“பேய் ஆசை நிறைவேறிடுச்சு!”

‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ - சுந்தர்.சி தயாரிப்பில் எஸ்.பாஸ்கர் இயக்கும் ஹாரர் காமெடி படம். சுந்தர்.சி இயக்கும் படங்களில் காமெடி பட்டையைக் கிளப்பும் என்பது தெரியும், இது அவர் தயாரிக்கும் படம் என்பதால் செமத்தியான காமெடி சரவெடியாய் இருக்கும் என நம்பலாம்.. இந்த படத்தின் இரண்டு ஹீரோயின்களில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷிடம் ஒரு குட்டி சாட்டிங்...

“ ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ எப்படி வந்திருக்கு?”

“ படம் ரொம்பவே நல்லா வந்துருக்கு. இது ஒரு பக்காவான பொழுதுபோக்குப் படமா இருக்கும். ஹீரோ வைபவ், நான், ஓவியா மட்டுமில்லாமல் வி.டி.வி.கணேஷ், கருணாகரன், சிங்கம் புலி, சிங்கப்பூர் தீபன், ‘தேனடை’ மதுமிதா என காமெடிப் பட்டாளமே படத்தில் இருக்கு.  பெரியவங்க மட்டுமல்லாமல் குழந்தைகளோடு குடும்பமாப் போய் நல்லாச் சிரிச்சுட்டு வரலாம். கோடை விடுமுறை சமயத்தில் வருவதால் குழந்தைகளுக்கும் செம என்டர்டெயின்மென்ட் காத்துகிட்டு இருக்கு. இந்தப் படத்தில் முதல் முறையாக செம குத்து டான்ஸ் ஆடியிருக்கேன். மக்களோடு சேர்ந்து அதை ஸ்க்ரீனில் பார்க்க நானும் காத்திருக்கேன். மொபைல் போனை மையமாகக்கொண்ட ஹாரர் ஸ்க்ரிப்ட், கண்டிப்பாக இது ஒரு வித்தியாசமான படமாகவும் இருக்கும்!”

“முதல் முறையாக பேய் படத்தில் நடிச்சுருக்கீங்க போல...?”

“ஆமாம், எனக்கு ரொம்ப நாளாகவே பேய் படத்தில் நடிக்கணும் என்ற ஆசை இருந்துச்சு. ஆசைப்பட்ட மாதிரியே ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வரவும் நான் ரொம்பவே ஹேப்பி. அதுவும் கதையில், ஹாரர் காமெடி என இரண்டு அம்சங்களுமே நிறைஞ்சு இருந்தது.”

“படத்தில் இரண்டு ஹீரோயின்கள். உங்களுக்கு முக்கியத்துவம் இருக்கா?”

”நிச்சயமா. எனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தைச் சிறப்பா நடிச்சுக் கொடுப்பதில் ரொம்பவே அக்கறையா இருப்பேன். இந்தப் படத்தில் ஓவியா இன்னொரு ஹீரோயினா நடிச்சிருக்காங்க. அவங்களும் அவங்க  கதாபாத்திரத்தில் சூப்பரா நடிச்சுருக்காங்க. இரண்டு கதாபாத்திரங்களுமே முக்கியமான கதாபாத்திரங்கள்தான்.”

“ இன்ட்ரஸ்டிங்கா இருக்கே, படத்தில் உங்கள் கதாபாத்திரத்தைப் பற்றிச் சொல்லுங்க...”

“ நான் டெலி மார்க்கெட்டிங் பண்ற பெண்ணா நடிக்கிறேன். ரொம்பவே ஜாலியான கலகலப்பான ஒரு கதாபாத்திரம். இதுக்கும் மேலே பேசினால் கதையை உளறிடுவேன் போலயே....!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick