சிங்கிளாப் போகாதீங்க!

காதலன்/காதலி கைகோர்த்துச் சுற்ற பல இடங்கள் இருக்கு. ஆனா, கமிட் ஆகாத பசங்களும், பொண்ணுங்களும் எங்கே போவாங்க? எங்கேயும் போகலாம்தான்! ஆனா, போகக் கூடாத சில இடங்கள் இருக்கு. அவை...

கோயில்: கோயிலுக்குப் போனா, புண்ணியம்தான்! ஆனா, ஒருசில பார்த்தாக்கள், தங்களோட தேனடைகளோடு காதல் வெற்றிக்காக அங்கப்பிரதட்ஷனம் செஞ்சுக்கிட்டு இருப்பாங்க. சில மலர் டீச்சர்களோ, தங்களோட ‘ஜார்ஜ்’களுக்குத் திருநீறு பூசி, வராத வெட்கத்தை வர வெச்சு கண்ணாலேயே காமெடி ‘பிரேமம்’ ஓட்டுவாங்க. சிங்கிளா போனா என்னாகும்? நமக்கு நாமேதான் விபூதி அடிச்சுக்கணும்!

தியேட்டர்: வெள்ளிக்கிழமை படத்துக்கு ரெண்டு வாரம் முன்னாடியே புக் பண்ணியிருந்தா, வீ ஆர் வெரி ஸாரி! நீங்க நினைச்ச படத்தை நிம்மதியா பார்க்கவே முடியாது. காதலனோடு முக்காடு போட்ட காதலி, காதலனோடு கை கோர்த்தபடி இருக்கும் காதலி, காதலி சாப்பிடும் பாப்கார்னை ரொமான்ஸாகப் பார்க்கும் காதலன், முத்தக்காட்சிக்கு சொக்கிச் சிரிக்கும் காதலன்னு பல படங்கள் தியேட்டருக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கும். ஸோ... புகைபிடிப்பது மட்டும்தான் உடல்நலத்திற்குக் கேடுனு இல்லை. காதுல புகை வர்றதும் களேபரம்தான்!

பைபாஸ் ரோடு: படங்கள்ல பைக்குல சுத்துற மாதிரி பார்த்த பாடல் காட்சிகளையெல்லாம், பைபாஸ் ரோட்டுல நேரடியாவே பார்க்கலாம்! எனக்குதான் வண்டி ஓட்டத் தெரியுமேனு பைக் எடுத்துக் கிளம்பினா ‘சிங்கிளா வண்டி ஓட்டுற ஆள்’ நீங்களா மட்டும்தான் இருப்பீங்க மக்கழே! அதையும் மீறி, தாராவைத் தேடுறேன். நித்யாவைத் தேடுறேன்னு கியரை முறுக்கினா, எங்கே செல்லும் இந்தப் பாதைதான்!

மொட்டமாடி: மனசைத் தேத்திக்கோங்க! இங்கதான் காதல் செலவே இல்லாம செலிபரேட் ஆகுது. வெளியே போனா, வில்லங்கத்தோட திரியற விருமாண்டிகள், கச்சிதமா கணிச்சு, பொத்தி வெச்சு மல்லிகைப் பூக்களை கரெக்ட் பண்ணி வெச்சிருப்பாங்க. லவ்வர்ஸ் டே-க்கு என்ன பண்றது? மொட்டமாடியில காதல் கொடி ஏத்துறதைத் தவிர வேற வழி? ஆக, நான்தான் துணி காயப்போடப் போவேன்னு வாளியைத் தூக்குறது, மொட்டைமாடியில படிச்சாதான் மண்டையில ஏறும்னு மாடிப்படி ஏறுறதுனு திரியிற வரை... சிங்கிள்ஸுக்கு அங்கே என்ன வேலை?

பீச்: கடலோரம் வாழும் காதல் பறவைகளுக்கான வேடந்தாங்கல் பாஸ் இது! சிங்கிளா வந்தா, சங்கு விற்கலாம், சுண்டல் விற்கலாம், ஒரு மொழம் பூ வாங்கிக்கோங்கனு நீட்டலாம். வாக்கிங் போறதும், ஜாக்கிங் போறதுமா இருந்தீங்கனா... வயித்தெறிச்சலோடதான் வீட்டுக்கு வரணும்!

ஆக, என்னதான் பண்றது சிங்கிள்ஸ்? டி.வி நிகழ்ச்சிகளைப் பாருங்க, அம்மா வைக்கிற கோழிக்குழம்பை ஒரு கை பாருங்க. நல்லா ரெஸ்ட் எடுங்க... முக்கியமா, சோட்டா பீம் பாருங்க!

- தா.நந்திதா, நா.மரகதமணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick