நோ சேஞ்ச்!

மாற்றம் என்ற சொல்லே மாறாதது. சூரியன் வடக்கே உதிச்சாலும் இந்த உலகத்திலே இன்னும் மாறாத விஷயங்கள் என்ன தெரியுமா?

‘மேடம் உங்ககிட்ட பேசணும்னு ஒரு வருஷமா ட்ரை பண்ணிட்டே இருந்தேன். இப்போதான் லைன் கிடைச்சிச்சு’ எனச் சொல்லும் அப்பாவி மியூஸிக் சேனல் நேயர்கள் இருக்கும் வரை சேனல்கள் அழியாது.

சில்லரைக்குப் பதில் ஹால்ஸ் மிட்டாய் கொடுப்பவர்கள் இருக்கும் வரை இந்தியா வல்லரசு ஆகும் வாய்ப்பு ரொம்ப கம்மிதான்.

எங்கேயோ தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இதை டைப் பண்ணிக்கொண்டிருக்கும்போது காதலைச் சொன்ன பையனிடம் ஒரு பெண் பதிலுக்கு, ‘நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கலை?’ என்ற புராதனக் கேள்வியை கேட்டுக்கொண்டிருக்கும்.

சென்னையின் ஒவ்வொரு சிக்னலிலும் ஓர் அவசரக்குடுக்கை தலை போகும் அவசரத்தில் டிராஃபிக் ரூல்ஸை மீறிக்கொண்டு போகும்.

‘இதுக்குதான் நான்லாம் ஓட்டே போடுறதில்லை’ எனப் பெருமைக்கு எருமை ஓட்டும் ஒரு ஜென்மம்.

குனிந்து உட்காராமல் மொத்த ஸ்கிரீனையும் முன்சீட்டில் உட்கார்ந்து மறைத்துக்கொண்டிருப்பார் ஒரு பயில்வான் அங்கிள்.

‘என் இத்தனை வருஷ டீச்சிங் எக்ஸ்பீரியன்ஸ்ல உங்களைப்போல மோசமான ஒரு க்ளாஸை நான் பார்த்ததே இல்லை. ரிடிக்குலஸ்!’ எனச் சொல்லாத க்ளாஸ் டீச்சரே இல்லை.

‘நாங்கள்லாம் அந்தக் காலத்துல தெருவிளக்கு வெளிச்சத்துல நின்னு படிச்சோம் தெரியுமா?’ எனக் கேட்டு மொக்கை போடாத சொந்தக்கார படிப்பாளிகள் இன்னும் இருக்கிறார்கள்.

‘தமிழ் சினிமாவுல எனக்குனு ஒரு இடம் இருக்கு’னு சொல்லாத உதவி இயக்குநர் கிடையாது.

அரை இன்ச்சுக்கு கோட்டிங் அப்பி இருந்தாலும் ‘மேக்-அப்பா..? சேச்சே... லைட்டா ஃபேஸ் வாஷ் மட்டும் பண்ணினேன். அவ்வளவுதான்!’ எனச் சொல்லும் பெண்கள் மாறவே மாட்டார்கள்.

படம் வர்றதுக்கு முன்னாடியே விமர்சனம் எழுதும் பாவாத்மாக்கள் இருக்கும் வரை தமிழ் சினிமா எப்படி உய்யும்?

பப்ளிக் டாய்லெட்டில் படம் வரைந்து பாகம் குறித்து பாலியல் வகுப்பெடுக்காத பிஞ்சிலே பழுத்ததுகள் இருக்கும் வரை...

இப்படிக் கட்டுரை என்றதும் எதையாவது கிறுக்கும் என்னைப் போன்ற ஆட்கள் இருக்கும் வரை எதுவுமே இங்கே மாறாது!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick