சினிமாவில் வருகிறார் கால்பந்தின் கடவுள்!

பீலே! பிரேசிலில் பிறந்த ‘கருப்பு முத்து’, கால்பந்து விளையாட்டின் கடவுள் எனக் கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான்களாலேயே போற்றப்படும் மகா ஜாம்பவான். அவரது வாழ்க்கை  ‘பீலே : பெர்த் ஆஃப் எ லெஜண்ட்’ என்ற படமாகத் தயாராகிறது.

பீலேவின் அப்பா ‘டான்டினோ’ பிரபலமான கிளப் அணியின் கால்பந்தாட்ட வீரர். தன் மகன் பீலேவுக்கு தாமஸ் ஆல்வா எடிசனின் பெயரை சூட்ட நினைத்து ‘எட்ஸன்’ எனப் பெயர் சூட்டினார். ஆரம்ப காலங்களில் ‘எட்ஸன்’ என்ற பெயரோடுதான் பீலே வலம் வந்திருக்கிறார். அவருக்குப் பிடித்த உள்ளூர் கால்பந்து வீரரின் பெயர் பெய்லே, அதை ‘பீலே’ எனத் தவறாக உச்சரிப்பாராம். இதனால், அதையே அவருக்கு பட்டப்பெயராக நண்பர்கள் சூட்டியிருக்கிறனர்.

பீலே ஏழ்மையின் கரத்தைப் பிடித்துதான் வளர்ந்தார். சிறுவனாக இருக்கும்போதே டீக்கடைகளில் வேலை பார்த்திருக்கிறார். பீலேவின் அப்பா, சாக்ஸுக்குள் செய்தித்தாள்களைத் திணித்து பந்து போல செய்து, அதைக் கொண்டுதான் பீலேவுக்கு கால்பந்து கற்றுத் தந்திருக்கிறார். தன் நண்பர்களோடு இணைந்து கால்பந்து அணி ஒன்று உருவாக்கி விளையாடி வந்திருக்கிறார். ஷூ வாங்க காசு இல்லாமல் வெறும் காலில்தான் விளையாடுவார்கள். இதனால் அவர்கள் ‘ஷூலெஸ் ஒன்ஸ்’ என அழைக்கப்பட்டிருக்கிறார்கள். தனது 15-வது வயதில் உள்ளூர் ‘சான்டோஸ்’ அணிக்காக விளையாட ‘பீலே’வுக்கு வாய்ப்பு கிடைக்க, அறிமுகப் போட்டியிலேயே நான்கு கோல்கள் அடித்து அசத்தியிருக்கிறார். பிறகு நடந்ததெல்லாம் வரலாறு.

1,283 முதல் தர கோல்களை அடித்திருக்கிறார், அதில் பிரேசிலுக்காக அடித்த 77 கோல்களும் அடக்கம். இந்த நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரன், கால்பந்து விளையாட்டின் கடவுள் என அடுத்தடுத்து உச்சிகளை அடைந்தார். ‘பீலே’வுக்கு விளையாட்டாக இந்தப் பெயரைச் சூட்டியவர்கள் துளியும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். வரலாற்றில் தாங்கள் வைத்த பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்; அவரது வாழ்க்கை வரலாற்றைப் பேசும் படத்துக்கு சூட்டப்படும் என. சமீபத்தில்தான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. ஜெஃப் ஸிம்பெலிஸ்ட், மைக்கேல் ஸிம்பெலிஸ்ட் சகோதரர்கள் படத்தை இயக்குகிறார்கள். கெவின் டி பாலா, லியானார்டோ லீமா ஆகியோர் பீலே கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். பீலேவுக்கும் அவரது தந்தை டான்டினோவுக்கும் இருந்த உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு இசையால் உயிர் கொடுத்திருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். வாழும் வரலாற்றின் வரலாற்றைப் பற்றி பேசவிருக்கும் இந்தப் படத்தைப் பார்க்க உலகமே காத்திருக்கிறது. நீங்களும் பாருங்க பாஸ்!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick