“நாங்க கவுண்டமணி - செந்தில் ஆகணும்!

விஜய் டி.வி-யில் ‘கலக்கப்போவது யாரு?’ நிகழ்ச்சி பார்க்கிறவர்களுக்கு முல்லை கோதண்டம் ஜோடியை நல்லாத் தெரியும். ஒவ்வொரு எபிசோடிலும் அட்ராசிட்டி பண்ணும் இவர்களைச் சந்தித்தேன்.

முதலில் முல்லை, ‘‘என்னுடைய நிஜப்பெயர் தனசேகரன். சொந்த ஊர் திருவண்ணாமலை, படிச்சது தமிழ் இலக்கியம். டி.வி-க்கு வந்ததும் ஈஸியா ரீச்சாகிற மாதிரி ஒரு பெயர் தேவைப்பட நானே எனக்கு முல்லைனு வெச்சுக்கிட்டேன். 2003-ல் சன் டி.வி-யில் வந்த ‘சூப்பர் டென்’ நிகழ்ச்சியில் அறிமுகமாகி, பெப்பெர்ஸ் டி.வி, இன்னும் சில டி.வி-க்களில் நிகழ்ச்சிகள் பண்ணிக்கிட்டிருந்தேன். குறிப்பா ஜி தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘தூள் பறக்குது’ நிகழ்ச்சிக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுது. அதன் மூலம் விஜய் டி.வி-யில் ‘கலக்கப்போவது யாரு?’ சான்ஸ் கிடைக்க நானும் கோதண்டமும் சேர்ந்து கலக்கிக்கிட்டிருக்கோம். சமீபத்தில் நடிகர் சங்கத்தில் ஒரு மீட்டிங் நடந்துச்சு. மீட்டிங் முடிஞ்சு வெளியே வரேன். அந்த ஏரியா பசங்க எல்லோரும் டேய் முல்லைடானு கத்திக்கிட்டே வந்து என்கூட செல்ஃபி எடுத்தாங்க. அதே மாதிரி சமீபத்தில் சிங்கப்பூர் போயிருந்தேன். ஃப்ளைட்டில் ஒருத்தர் ‘அப்புறம் முல்லை... கலக்கப்போவது யாரு? ஃபைனல்ஸ் எப்போ?’னு கேட்கிறாரு. இப்படி முன்ன பின்ன தெரியாதவங்ககிட்ட இருந்தெல்லாம் பாராட்டுகள் குவியுது. நிறைய சினிமா வாய்ப்புகளும் வந்துக்கிட்டிருக்கு. நல்ல காமெடி நடிகர்னு பெயர் எடுக்கணும், அதுதான் டார்கெட்’’ என்றார்.

முல்லையைத் தொடர்ந்து கோதண்டம் பேசினார். ‘‘என்னுடைய முழுப்பெயர் கோதண்டராமன். சின்ன வயசுல இருந்தே எனக்கு நடிப்பு மேல ஆர்வம் அதிகம். ஆரம்பத்தில் கேபிள் டி.வியில் வேலை பார்த்தேன். அப்புறம் நடிக்கிறதோடு டான்ஸ், மிமிக்ரி, கதையும் எழுதுவேன். இயக்குநர் மகேந்திரன் சார் தலைமையில் என்னுடைய நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறேன். நான் பார்க்கிறதுக்கு டைரக்டர் பாலாவையும் காமெடியன் டெளசர் பாண்டியையும் சேர்த்து செஞ்சது மாதிரி இருப்பேன். அதனால ஏகப்பட்ட பிரச்னைகளையும்  சந்திச்சிருக்கேன். கொஞ்ச நாள் முன்னே பக்கத்து ஏரியா டீக்கடையில் ஃப்ரெண்ட்கூட நின்னு பேசிக்கிட்டிருந்தேன். என்னை பாலான்னு நினைச்சு, ‘நம்ம ஏரியா டீ கடைக்கு  பாலா வந்திருக்காரு’னு கொளுத்திப்போட கும்பலா கும்பலா வந்து கை கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அடுத்து என்ன படம் சார்?னு ஒருத்தர் கேட்க என்ன செய்றதுன்னு தெரியாம நான் முழிச்சிக்கிட்டிருந்தேன். அப்பறம் எல்லோருக்கும் தேங்க்ஸ்னு சொல்லிட்டு ஓடி வந்துட்டேன். எப்புடி சிக்கியிருக்கேன் பார்த்தீங்களா? இப்போ ‘பண்டிகை’, ‘50/50’னு  ஆறு படங்கள் பண்ணிக்கிட்டு இருக்கேன். கலக்கப்போவது யாரு? தொடரில் நானும் முல்லையும் சேர்ந்து செய்யும் காமெடி பெரிய அளவில் ஹிட்டாகியிருக்கு. அடுத்து சினிமாவில் ரெண்டு பேரும் சேர்ந்து ஜெயிக்கணும். கவுண்டமணி, செந்தில் கூட்டணி மாதிரி எங்க கூட்டணியும் பேசப்படும். அந்த நம்பிக்கை இருக்கு’’ என்றார்.

ஜெயிங்க பாஸ்!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick