புத்தம் புது பூ பூத்ததே!

குளிர்காலத்திற்கும் கோடைகாலத்திற்கும் இடையே வரும் காலத்தை வசந்தகாலம் என்கிறோம். இந்த வசந்தகாலத்தை வரவேற்பதற்காக, உலகெங்கும் உள்ள இணைய இதயங்கள் இணைந்து தங்கள் தாடியைப் பூக்களால் அலங்கரித்துக்கொண்டார்கள். அத்தனை விஷயத்திற்கும் ஹேஷ்டேக் போட்டு ஃபேஸ்புக்கில் நாம் டிரெண்ட் ஆக்குவதுபோல, இன்ஸ்டாகிராம் வலைதளத்தில், இந்த தாடி அலங்காரம்தான் சமீபத்திய வைரல்!

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலர், அடர்ந்து வளர்ந்த தங்கள் தாடியில் செய்த மலர் அலங்காரங்கள் ஆசம் ரகம்! பூக்களைப் பெண்களின் அலங்காரப்பொருளாக மட்டுமே நினைத்துக்கொண்ட பெண்களுக்குப் போட்டியாக ‘நாங்களும் வைப்போம்ல!’ எனக் களமிறங்கிய இவர்கள், ரோட்டோரச் செடி, கொடிகளின் பூக்களைப் பறித்து தாடியில் செருகிக்கொள்வது. வேலைமெனக்கெட்டு மலர்களை வெட்டி, ஒட்டி அலங்கரித்துக்கொள்வது. மலர்களோடு, அதற்கு மேட்ச்சான சாயத்தையும் சேர்த்து தாடியில் தடவிக்கொண்டு தங்கள் வித்தையைக் காட்டியது... என வெரைட்டி விருந்து படைத்திருக்கிறார்கள். ஷேவிங் செலவு மிச்சமென யோசித்த சிலபேர், ‘இதை ஏன் வசந்தகாலம் முடியும்வரை தொடரக்கூடாது?’ எனக் கலை ஆர்வம் கொண்டவர்களாகவும், இயற்கையை ஆராதிப்பவர்களாகவும் இயல்பாகவே நடித்திருக்கிறார்கள்!

சரி விடுங்க. காமெடியோ, சீரியஸோ... இயற்கையின் பருவநிலை மாற்றத்தை வரவேற்கிற மனசு இருக்கே. அதான் பாஸ் கடவுள்!

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick