சொம்பு பிரசாரம்!

ங்கே பார்த்தாலும் தேர்தல் பற்றியே பேச்சு. டி.வி-யைத் திறந்தால் எப்போதும் நான்கு பேர் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்றே விவாதம். இந்தத் தேர்தல் வைரஸ் நம் சினிமா நடிகர்களை மட்டும் தாக்காமலா இருக்கும்? இதோ நம்ம ‘நாட்டாமை’ விஜயகுமார் பி.ஜே.பி கட்சியில் சேர்ந்துட்டார். சரி, நாட்டாமை பிரசாரம் எப்படி இருக்கும்னு மைண்ட்ல ஓட்டிப்பார்த்தேன்!

எட்றா வண்டியை: காலை பிரசாரத்திற்குக் கிளம்பும்போது, கார் டிரைவரிடம் இப்படித்தான் ஆரம்பிப்பார்.

தாத்தா நான் பார்த்தேன்: பிரசாரக் கூட்டத்துக்கு மேடை, லைட், மைக், இத்யாதிகள் எல்லாம் ரெடி, ஆனால் பேச்சைக் கேட்கத்தான் ஆள் கிடைக்கலை. பத்துபேர்கூட இல்லாத மீட்டிங்கில் எப்படிப் பேசுவது என்று நாட்டாமை ஹோட்டலிலிருந்து கிளம்ப மறுக்கிறார். ‘ஐயா, நான் பார்த்தேனுங்க, 58 பேர் இருக்காங்க’ என்கிறார் ஒருவர். அதற்கு நாட்டாமை ‘நீ பி.ஜே.பி-யில என்ன பொறுப்புல இருக்கிற?’ எனக் கேட்க, அவர்  ‘மாவட்டச் செயலாளருங்க’ என்கிறார். ‘அப்படின்னா நான் நம்ப மாட்டேன், செல்லாது செல்லாது’ எனச் சொல்லிவிட்டு மீசையை முறுக்குகிறார். அடுத்து வந்த ஒருவர், ‘ஐயா நான் பார்த்தேனுங்க, உங்களையும் சேர்த்து 44 பேர் இருக்காங்க’ என்கிறார். நாட்டாமையை ஏமாற்ற முடியுமா? ‘நீ கட்சியில என்ன பொறுப்புல இருக்கே?’ எனக் கேட்க, ‘ஒன்றிய து.இ.செயலாளருங்க’ என்றார் அவர். உடனே, ‘செல்லாது செல்லாது’ என்று மறுத்துவிட்டு, கம்பளியை எடுத்துப் போர்த்திக்கொள்கிறார் நாட்டாமை. ‘தாத்தா நான் எண்ணிப் பார்த்தேன், 120 பேர் இருக்காங்க’ என்ற சிறுவனின் குரல் கேட்டு நம்பி ஃபுல் மேக்கப்பில் கூட்டத்துக்கு வருகிறார் நாட்டாமை. ஆனால் கூட்டத்தில் மொத்தம் 12 பேர் மட்டுமே இருப்பதைப் பார்த்து, ‘பிஞ்சு மனசுல நஞ்சைக் கலந்துட்டீங்களே’னு ஃபீல் பண்றார்.

நிறுத்துரா: ஜரூராய்ப் பிரசாரக் கூட்டம் நடந்துகொண்டிருக்கிறது. மணி 9:30 ஆனவுடனே டாஸ்மாக் மூடிடுவாங்களேன்னு கூட்டம் கலைய ஆரம்பிக்கிறது. ஆனால் அதைப் புரிந்துகொள்ளாமல் பேச்சாளர் பேசிக்கொண்டே இருக்க, நாட்டாமை டென்சாகி, ‘நிறுத்துரா’ என்று கத்த, கூட்டம் தலை தெறிக்க ஓடுகிறது.

அன்னம் தண்ணி புழங்கக் கூடாது: நம்ம நாட்டாமை கம்பீரமாக வீற்றிருக்கும் பிரசார மேடையில் பி.ஜே.பி தலைவர்கள் பேசிட்டு இருக்காங்க. அதில் ஒருத்தர் ‘பாரத் மாதாக்கீ ஜே’னு சொல்லாமல் பேச்சை முடித்துவிடுகிறார். நாட்டாமைக்கு வந்ததே கோபம், ‘நம்ம தேசம்டா, நம்ம ஸ்லோகன்டா, அதை எப்படிடா சொல்லாமல் விட்டே, உன்னை 18 வருஷத்துக்கு அரசியலை விட்டு விலக்கி வைக்கிறேன். அதையும் மீறி தேர்தலில் நின்னா, 18 பட்டியைச் சேர்ந்த யாரும் அவருக்கு போஸ்டர் ஒட்டக் கூடாது, ஓட்டுக்கு காசு வாங்கக் கூடாது. அப்படியே வாங்கினாலும் ஓட்டுப் போடக் கூடாது. அதை மீறி, ஓட்டுப் போடறவங்களையும் அரசியலிலிருந்து ஒதுக்கி வைக்கிறேன்’. இப்படியே போனா, பி.ஜே.பி சார்பா டி.வி-யில் பேசுற நாலு பேர் மட்டும்தான் கட்சியில இருப்பாங்க!

வழக்கு இருக்கிற வீட்டுல அன்ன ஆகாரம் சாப்பிட மாட்டேன்:  பிரசாரத்தின் இடையே பி.ஜே.பி பிரமுகர் வீட்டுக்கு சாப்பிட அழைத்துச் செல்கின்றனர். அந்தப் பிரமுகர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதால் வழக்கு இருக்கிற வீட்டுல அன்ன ஆகாரம் சாப்பிட மாட்டேன் என்று கிளம்புகிறார். ஆனாலும் பசி வயிற்றைக் கிள்ள, ‘சரி கண்ணு என்ன வழக்குனு சொல்லு, சாதாரண வழக்கா இருந்தால் டிபன் மட்டும் சாப்பிடறேன்’ என்று இறங்கி வருகிறார். மா.செ தயங்கிக்கொண்டே, ‘இவர் மேலே இவரே வெடிகுண்டு வீசிக்கிட்டாரு’ என்று சொன்னதைக் கேட்டு, மயங்கி விழுகிறார் நாட்டாமை.

இதுக்கு மேல யோசிச்சா, மூளை குழம்பிடும்னு பதறியடிச்சு எழுந்திரிச்சுட்டேன்!

- வி.எஸ்.சரவணன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick