ஆந்திரா பவர் ஸ்டார் உருவான கதை!

ஸ்லீப்பர் செல்லாய் தெலுங்கு சினிமாவுக்குள் இருந்துகொண்டு தெலுங்கு சினிமா உலகத்தை நக்கலும் நையாண்டியும் செய்வதில் ‘பர்னிங் ஸ்டார்’ சம்பூர்னேஷ் பாபுவின் படங்கள் முன்னோடி. அப்படிப்பட்ட சம்பூர்னேஷ் பாபுவைத் திரை உலகுக்கு அழைத்து வந்து உருவாக்கி ஆளாக்கிவிட்ட மனிதர் யார் தெரியுமா? ஸ்டீவன் ஷங்கர்! ஒரிஜினல் பெயர் சாய் ராஜேஷ். ஆனால், ஹாலிவுட் டைரக்டர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் நம் ஊர் டைரக்டர் ஷங்கர் மீது உள்ள காதலால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டவர். ஆளை மடக்கிப் பிடித்துப் பேசினால் செம ஜாலி வாலா...

‘‘ஆந்திராவின் நெல்லூர் என் ஊர். சின்ன வயசில் இருந்தே சிரஞ்சீவியின் கொலவெறி ரசிகன் நான். அவரை வைத்துப் படமெடுக்க வேண்டும் என்பது என் ஆசை. ஹைதராபாத்துக்கு எக்கச்சக்கக் கனவோடு ஓடி வந்தேன். ஆனால், சினிமா வாய்ப்பு அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. நிறையப் படங்களில் உதவி இயக்குநராக சேர்த்துக்கொள்வார்கள். ஆனால், முழுப்படம் வரை வைத்துக்கொள்ள மாட்டார்கள். சிரஞ்சீவியைத் தவிர சிலர் படங்களில் வேலை பார்த்தபோது கசப்பான அனுபவங்கள் கிட்டின. அந்த நேரத்தில் ஓய்வு கிடைக்கும்போது நிறையத் தெலுங்கு சினிமாக்களை யூ-டியூபில் பார்ப்பேன். பெரிய பெரிய ஹீரோக்களின் சீரியஸான காட்சிகளைப் பார்த்தே விழுந்து விழுந்து சிரிப்பேன். அந்த வீடியோக்களை அதிகம் பேர் பார்த்து ரசித்திருப்பார்கள். சீரியஸ் காட்சிகளை காமெடியாகப் பார்க்கும் மக்கள் எனக்கு எதையோ உணர்த்தினார்கள். இதையே ஒரு சுமார் மூஞ்சி ஹீரோ சீரியஸாய் செய்யும் எல்லா விஷயங்களையும் நாம் ஏன் கிண்டல் பண்ணி சிரிக்க வைக்கக் கூடாது என யோசித்தேன். சீக்கிரமே அப்படி ஒரு சினிமாவையும் ஹீரோவையும் உருவாக்கத் திட்டமிட்டேன். என் சினிமாவுக்கான பட்ஜெட் 15 லட்சத்தைத் தாண்டக் கூடாது என்பதிலும் தீர்மானமாக இருந்தேன். அப்படி செய்தால் யூ-டியூப் மற்றும் சேட்டிலைட் ரைட்ஸ் மூலமாக சம்பாதிக்கலாம் என்பது என் ஐடியா. அதைச் செய்தும் காட்டினேன்’’

 

‘‘அதெல்லாம் இருக்கட்டும் பாஸ்... எங்க ஹீரோ சம்பூர்னேஷ் பாபுவை எப்படிப் பிடிச்சீங்க?’’

‘‘அதைத்தான் சொல்லப்போறேன். நண்பர்களின் 10 லட்சம் ரூபாயோடு ஹீரோவைத் தேடிக்கொண்டிருந்தபோது ஒருவரை பிரசாத் ஸ்டுடியோவில் பார்த்தேன். தட்டையாகப் பார்க்க குள்ளமாக வினோதமாக இருந்தார். ஆளை மடக்கி என் கனவுப்படத்தைப் பற்றிச் சொல்லி நடிக்கச் சம்மதமா எனக் கேட்டேன். ஆள் பயப்படுவார் என்று எதிர்பார்த்த எனக்கு, ‘நீங்க சொன்னீங்கனா நடு ரோட்டில் ஜட்டியோடுகூட நடிக்கிறேன் சார்!’ என்றார். இது போதாதா? சம்பூர்னேஷ் பாபுவுக்குப் பிறந்தநாள் கொண்டாடினோம். அன்று ‘ஹ்ருதய காலேயம்’ படத்தின் போஸ்டர் வெளியிட்டோம். வெறுப்பேற்றும் பட்டப்பெயரை யோசித்து ‘பர்னிங் ஸ்டார்’ என வைத்தேன். ஏனென்றால் அன்னிக்கு செம வெயில். ஃபேஸ்புக், ட்விட்டரில் டீம் போட்டு உட்கார்ந்து நாலு பேரின் கண்ணில் படும்படி ஷேர் செய்துகொண்டு இருந்தோம். எங்களது சினிமா போஸ்டரை டைரக்டர் எஸ்.எஸ் ராஜமௌலி பாஸிட்டிவாக ஷேர் செய்திருந்தார். அது போதாதா? வைரலானோம். 3 நாட்களில் 10 லட்சம் பேர் பார்த்திருந்தார்கள். உடனே கொரில்லா வார் ஸ்டைலில் படப்பிடிப்பை ஆரம்பித்தோம்.

 

ஷூட்டிங் லொக்கேஷன், போலீஸ் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தால் தேவுடு காக்க வேண்டும் என்பதால், 5டி கேமராவில் கேண்டிட் ஸ்டைலில் அதிரடியாய் முக்கியமான இடங்களில் மக்களைத் தொந்தரவு செய்யாமல் மளமளவென ஷூட் செய்தோம். 40 சதவிகிதப் படம் முடிந்த பிறகுதான் 5டி கேமராவில் எடுத்த காட்சிகளில் தெளிவு இல்லை என்பதை உணர்ந்தோம். டைரக்டர் மாருதி, ஷூட் செய்த காட்சிகளைப் பார்த்து அவர் இன்னும் தெளிவாக எடுக்க ஃபைனான்ஸியலாய் உதவி செய்தார். நானும் கூடுதலாக 20 லட்சத்தைப் போட்டு ரெட் எபிக் கேமராவில் ஷூட் செய்தோம். ஃபேஸ்புக் தோழியான காவ்யா குமாரை ஹீரோயினாகப் போட்டு 90 லட்சத்தில் படத்தை எடுத்து முடித்தேன். படத்தின் டீஸர், போஸ்டர்கள் இணையத்தில் வைரலானதால் சேட்டிலைட் ரைட்ஸும் தியேட்டர் ஏரியாக்களும் ஓரளவு விற்றன. ‘ஹிருதய காலேயம்’- ‘எ கிட்னி வித் எ ஹார்ட்’ என்ற டேக்லைனோடு படத்தை ரிலீஸ் செய்தேன். சாதாரண திருடன் ஹீரோவான கதையை மக்கள் ரசித்தார்கள். சம்பூர்னேஷ் பண்ணும் விஷயங்கள் எல்லாம் எப்படி காமெடியாக இருக்கிறது என்று காட்டுவதன் மூலம் தெலுங்கு சினிமாவின் ஆக்‌ஷன் காட்சிகளை விமர்சனம் பண்ணி இருந்தேன். சிலர் கடுமையாக என்னைத் தாக்கினார்கள். ஆனால், நானும் சம்பூர்னேஷும் அடுத்த லெவலுக்குப் போய்விட்டோம். இப்போது ‘பெத்தராயுடு’ படத்தின் அடுத்த வெர்ஷனாக ‘ஆண்ட்ராய்டு’ படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.’’

முடியல பாஸ்!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick