பூம் பூம்...புதிய மனுஷி!

ஷோபியா ரோபோ...உலகைக் கலக்க வந்திருக்கும் நவீன எந்திர அழகி!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஆஸ்டின் நகரின் ‘ஹான்சன் ரோபாட்டிக்ஸ்’ நிறுவனத்தில் ஸ்டைலாய்க் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த ரோபோ மற்ற ரோபோ போல அல்ல.  கிட்டத்தட்ட ‘எந்திரன்’ படத்தில் நாம் பார்த்த சிட்டி ரோபோ போல அச்சு அசல் மனித உருவத்தைப்போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் பெண் ரோபோ. முகம் மற்றும் கழுத்தையும் சேர்த்து 62 நுட்பமான அசைவுகளைக் கொடுக்கக்கூடிய பெண். ‘ஃப்ரப்பர்’ எனப்படும் சிலிக்கான் தசைகளின் வழியே அப்படியே பெண்ணைப்போலவே சிணுங்கும், வெட்கப்படும், மெய்சிலிர்க்கும், உணர்ச்சி வசப்படும் என்று எல்லாமே செய்யும். கண்களில் இருக்கும் கேமராக்கள் அதி நுட்பமான சென்ஸார்களால் ஆனவை. ‘ஸ்பீச் ரெகக்னேஷன் சாஃப்ட்வேர்’ மூலம் பதில் அளிக்கும் வசதியும் கொண்டுள்ள அதிநவீன கியூமனாய்டு ரோபோ! அதாவது எளிதில் எதிரில் பேசுபவர்களின் வார்த்தைப் பிரயோகங்களையும் அதன் வேகத்தையும் வைத்து மூடுக்கேற்ப பெண்ணைப்போலவே உடல்மொழியை வழங்க வல்லது.  2003-ல் ஹான்சன் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்த டேவிட் ஹான்சன் என்ன சொல்கிறார் தெரியுமா?

‘’இது நீங்கள் நினைப்பது போல காபி போடவோ தீம் பார்க்கை சுத்தம் பண்ணவோ தயாரிக்கவில்லை. ஷோபியாவை நான் என் மனைவி ஆட்ரேய் ஹெப்பர்ன்னைப் போலவே வடிவமைத்திருக்கிறேன். தவறாக எண்ண வேண்டாம். அவரைப்போல மிக சுதந்திரமான சுயமாக முடிவெடுக்கக்கூடிய தன்மைகளைக் கொண்டவள்தான் ஷோபியா’’ என்கிறார்.

‘’ எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்வதும், படிப்பதும், பிசினெஸ் தீர்வுகளைச் சொல்வதும் என் பணியாக இருக்கும். எது சரி என என் மனம் நினைக்கிறதோ அதை அப்படியே சொல்லிவிடுவேன். மனிதனை என்னால் மிஞ்ச முடியும்!’’ என நிமிர்ந்த மெட்டல் நடையும் நேர் கொண்ட சென்ஸார் பார்வையுமாகச் சொல்கிறாள் ஷோபியா!

வெல்கம்!

- ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick