டெரர் பாடகி!

‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது!’- இந்த வார்த்தைகள் ‘ஃப்ளாரென்ஸ் அண்ட் தி மெஷின் ராக்’ பேண்ட் பாடகி ஃப்ளோரன்ஸ் வெல்சுக்கும் பொருந்தும். லண்டனைச் சேர்ந்த இந்தப் பாடகியின்  ஆல்பங்கள் எல்லாமே இணையத்தைக் கலக்குபவை. அதற்குக் காரணம் சர்ரியலிஸம் தெறிக்கும் காட்சியமைப்புகள் மற்றும் உயிரை அதிர வைக்கும் இசையும்தான். ‘லங்ஸ்’ என்ற இவருடைய முதல் ஆல்பம் 2009-ல் ரிலீஸ் ஆகி ஒட்டுமொத்த இங்கிலாந்தையும் ஃப்ளோரன்ஸ் ஜூரத்தில் நடுங்க வைத்தது. ‘செரிமோனியல்ஸ்’, ‘ஹௌ பிக்’, ‘ஹௌ ப்ளூ’, ‘ஹௌ பியூட்டிஃபுல்’ என அடுத்தடுத்த ஆல்பங்கள் அமெரிக்காவின் டாப் ஒன் ஆல்பங்களாக இன்றுவரை பட்டையைக் கிளப்புபவை.

குருதி தெறிக்கும் காட்சிகள், ஆண்-பெண் உடல், விபத்துக் காட்சிகள் மற்றும் வல்லுறவை அசைவில் உணர்த்தும் நடன அமைப்பு எல்லாமே வினோதமானவை மட்டுமல்லாமல் ஒன்றுக்கு ஒன்று தொடர்பே இல்லாதவை. கற்பனை செய்து பார்க்க முடியாத அந்தக் காட்சிகளால் அதிகம் பேசப்படுபவர் ஃப்ளோரென்ஸ்.

அதென்ன ‘ஃப்ளாரென்ஸ் அண்ட் தி மெஷின்’ என இப்படி ஒரு பெயர்?

‘முதல்முறையாக குழுவிற்கான பெயர் வைக்க யோசித்தபோது அருகில் என்னுடன் பாடும் என் தோழி இசபெல்லா இருந்தாள். நான் மெஷின் அதாவது ரோபோ என செல்லமாக அவளை அழைப்பேன். அதனால் அவள் பெயரையும் சேர்த்து வைத்துவிட்டேன். ஆனால், என் கல்ட்டான வீடியோக்களைப் பார்த்து என்னை மெஷின் என நினைக்கிறார்கள் என் ரசிகர்கள்!’ என்கிறார் ஃப்ளோரென்ஸ்.

ஃப்ளோரென்ஸ் அண்ட் தி மெஷின் கிறுக்குப் பிடிக்க வேண்டுமானால் https://www.youtube.com/user/FlorenceMachineVEVO என்ற தளத்திற்கு ஒருமுறை கண்ணையும் காதையும் கொடுங்கள்!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick