போடுங்கம்மா ஓட்டு!

ம்ம நாட்டுலதான் வித்தியாச வித்தியாசமா ஓட்டுக் கேட்பாங்க நம்ம அரசியல்வாதிங்க. அதிலயும் வட இந்தியா வெறித்தனம் பாஸ். இதோ சாம்பிளுக்கு சில...

பஞ்சாப் மாநிலத்தில் இருக்கிற குட்டிக் கட்சியான பாரதீய சைதன்யா கட்சி (பா.ஜ.க அல்ல) சிட்டிங் எம்.எல்.ஏ ஷாம் லால் காந்தி கடந்த தேர்தல்ல தன்னோட சின்னமான டி.வி-யை (அதாவது பிக்சர் ட்யூப் இல்லாத வெறும் கவரை) தன் தலையில் மாட்டிக்கொண்டு அமிர்தசரஸ் நகரம் முழுவதும் சைக்கிளில் வலம் வந்து வாக்கு சேகரித்திருக்கிறார். 

2014-ல் மகாராஷ்டிராவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மும்பை தெற்குப் பகுதியில் சுயேட்சை வேட்பாளராக நின்ற கௌரவ் சர்மா செம குசும்புப் பார்ட்டி. வாக்கு சேகரிக்க ஸ்பைடர் மேன் காஸ்ட்யூமில் தான் போனார்.  ஹீரோயிஸமாக அங்கே இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பைப்பைப் பிடித்து மேலே ஏறி ஜன்னல் வழியாக வெளியில் இருந்தபடி கை கொடுத்து வித்தியாசமாய் அந்தரத்தில் தொங்கியபடி  வாக்கு சேகரித்தார். காரணம் அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் ‘ஜன்னல்’. படிகளையோ லிஃப்ட்டையோ இந்த ஸ்பைடர் மேன் பயன்படுத்தவில்லை. குறிப்பாக கயிறு போன்ற பாதுகாப்பு உபகரணங்களையும் கொண்டு செல்லவில்லை.

கேரளாவில் கொச்சி அருகில் கிலம்பழம் பஞ்சாயத்தில் இருக்கும் ‘கிடெக்ஸ் க்ரூப்’ என்ற டெக்ஸ்டைல் மில் கம்பெனி ஊழியர்கள் 8000 பேர் ஒரே நாளில் ஆளும் கட்சிக்கு எதிராக அரசியலில் குதித்தார்கள். ‘ட்வென்டி 20’ என்று தங்கள் அமைப்புக்கு பெயர் வைத்து சுயேட்சை வேட்பாளராக 20 வார்டு கொண்ட பஞ்சாயத்துத் தேர்தலில் களமிறங்கி 17 பேரை ஜெயிக்க வைத்து கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையையே தகர்த்துத் தண்ணி காட்டினார்கள். வீடு வீடாகப் போய் வீட்டு வேலைகள் செய்தும் லோன் வாங்கிக் கொடுத்தும் இதை சாதித்ததாக சொல்கிறார்கள்.

அதே கேரளாவின் திரிச்சூர் நகராட்சியில் நாடாளுமன்றத் தேர்தலில் நின்ற ஜாஸ்மின் ஷா என்ற ஆண் நர்ஸ் வீடு வீடாக தன் தொகுதி மக்களைச் சந்தித்து மருத்துவ உதவிகளைச் செய்து கொடுத்தார். சில வீடுகளில் வயதானவர்களைக் குளிப்பாட்டி சென்டிமென்டாய் டச் செய்தார். தன்னுடைய நண்பர்கள் 300 பேருடன் தொகுதி முழுக்க அவர் ‘டச்’ செய்த மக்களின் எண்ணிக்கை 3 லட்சம் பேர்.

டார்ஜிலிங்கில் 2014 மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக நின்ற பாய்சங் பூட்டியா தினமும் தெருக்களில் மக்களுக்கு ஃபுட்பால் விளையாடக் கற்றுக் கொடுத்து ஓட்டுக் கேட்டு ஈர்த்தார். ஆனாலும் பந்து காலை வாரிவிட்டது.

நம்ம மோடிஜியின் விசுவாசிகளான காவி பாய்ஸின் ஓட்டு சேகரிக்கும் மோடி மாஸ்க் டெக்னிக்கை சொல்லவும் வேண்டுமோ?

- ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick