க்ளைமாக்ஸ்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

மிழ் சினிமாவில் க்ளைமாக்ஸ் காட்சியில் எப்படி கலர் கலரா ரீல் ஓட்டுறாங்கனு பார்க்கலாமா பாஸ்...

சாமிப் படங்களுக்கு ஸ்டாண்டர்டா ஒரு க்ளைமாக்ஸ் வெச்சிருக்காங்க. தீய சக்தியான வில்லன் கடவுளையே அழிக்க ப்ளான் போட்டு யாகம் நடத்திக்கொண்டிருப்பார். ஹீரோவுக்கு அம்மை போட அவர் வீட்டில் படுத்து ரெஸ்ட் எடுப்பார். ஹீரோவுக்கு குணமாகவும் தீய சக்தியை அழிக்கவும் தீச்சட்டி எடுப்பார் ஹீரோயின். கோயில் முன்னால் மிஷ்கின் படத்து பாட்டு சீன் போல மஞ்சள் சேலை கட்டி பெரிய கண்ணை உருட்டி அவர் ஆட, ஹீரோவைத் தாக்கியிருக்கும் அம்மை கொஞ்சம் கொஞ்சமாக குறையும் அதிசயம் நடக்கும். திடீரென தீ என்கிற பெயரில் சீரியல் பல்புகளை ஜாலியா மிதிச்சி அம்மா தாயே அகிலாண்டேஸ்வரின்னு கத்த கடவுள் என்ட்ரியாகி உடுக்கை சவுண்டில் ஆக்ரோஷமா ஓர் ஆட்டத்தைப் போடுவார். கடைசியாகக் கையில் இருக்கும் சூலாயுதத்தைத் தூக்கி வீச அது தீய சக்தியின் உடம்பில் குத்த அவர் கிராஃபிக்ஸில் காணாப்பொணமாகிடுவார்!

பேய்ப் படங்களில் நன்மை செய்யும் பேய்களுக்கு ஒரு மாதிரியும் தீமை செய்யும் பேய்களுக்கு ஒரு மாதிரியும் ரெண்டு விதமான க்ளைமாக்ஸ் வெச்சுருக்காங்க. கெட்ட பேய்கள் வந்தால் கண்டிப்பா அன்னைக்கு அமாவாசையாகவோ, அல்லது பெளர்ணமியாகவோதான் இருக்கும். முக்கியமா வருசத்துக்கு ஒருமுறை வரும் சித்ரா பெளர்ணமி என்றால் பேய்கள் செம குஜாலாகிடும். ஏன்னா பல வருசமா காத்திருந்து கடுப்பாகிப்போன பேயால் அன்னைக்கு மட்டும்தான் ஹீரோவின் உடம்பில் நுழைந்து போன ஜென்மத்து ஆசையை நிறைவேற்ற முடியும். என்னென்னமோ செஞ்சு மந்திரவாதி அதை அடக்கினாலும் பார்ட் 2 எடுத்தே ஆகணும்கிற ஒரே காரணத்துக்காக பேயோட கட்டை அவிழ்த்து எஸ்ஸாக விடுவது ரொம்ப ஓவர் பாஸ்!

அனிமல்ஸ் நடிக்கும் படங்களில் வரும் க்ளைமாக்ஸ் காட்சியில் பேபி ஷாமிலி மாதிரி ஒரு குழந்தையை சொத்துக்காக வில்லன்கள் கடத்தி வைத்து மிரட்டுவார்கள். அந்தக் குழந்தையைக் காப்பாற்ற குரங்கு, நாய், ஆடு, யானை என்று ஒரு வண்டலூர் ஜூவே கிளம்பும். நாயும் குரங்கும் வில்லன் ஏரியாவுக்குள் அசால்ட்டாக நுழைந்து குழந்தையைக் காப்பாற்றி வெளியே கொண்டுவரும். வில்லன் குரூப் அதை கண்டுபிடித்துத் துரத்த, கொண்டு வந்த ஸ்பெஷல் வண்டியில் பிச்சிக்கிட்டு ஓடும் குரங்கு அண்ட் டீம். அம்பாஸிடர் காரின் வேகத்துக்கே ஈடு கொடுத்து ஓடும்னா பார்த்துக்கோங்க. திடீரென குரங்கு சூப்பர் ஸ்டார் ரஜினியாகவும் மாறும். தன்னை நோக்கி வரும் பாமை கரெக்டா கேட்ச் பிடித்து திருப்பி வீசும். தற்போதைய சூழ்நிலையில் இராமநாராயணன் மாதிரி மீண்டும் ஒரு இயக்குநர் வர மாட்டாரா என இந்த விலங்குகள் ஆவலோடு காத்திருக்கின்றன!

காமெடிப்  படங்களைப் பொறுத்தவரை ஹீரோவுக்கு டபுள் ஆக்‌ஷன் ரோல் கொடுத்திருப்பாங்க. ரெண்டு பேரும் இடம் மாறி இருப்பாங்க. அதில் ஒருவர் பெயர் ராஜா, இன்னொருவர் ராமு. வில்லன் கும்பல் ராஜாவைத் தேடி அலையும். க்ளைமாக்ஸில் ரெண்டு பேரையும் பிடிச்சு இருட்டு குடோனில் அடைச்சு  உண்மையான ராஜாவைக் கண்டுபிடிக்க முயற்சி பண்ணுவாங்க. அப்போ ராமு தன் பக்கத்தில் இருக்கும் பீர் பாட்டிலை உடைச்சு அதில் ஒரு சின்ன பீஸை எடுத்துக் கையைக் கட்டியிருக்கும் கயிறை மெல்ல அறுப்பார். அப்படியே ராஜாவையும் காப்பாற்றி, ரெண்டு பேரும் சேர்ந்து சண்டை போடுவாங்க. கூடவே  ஹீரோயின்களும் பறந்து பறந்து அடிப்பாங்கனா பார்த்துக்கோங்க. கடைசியில் சினிமா வழக்கப்படி போலீஸ் வந்து துப்பாக்கியைத் தூக்கி மூணு ரவுண்டு சுட்டு ஸ்டாப்-இட்னு படத்தை முடிச்சு வைப்பாங்க.

மல்லித்தூள், மிளகா, கரம் மசாலாவெல்லாம் ஜாஸ்தியா தூவி எடுக்கப்படும் ஃபேமிலி சென்டிமென்ட்  படங்களில் க்ளைமாக்ஸ் காட்சியில் தங்கச்சியை வில்லன் குரூப் கடத்திடுவாங்க. அதுவரை பொறுமையாக இருக்கும் மூணு அண்ணன்களுக்கும் பொத்துக்கிட்டு வரும் கோபம். வில்லனின் ரைஸ்மில்லுக்கே போய் வேட்டியை மடிச்சுக்கட்டி வைக்கோல், நெல்லு மூடையெல்லம் பறக்கவிட்டு அடியாட்களைப்போட்டு சாத்து சாத்துன்னு சாத்தி படத்தை முடிச்சு வெப்பாங்க!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick