அன்றே சொன்னார் கேப்டன்!

க்கள் நலக் கூட்டணியில் கேப்டன் இணைந்துவிடுவார் என்பதை எப்போதோ குறியீடுகளாக உள் குத்து குத்தியிருக்கிறார் கேப்டன். எப்படினு கேட்கிறீங்களா?

கம்யூனிஸ்ட் என்றாலே நம் நினைவுக்கு வருவது சிவப்பு நிறம்தான். அதேபோல், படங்களில் கேப்டன் கோபத்தில் கொந்தளிக்கும் காட்சிகளில் கண்கள் சிவக்கும். சி.பி.ஐ-யும் மார்க்சிஸ்டும் எனது இரு கண்கள் என்பதைக் குறியீடாகப் பலமுறை உணர்த்தி இருக்கிறார் நம் கேப்டன். நாமதான் அதை சரியாப் புரிஞ்சுக்கலை...

‘தவசி’ படத்தில் வெறும் வாழைப்பழத்தை வைத்தே வடிவேலுவை செமையாக ஓட்டி ஓடவைப்பார் கேப்டன். வாழைப்பழத் தோலை உரித்து மேலே வீசி, கீழே, வீசி மறுபடியும் மேலே வீசி என வடிவேலுவைக் குழப்பிக் குதூகலமாவார் கேப்டன். அதையேதான் கருணாநிதி ‘பழம் நழுவிப் பாலில் விழும்’ எனக் காத்திருந்தவரை சுற்றவிட்டு பழத்தோலைக்கூட நழுவ விடாமல் மொக்கை பண்ணியிருக்கார் கேப்டன்.

‘கஜேந்திரா’ படத்தில் வரும் ‘கஜா வராண்டா...’ பாட்டில் கேப்டன் நடையாய் நடந்துகொண்டே இருப்பார். நாளை வைகோவுடன் இனைந்து நடக்க வேண்டும் என கேப்டன் முன்கூட்டியே சிந்தித்து எடுத்த பயிற்சிதான் அது. நம்மில் இது எத்தனைப் பேருக்குத் தெரியும்?

ஒரு படத்தில் கேப்டன் கையை முறுக்கிக்கொண்டு அடியாளின் முகத்தில் ஒரு குத்துவிடுவார். அந்தக் குத்தில் தாடை, தவுடா நொறுங்குவதை எக்ஸ்ரேவாக நமக்குக் காட்டுவார்கள். அடி சும்மா இடி மாதிரி விழுந்ததற்கு கேப்டன் கையில் அணிந்திருக்கும் மோதிரமும் ஒரு காரணம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் சின்னமும் மோதிரம்தான். எப்பூடி?

‘நானே ராஜா நானே மந்திரி’ படத்தில் கேப்டன்தான் ஹீரோ. இதில் இருந்தே நான் ராஜா (கிங்) என்பதை குறிப்பால் உணர்த்தியிருக்கிறார் கேப்டன். அதேபோல், தன்னை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டதால்தான் ம.ந.கூ-வில் இணைந்திருக்கிறார்.

சண்டைக்காட்சிகளில் கேப்டன் எப்போதும் இடது காலை சுவற்றில் வைத்து, வலது காலால் அடியாட்களை அடித்துத் துவம்சம் செய்வார். இதில் இருந்து கேப்டன் என்ன சொல்ல வர்றார்னா, ‘இடதுசாரிகள்தான், வலது கையில் லட்டு வைத்திருக்கிறேன் ஏன்னா தமிழன் என்று சொல் அதனால தான் இதைச் சொல்லிக்கொள்கிறேன் என்பதை சொல்லிகொள்கிறேன்’. புரிஞ்சுச்சா?

இந்தக் குறியீடுதான் மிக முக்கியமானது. ‘சின்னகவுண்டர்’ படத்துல சின்னப்புள்ளத்தனமா சுகன்யா வயித்துல பம்பரம் விடுவார் கேப்டன். பம்பரம் ம.தி.மு.க-வின் சின்னம். கண்டிப்பா கேப்டன் வைகோ இருக்கும் கூட்டணியில் இடம் பெறுவார் என்பதை அப்பவே குறியீடா சொல்லிட்டதா பல பேர் இந்த காட்சியைத்தான் சாட்சியா சொல்றாங்க!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick