ஸ்லிம்மா இருந்தாலும் பிராப்ளம்தான்!

குண்டா இருக்கிறது மட்டும் பிரச்னை இல்லை மக்களே, ஒல்லியா இருக்கிறதும் பெரிய பிரச்னைதான். ஒரு நாள் ஒல்லியா இருந்து பாருங்க, இது எல்லாத்தையும் அனுபவிப்பீங்க...

நம்ம வீட்டுக்கு நெய் பிஸ்கெட் விற்க வர்றவர்கூட ‘ஏம்பா தம்பி இவ்ளோ ஒல்லியா இருக்கே?’னு கேட்டுட்டுதான் போவார்.

பயணங்களின்போது நமது நிலைமை பர்கருக்கு இடையில் மாட்டிய சீஸ் போல பரிதாபமா இருக்கும்.

எப்படியாவது உடம்பை ஏத்தணும்னு ஜிம்லேயே தவம் கிடப்போம். கையில் சுண்டெலி இல்லை, சுண்டைக்காய்கூட எழுந்திருக்காது.

‘பீன்ஸ், காராசேவு, ஸ்லேட்குச்சி’னு தன் கற்பனைத்திறன் மொத்தத்தையும் கொட்டி நமக்குப் பட்டப்பெயர் வைப்பாய்ங்க.

நம்ம கையில தெரியற நாக்குப்பூச்சியைப் பார்த்துட்டு ஏதோவொரு பயபுள்ள, நாம ஸ்ட்ராங்கா இருக்கிறதா நினைச்சுக்கிட்டுத் தெரியும்.

வாட்ச் வாங்கினாலும் சரி, பெல்ட் வாங்கினாலும் சரி, சிடுக்கு நீக்கியைக் காயவெச்சு எக்ஸ்ட்ரா ஓட்டை போட வேண்டியது வரும்.

உடம்பு சரியில்லைனு டாக்டர்கிட்ட போனால், ‘எக்ஸ்ரேவே தேவையில்லை போல, எல்லா எலும்பும் அப்படியே தெரியுது’னு டாக்டரே கலாய்ப்பார்.

நாம சாப்பிடும்போதெல்லாம் நம் அம்மாக்கள் ‘கிள்ளிச் சாப்பிடாதடா நல்லா அள்ளிச் சாப்பிடு’னு சொல்லி தொடையிலேயே கிள்ளி வைப்பாங்க.

பந்தியில் சோறு வைக்கிறவர்கூட நம்ம உருவத்தைப் பார்த்து நம் இலையில் சோறு கம்மியா வைப்பார்.

காப்பு, வளையல், பிரேஸ்லெட்னு எதுவுமே நம்ம கைக்கு செட் ஆகாது. கையை பாக்கெட்டில் இருந்து வெளியில் எடுத்தால் கழண்டு விழுந்துடும்.

ஒவ்வொரு தடவை எடை பார்க்கும்போதும் ‘எடை மெஷின் ரிப்பேரா இருக்கோ’ங்கிற எண்ணம்தான் மண்டையில் உதிக்கும்.

காத்து பலமா அடிக்கிற நேரங்களில் ‘பறந்துடாதடா கம்பியைப் பிடிச்சுக்கோ...’னு கலாய்ப்பாங்க. இருந்தாலும் நமக்கும் கொஞ்சம் பீதியாதான் இருக்கும்.

நம்ம சைஸுக்கு டிரெஸ் சில சமயங்களில் குழந்தைகள் செக்‌ஷனில்தான் கிடைக்கும்னா பார்த்துக்கோங்களேன். அய்யகோ...

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick