ஜெயிச்சுட்டீங்க சென்!

ரெய்மா சென்...மூன் மூன் சென்னின் மகள். சுசித்ரா சென்னின் பேத்தி. ரியா சென்னின் அக்கா! ஆமா இவங்கள்லாம் யார்னு கேட்கிறீங்களா பாஸ்? பெங்காலி சினிமாவின் முக்கியமான நடிகைகள் குடும்பம். தங்கை ரியா சென் ‘தாஜ்மகால்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்துவிட்டுக் காணாமல் போனார். இப்போது ரெய்மா சென் முழுக்க முழுக்க மாற்று சினிமாக்களுக்கென தன்னை அர்ப்பணித்து அம்மா மற்றும் பாட்டியின் பெயரைக் காப்பாற்றி வருகிறார். ஆனால் அண்மையில் ரிலீஸாகி இருக்கும் ‘பாலிவுட் டைரிஸ்’ என்ற படத்தில் கொல்கத்தாவின் சோனாகஞ்ச் என்ற பகுதியில் வசிக்கும் பாலியல் தொழிலாளியாக போல்டாக நடித்திருக்கிறார். சோனா கஞ்ச்சிலிருந்து மும்பைக்கு நடிக்கும் ஆசையோடு வரும் பெண்ணாகப் பின்னி இருக்கிறார். டெல்லியில் கால் சென்டரில் வேலை பார்க்கும் ஓர் இளைஞன், பிலாயில் ரிட்டையர்டு ஆன ஓர் அரசு ஊழியர் மற்றும் ரெய்மா சென்னின் பாலியல் தொழிலாளிப் பாத்திரம். இந்த மூன்று கேரக்டர்களும் மும்பையில் சந்திக்கிறார்கள். அவர்களது பாலிவுட் கனவு நனவானதா என்பதுதான் கதை!

‘‘பாட்டி சுசித்ரா சென் போல பெரிய நடிகையாக நானும் என் தங்கையும் வர முடியவில்லை என்ற வருத்தம் அம்மா மூன் முன் சென்னிடம் இருந்தது. அவரது ‘தேவதாஸ்’ படத்தின் பார்வதி ரோல் போல என்னால் பண்ண முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன் அவர் இறந்தபோது நிச்சயம் பாட்டியின் பெயர் சொல்லும் நடிகையாக வரவேண்டும் என்பதை மனதில் வைராக்கியமாக வைத்துக்கொண்டேன். டைரக்டர் கே.டி.சத்யம் என்னிடம் இந்த கேரக்டரைப் பற்றிச் சொன்னதும் உள்வாங்கி நடித்தேன். சோனாகஞ்ச்சுக்கு விசிட் அடித்து அங்குள்ள பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகளுடன் செலவளித்த பொழுதுகளை மறக்க முடியாது. நிச்சயம் அந்தக் குழந்தைகளின் நலனுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணிப்பேன்!’’ என்கிறார் ரெய்மா சென்.

சூப்பர் சென்!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick