இந்தப் பூனை வேற மாதிரி!

பூனைகள் பொதுவா எதைத் திருடும்? பாலைத் திருடும். மீறிப்போனா மீனைத் திருடும். ஆனா நியூசிலாந்தில் ஒரு பூனை விவகாரமா உள்ளாடைகளைத் திருடியிருக்கு. நியூசிலாந்தில் கிழக்கு ஹாமில்டன் பகுதியில் சாரா நாதன் என்ற பெண் வசிக்கிறார். இவர் வீட்டில் ஆறு வயதில் அம்சமா பெண் பூனை ஒண்ணு இருக்கு, எப்போதும் அது துருதுருன்னே இருக்கும். அந்த ஏரியாவில் இருக்கும் வீடுகளில் கடந்த இரண்டு மாதங்களாகக் கொடியில் காயப்போடும் உள்ளாடைகள் தொடர்ந்து காணாமல் போய்க்க்கொண்டே இருந்தன. உள்ளாடைகளுக்கு அடுத்தபடியாக ஷூ, சாக்ஸ்களும் காணாமல் போக, என்னடா நடக்குது இங்கே என்று குழம்பியவர்கள், அந்தத் திருடனைக் கண்டுபிடிக்க தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார்கள்.

இவங்க வெச்ச பொறியில் வகையாக சிக்கினார் பூனையார். கடந்த இரண்டு மாதங்களாக ஒவ்வொரு ஐட்டமா நைசா லவட்டிக்கொண்டு போய் தன்னுடைய பொந்தில் பதுக்கி வைத்திருக்கிறது அந்தப் பூனை. பொந்தை சோதனை செய்ததில் 11 உள்ளாடைகளும், 50 சாக்ஸ்களும் சேர்த்து ஒரு மினி ஜவுளிக்கடையே இருந்திருக்கிறது. ‘என்ன சாராம்மா இப்படி ஒரு திருட்டுப் பூனையை வளர்த்து வெச்சிருக்கீங்களே?’னு சுற்றி இருந்தவங்க மானத்தை வாங்க வேறு உள்ளாடைகளை வாங்கித்தருவதாகச் சொல்லி இருக்கிறார் சாராம்மா. இதில் முக்கியமான மேட்டர் என்னன்னா அந்தப் பெண் பூனை திருடிய அத்தனையும் ஆண்களின் உள்ளாடை. ‘நான் ஈ’ மாதிரி இந்தப் பூனைக்கும் ஏதாவது ஃப்ளாஷ் பேக் இருக்குமோ?

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick