செல்ஃபி ஜாக்கிரதை!

‘கும்தலக்கடி கும்மாவா, செல்ஃபினா சும்மாவா!’னு டான்ஸைப் போட்டுக்கிட்டே செல்ஃபி எடுக்கிறது சரி. ஆனால், சீறும் பாம்புக்குப் பக்கத்துல நின்னு செல்ஃபி எடுத்துக்கிட்டு கொத்து வாங்குறது, சிவனேனு சும்மா கிடக்கிற பூனையைச் சீண்டிவிட்டு செல்ஃபி எடுக்கிறேன்னு கடி வாங்குறதுனு அலப்பறையைக் கொடுத்தா, அதுங்க சும்மா விடுமா? இதோ, உலகம் முழுக்க செல்ஃபி எடுக்கிறப்போ, மற்ற உயிரினங்களிடம் பல்பு வாங்கிய மனிதர்கள்!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் எருதுகளை விட்டு மனிதர்களைத் துரத்தவிடுவது ஒருவகை விழா. இதில் கலந்துகொண்ட கிறிஸ்டியன் என்பவர், எருதுகள் தன்னைத் துரத்திவருவதை செல்ஃபி போட்டோ மற்றும் வீடியோவாக எடுத்திருக்கிறார். மற்றவர்களையெல்லாம் ஏனோ தானோவெனத் துரத்திய எருதுகள் செல்ஃபி எடுத்துக்கொண்டே ஓடிய கிறிஸ்டியனை மட்டும் குறிவைத்துத் துரத்திக்கொண்டிருந்தன. விழுந்து, புரண்டு எருதுகளிடமிருந்து தப்பித்தவர், நேராகச் சென்றது மருத்துவனைக்கு. ஏனெனில், ஓடிய ஓட்டத்தில் அடி கொஞ்சம் ஓவராம்! #ஆனாலும் கெத்துதான்!

பாம்பைப் பார்த்தா படையே நடுங்கும்னு சொல்றதெல்லாம், அந்தக் காலம். அமெரிக்காவில் சான் பிரான்ஸிஸ்கோ நகரைச் சேர்ந்த டாட் பாஸ்லர், விஷப்பாம்புக்குப் பக்கத்துல போய் செல்ஃபி எடுத்துத் தொலைக்க, ஒரே போடா போட்டிருக்கு! அப்புறம்? அடிச்சுப் பிடிச்சு ஆஸ்பத்திரிக்குப் போனதால, உயிர் தப்பித்தார். ஆனா, காப்பாத்துறதுக்கு ஆன செலவு, 95 லட்சம் ரூபாய்! #போச்சா!

பேரும் தெரியாம, ஊரும் தெரியாம வாட்ஸ்-அப்ல சுத்திக்கிட்டு இருக்கு ஒரு படம்! தேன்கூட்டுக்குப் பக்கத்துல போனோமோ, ரசிச்சோமானு இல்லாம, கெத்தா செல்ஃபி எடுத்திருக்கிறார் ஒருவர். தேனீக்கள் என்ன மூடுல இருந்துச்சோ தெரியலை! மூஞ்சிக்கு நேரா மொத்தமா பறந்துவந்து கொத்திட்டுப் போக, மனுஷனுக்கு முகம் பப்பாளிப் பழமா பழுத்ததுதான் மிச்சம்! அப்பவும் மனுஷன் அசரலையே... தேனி கொட்டுவதற்கு ‘முன்/பின்’னு அதையும் சமூக வலைதளங்களில் உலவவிட்டிருக்கார்! #கெத்து காட்டுறாராம்!

ஃபுளோரிடாவில் இருக்கும் பொழுதுபோக்குப் பூங்காவுக்குப் போன, பிரையன் ஜெனெஸ்ட் என்ற சிறுவன், அங்கிருந்த அணிலுக்குப் பக்கத்துல செல்ஃபி எடுத்திருக்கார். ‘அணில் நம்மை என்ன பண்ணிடப்போகுது?’னு எகத்தாளம்! விடலையே... பையனோட டி-ஷர்ட்டைக் கவ்விப் பிடிச்சு மிரட்ட, தம்பி அலறியடிச்சு ஓடியிருக்கான். காயம் எல்லாம் எதுவும் இல்லைதான். ஆனா, கரடியே காறித் துப்புன கதையா வரலாற்றுல நின்னுடுச்சே! #ரைட்டு!

இந்தோனேஷியாவில் இருக்கும் பாலித் தீவிற்கு சுற்றுலா வந்த ஒரு பெண், குரங்கு ஒன்றின் அருகே சிரித்தபடி போஸ் கொடுத்து செல்ஃபி எடுத்திருக்கிறார். செல்ஃபி எடுப்பதைப் பெரிதும் பொருட்படுத்தாமல், அந்தப் பெண்ணின் தலைமுடியைத் தடவிப்பார்த்துக் கொண்டிருந்திருக்கிறது குரங்கு. ‘ச்சே... செம மூவ்மென்ட் ஆச்சே’ என ஆர்வமாக அடுத்தடுத்த செல்ஃபியை எடுக்க ஆரம்பித்த அந்தப் பெண்ணின் தலைமுடியை, கொத்தாகக் கையில் பிடித்து அலறவிட்டிருக்கிறது குரங்கு. #போவியா...!

பால் சோடர்ஸ் என்பவர், கரடிக்குப் பக்கத்தில் செல்ஃபி எடுக்கும் படத்தைப் பார்த்தாலே, அவர் கண்ணில் தெரியும் மரணபயம் நமக்கும் தெரியும். ஏதோ, கரடி பாவம் பார்த்து விட்டதால, மனுஷன் தப்பிச்சிருப்பார்.  அவ்வளவு ஏங்க... நம்ம கிம் கர்தாஷியனே செல்ஃபி எடுக்கிறதுக்காக, யானைக்குப் பக்கத்துல பவ்யமா நின்னுருக்காங்க! டென்ஷனான யானை, இழுத்துவிட்ட மூச்சுக்கே அம்மணி 300 அடி தூரத்துக்கு ஓடியிருக்காங்க! #பயம், அதானே எல்லாம்!

- கே.ஜி.மணிகண்டன்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick