிப்பு சான்ஸுக்காக அலைஞ்சுக்கிட்டு இருக்காங்க. தனியா வாய்ப்புகள் தேடுறதுல, யாருடைய வழிகாட்டுதலும் இல்லாததனால... எங்க இலக்கை அடையறதுல ஏகப்பட்ட சிக்கல்கள். பல பேர் வாய்ப்பு வாங்கித் தர்றேன்னு ஆயிரத்துல ஆரம்பிச்சு, பல லட்சங்கள் பேரம் பேசுனதுதான் மிச்சம். நீண்ட போராட்டத்துக்கு அப்புறம் ஒரு தயாரிப்பாளர் கிடைச்சார். ‘மதிப்பிற்குறிய அனாதைகள்’னு ஒரு படத்தை ஆரம்பிச்சோம். பணப் பிரச்னையால படம் பாதியிலேயே நின்னுடுச்சு!’’ என்று ஆரம்பித்த உதயகுமார்,  ‘டீக்கடை சினிமா’ கதையைத் தொடங்கினார்.

‘‘படம் பாதியில நின்னதை விட, இதே மாதிரி ஒரு நிலைமை சினிமாவுல வேற யாருக்கும் வந்துடக் கூடாதுனு தோணுச்சு. அதுக்காக, கடந்த ஒரு வருடமா ஏதாவது பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டே இருந்தோம். அப்போ தோன்றினதுதான், ‘டீக்கடை சினிமா’ ஐடியா! நடிப்பு, இயக்கம், இசை, எடிட்டிங்னு தங்களோட திறமையைக் காட்டுறதுக்கான சரியான வாய்ப்புக்காக காத்துக்கிட்டு இருக்கிற, வாய்ப்புகளைத் தேடிக்கிட்டு இருக்கிற எல்லோருக்கும் ‘டீக்கடை சினிமா’ பொதுவான இடமா இருக்கும். ஆயுள்சந்தா 500 ரூபாய் கட்டி, இதில் உறுப்பினரா சேர்ந்தா போதும். அவங்களுக்குத் தேவையான வாய்ப்புகளை ‘நமக்கு நாமே’ கொடுத்துக்குவோம். உதாரணத்துக்கு, நீங்க ஒரு குறும்படம் எடுக்குறதா இருந்தா, ‘டீக்கடை சினிமா’வுல இருந்தே கேமராவை எடுத்துக்கலாம். இங்கே இருக்கிற ஆட்களையே பயன்படுத்திக்கலாம். எல்லோரும் அடிக்கடி சந்திச்சுப் பேசிக்கிற வாய்ப்பை உருவாக்கி வைக்கிறதனால, இங்கே எல்லோருமே ஒரே குடும்பமா செயல்படலாம். அதனால, குறும்படம்னு இல்லை. எங்க டீம்ல இருக்கிற ஒருத்தருக்கு சினிமா வாய்ப்பு கிடைச்சாலும், அதுமூலமா இங்கே இருக்கிற பல பேருக்கு அவங்களோட திறமைக்குத் தகுந்த வாய்ப்புகள் கிடைக்கும். ஏன்... எல்லோரும் சேர்ந்து ‘ஜீரோ பட்ஜெட்’லேயே சினிமாவை உருவாக்கிடலாம். அதுக்காக, டீம்ல யாரு எந்தக் கதையைச் சொன்னாலும் கேமராவைத் தூக்கிட்டு கிளம்பிட மாட்டோம். நல்ல கதைகளை, எங்களுக்குள்ளேயே விவாதத்துக்கு உள்ளாக்கி தரமான படைப்புகளை மட்டும்தான் கொடுப்போம்!’’ என்றவர்,

‘‘படைப்பாளிகளும் சரி, ரசிகர்களும் சரி ஒரு சினிமாவைத் துவைச்சு தொங்கப்போடுறதும், சிலாகிச்சு ரசிக்கிறதும் டீக்கடையிலதான். அதனாலதான், ‘டீக்கடை சினிமா’னு பெயர் வெச்சிருக்கோம். இப்பவே பல நண்பர்கள் என்கிட்ட ஆர்வமா இருக்காங்க. தமிழ்ப்புத்தாண்டுல இருந்து ‘டீக்கடை சினிமா’வைத் திறக்கிறோம். துவக்க விழாவுக்கு நடிகர் விஷால்கிட்ட பேசியிருக்கோம். அவர் வந்தா, இன்னும் உற்சாகமா இருக்கும். ஏன்னா, இது பணநோக்கத்துக்காக உருவாக்கலை. நீங்க, நான், உங்க நண்பர்கள்... இப்படி சினிமாவுல நாமளும் சாதிச்சுட மாட்டோமானு அலைஞ்சுக்கிட்டு இருக்கிற அத்தனை பேரையும் கரையேற்றி விடலைனாலும் பரவாயில்லை. அட்லீஸ்ட் கை கொடுத்து உதவணும்!’’ சியர்ஸ் காட்டி முடித்தார் உதயகுமார்.

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick