டைட்டிலுக்கும், படத்துக்கும் தொடர்பு இருக்கணுமா என்ன?

றிஞர் அண்ணா அருகே அமர்ந்து பேசுவதாக, எம்.ஜி.ஆர் முத்தம் கொடுப்பதாக... நம்ம ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனைப் பிரதானப்படுத்தி இருக்கிறது ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தின் போஸ்டர்கள்! ‘வொய் திஸ் கொலவெறி?’ கேள்விகளுடன், இயக்குனர் திரைவண்ணனிடம் பேசினேன்.

‘’ ‘லிங்கா’ படத்தின் பிரச்னைகளை தான் இந்தப் படத்தின் கதை என்று ஒரு பேச்சு வந்ததே?”

“அப்படிக் கெளப்பி விட்டுட்டாங்க. இது ஜாலியான படம். அம்மாவுக்குச் சாப்பாடு இல்லை, தங்கச்சிக்குத் தாவணி இல்லை, தம்பிக்கு சைக்கிள் இல்லைனு பிதுக்கிக் பிதுக்கி கண்ணீர் வரவைக்காம, வந்தோமா ஜாலியா சிரிச்சுட்டுப் போனாமானு ஒரு படம் பண்ணியிருக்கேன். மிர்ச்சி சிவாவும், பவர் ஸ்டாரும் புகுந்து விளையாடியிருக்காங்க. மத்தபடி ‘லிங்கா’வுக்கும் இதுக்கும் தொடர்பே கிடையாது. ஒரு அரசியல்வாதியை வில்லனாப் பார்க்குறீங்க. போலீஸ்காரரை வில்லனாப் பார்க்குறீங்க. வக்கீலை வில்லனாப் பார்க்குறீங்க. அதேமாதிரி, ஏன் ஒரு சினிமா நடிகரை மக்கள் வில்லனா பார்க்கக்கூடாது?னு யோசிச்சதுதான் இது. ‘உங்ககிட்ட கொடுத்தா, மத்தவங்களுக்குக் கொடுப்பீங்க!’னு நம்பிக்கையிலதான் கடவுள் அத்தனை செல்வத்தைக் கொடுக்குறார். அந்தக் கடவுளை ஏன் ஏமாத்துறீங்கனு கேள்வி கேட்டுருக்கேன்!”

‘’ஆனா, படத்தோட விளம்பரங்கள் எல்லாம் அரசியல் மயமா இருக்கே?”

“சினிமாதான் கதை! அண்ணாவும், எம்.ஜி.ஆரும் சினிமாவுல இருந்துதான் முதல்வர் ஆயிருக்காங்க. இவங்களை அரசியல்வாதிங்களா பார்க்காம, சினிமாக்காரங்களா பார்த்தா, என் போஸ்டர்களோட அர்த்தம் புரியும். நான் பிளான் பண்ணிப் பண்ணலை. சினிமாவோட பேக்ரவுண்டுதான் என் படத்தோட உச்சம். எம்.ஜி.ஆர்., அதுக்குத்தான் கொடுத்திருக்கார் பவர் ஸ்டாருக்கு முத்தம்!

‘பவர் ஸ்டாரு’க்கு எம்.ஜி.ஆர் முத்தம் கொடுக்கிறதை உறுத்தலா ஃபீல் பண்றீங்களா?

எம்.ஜி.ஆரை எங்க தாத்தா நேசிச்சாரு, எங்க அப்பா நேசிச்சார். நானும் நேசிக்கிறேன். என்னோட ஒரிஜினல் பெயரே ராமச்சந்திரன்தான். சினிமாவுக்காக ‘திரை வண்ணன்’ ஆனேன். ஆக, நான் ரசிச்ச ஒருத் தரை நான் தான் மக்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்கணும்.. இன்னைக்கு இருக்கிற பல நடிகர்கள் சி.எம் கனவுல இருக்காங்க. ஆனா,

எம்.ஜி.ஆரும், அண்ணாவும் மக்களால அரசியலுக்கு வந்தவங்க. மகத்தான சாதனைகள் செஞ்சவங்க! ஆனா, இன்னைக்கு எத்தனைபேரு இவங்க படத்தை வெச்சிருக்காங்க? மறந்த தலைவர்களை நான் ஞாபகப்படுத்துறேன்!”

‘’இதுக்கும் ‘அட்ரா மச்சான் விசிலு’க்கும் என்ன சம்பந்தம்?”

“டைட்டிலுக்கும், படத்துக்கும் தொடர்பு இருக்கணுமா என்ன? சினிமா சம்பந்தமான கதைனு சொல்லிட்டேன். இந்தக் கதைக்கு ஆடியன்ஸ் விசில் அடிப்பாங்கனு நம்பிக்கையில, ‘அட்ரா மச்சான் விசிலு’னு டைட்டில் வெச்சிருக்கேன். ஆக்சுவலா, ‘சிம்மக்கல் சேகர்’னுதான் டைட்டில் வெச்சிருந்தோம். டைட்டிலைப் பார்த்து ‘டப்பிங் படம் மாதிரி இருக்கு. ரவுடி படம் மாதிரி இருக்கு’னு ஏகப்பட்ட கமெண்ட்ஸ் வந்ததுனால, மாத்திட்டோம்!”

“ஃபேஸ்புக்ல உங்களுக்குனு ஒரு ‘தொண்டர்கள் படை’ வெச்சிருக்கீங்க போல?”

“அதுவா... மதுரை அலப்பறை! ‘நேர்மைக்குப் பிறந்தநாள்’, ‘உண்மைக்குப் பிறந்தநாள்’, ‘பாசத்துக்குப் பிறந்தநாள்’னு தம்பிங்க விதவிதமா போஸ்டர் அடிச்சிருந்தாங்க. நான் காசு சம்பாதிச்சதைவிட, அன்பை அதிகமா சம்பாதிச்சிருக்கேன். என் அன்புக்கு இவங்கெல்லாம் அடிமையா இருக்காங்க. இது எனக்குச் சந்தோஷம்தான். ஆனா, இது உருவாக்குன கூட்டம் கிடையாது. தானா உருவான கூட்டம். ஃபேஸ்புக்குக்கு வரும்போது அனாதையா வந்தேன். இப்போ 5000 நண்பர்கள் சேர்ந்து ஹவுஸ்ஃபுல் ஆக்கிட்டாங்க!”

‘’பவர் ஸ்டார் ஏற்கெனவே ஒரு கட்சியில இருக்கிறவர். உங்க பட போஸ்டரையெல்லாம் அவர் அரசியல் விளம்பரத்துக்குப் பயன்படுத்திட்டா?”

“நல்ல விஷயத்துக்குப் பயன்படுத்துனா கேட்கமாட்டேன். சந்தோஷப்படுவேன். அதே, தப்பா பயன்படுத்தணும்னு நினைச்சா, முதல்ஆளா நான்தான் எதிர்த்துக் கேள்விகேட்பேன். ‘என்ன இப்படியெல்லாம் பண்றீங்க?’னு போனைப் போட்டு, திட்டுவேன்!”

‘’படத்துல ‘பவர் ஸ்டார்’ பேசுற பன்ச் டயலாக் ப்ளீஸ்?”

‘நான் பார்க்கத்தாண்டா காமெடி. பத்தவெச்சா சரவெடி!’

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick