அம்மா லாஜிக்!

ம் அம்மாக்கள் எல்லோரும் அவர்களுக்கென லாஜிக் வைத்திருப்பார்கள். எப்படினா...

டி.வி-யில் எந்த நடிகரின் பாடலாவது தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டால், அந்த நடிகர் இறந்துவிட்டாரோ என சந்தேகப்பட்டு செய்தி சேனலை மாற்றுவார்கள். பாவம்...

‘ஒன்று வாங்கினால் 50 ரூபாய், இரண்டு வாங்கினால் 90 ரூபாய்’ போன்ற ஆஃபர்கள் கண்ணில்பட்டால், அந்தப் பொருள் தேவையே இல்லை என்றாலும் இரண்டு கிலோ வாங்கிப் போடுவார்கள். போனா வராதுல்ல...!

‘நைட் ஸ்டடி, குரூப் ஸ்டடி’ போன்ற வார்த்தைகள் நம் வாயில் இருந்து வந்தால், நம் வாயிலேயே விளக்கமாறைக் கொண்டு அடிப்பார்கள். இது நம் தாயின் தவறு அல்ல, தமிழ் சினிமாவின் தவறு.

நாம முதல் பெஞ்சில் உட்கார்ந்தால் நன்றாகப் படிக்க ஆரம்பித்துவிடுவோம். கேபிளை கட் செய்தால் ஸ்கூல் ஃபர்ஸட் வருவோம் என அநியாயத்துக்கு நம்புவார்கள். குக்கரில் இருந்தால்தானே கரண்டியில் வரும்கிறேன்...

நாம மிலிட்ரி கட்டிங்கே வெட்டிட்டுப் போனாலும் நம் அம்மாக்களின் கண்களுக்கு ‘காதலர் தினம்’ குணால் கட்டிங் போலத்தான் தெரியும். இதுக்கு மேலயும் வெட்டினா, தலை தபேலா மாதிரி வழுவழுனுதான் இருக்கும்.

வீட்டுக்குள் ஒளித்து வைக்க வேறு இடமே இல்லாதது போன்று, காசைக் கடுகு டப்பாவில்தான் ஒளித்து வைப்பார்கள். உண்மையில் அந்தக் கடுகு டப்பாவைத் தேடுறதுக்குள்ளே கடுப்பாகிடும்.

சமையல் குறிப்பு நிகழ்ச்சிகள் பார்ப்பது என்பது குறிப்பெடுத்துக்கொள்ளவும், அதில் வரும் சட்டு முட்டு சாமான்களைப் பார்ப்பற்கு மட்டுமே, அதை சமைக்க முயற்சி செய்வதற்கு அல்ல. குறிப்புகள் எழுதி ஒன்பது நோட்டுகள் தீர்த்தாச்சு. ஆனால், ஒண்ணுகூட சமைச்சது கிடையாது.

சிம்பு, எஸ்.ஜே.சூர்யா போன்றோர்கள் நம் பிஞ்சு மனதில் நஞ்சை விளைவிக்கக் கூடியவர்கள்னு நினைப்பாங்க. அவர்களின் படங்களைப் பார்த்தால் பருப்பு மத்தால் அடிப்பார்கள். ஆல் மம்மிஸ் இப்படித்தான்...

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick