அஸ்வின் ட்வீட்டரிலும் கெத்துதான்!

விச்சந்திரன் அஸ்வின், இந்திய அணியின் மிக முக்கியமான வீரர். களத்தில் பந்துவீசி எதிரணியினரைத் திணறவைப்பது போல, ட்விட்டரிலும் தம்மைக் கலாய்ப்பவர்களைத் திருப்பிக் கலாய்த்துத் திணறடிப்பார். சாம்பிளுக்கு..


அத்னன் குர்ஷித் என்ற ட்வீட்டர், ‘அஸ்வின் பெளலிங் போடும் ஸ்டைல் சட்டவிரோதமானது. பி.சி.சி.ஐ எங்கேடா?’ எனக் கொந்தளிக்க, அஸ்வினோ கூலாக ‘துபாய்ல’ என ஒரே வார்த்தையில் க்ளீன் போல்டு ஆக்கினார்.

இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டியின் ரவுண்டு ஒன்றில் பங்களாதேஷ் அணியும் ஓமன் அணியும் மோத நேர்ந்தது. அப்போது அஸ்வின் தன் ட்விட்டர் பக்கத்தில் ‘பங்களாதேஷ், ஓமன் மோதும் போட்டியைப் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன். இந்தப் போட்டியில் வங்காளதேசம் வென்றால் அந்த நாடு மகிழ்ச்சியில் திளைக்கும். ஒருவேளை ஓமன் ஜெயித்தால் கிரிக்கெட்டே மகிழ்ச்சியில் திளைக்கும்’ எனத் தெறியாய் ட்வீட்டில் திரி கொளுத்திப் போட, பங்களாதேஷ் ரசிகர்கள் அஸ்வின் மீது கொலைவெறியில் திரிந்தனர்.

இது சமீபத்தில் நடந்த சம்பவம். அனாஸ் ஷேக் எனும் பங்களாதேஷ் ரசிகர் ‘அஸ்வினே, டஸ்கின் அகமது அழகான பெளலிங் ஆக்‌ஷன் கொண்டவர். ஆனால், அவருக்கு ஐசிசி பந்துவீசத் தடை விதித்திருக்கிறது. ஆனால், உங்கள் பெளலிங் ஆக்‌ஷனோ கேவலமாக இருக்கிறது. ஆனாலும், இன்னும் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறீர்கள். ஏதோ சமாச்சாரம் இருக்கு...’ என ட்வீட்டினார். இதற்கு அஸ்வின் அளித்த பதிலுரை ‘ஆக்‌ஷன் கேவலமாக இருக்கிறதை முயற்சி செய்தும் என்னால் மாற்ற முடியலை. ஆக்‌ஷன் விதிமுறைக்குட்பட்டு இருக்காங்கிறதுதான் முக்கியம். அழகா இருக்கிறது முக்கியமில்லை’.

நடந்து முடிந்த ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் தோனி சிக்ஸர் அடித்து மேட்சை முடித்தார். அதைப் பார்த்த அஸ்வின் ‘நாம எல்லோரும் பஸ்ல போறதுக்குப் பதிலா, தோனி அடிச்ச பந்தில் உட்கார்ந்து போனால், ட்ராஃபிக் இல்லாமல் வீடு போய் சேர்ந்துடலாம்’ எனக் கூறியிருக்கிறார். இதைப் பயிற்சியாளர் ஸ்ரீதர் தனது பேஜில் ட்வீட்டியிருந்தார்.

ஆஸ்திரேலியர்கள் அவர்கள் நாட்டு மைதானத்தை அவர்களுக்கு அதாவது வேகப்பந்துக்கு சாதகமாகத் தயார்படுத்தி வைத்துக்கொண்டு, எதிரணியினரை வறுத்தெடுப்பார்கள். இதே வழியைப் பின்பற்றி, சென்ற ஆண்டு இறுதியில் நடந்த இந்தியா-தென்னாப்பிரிக்க டெஸ்ட் போட்டிகளில் மைதானங்கள் இந்திய அணிக்கு சாதகமாக அதாவது சுழல்பந்துக்கு சாதகமாகத் தயார்படுத்தப்பட்டது. இதனால், தென்னாப்பிரிக்க வீரர்கள் அஸ்வின், ஜடேஜா மற்றும் மிஸ்ரா சுழலில் சிக்கி சின்னாபின்னமானார்கள். இதைப்பார்த்து கடுப்பான ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ராட்னி ஹாக், ‘அஸ்வின் கண்ணாடியில் உன்னைப்பார்த்து நீயே சொல்லிக்கொள். நீ எடுத்த விக்கெட்டுகள் உனக்கு சாதகமாகத் தயார் செய்யபட்ட மைதானத்தில் எடுத்தவையே’ என ட்வீட்டியிருந்தார்.

அதற்கு அஸ்வின், ‘கண்டிப்பா, ஆனால், நாம் இரண்டு பேரும் ஒரே கண்ணாடியைப் பகிர்ந்துக்கலாமா? இல்லை இரண்டு கண்ணாடிகள் வாங்கவா?’ என கிண்டலடிக்க, ராட்னி வாயடைத்துப் போனார்.

இதேபோல் சாம் ரிச்சர்டு என்பவர் ‘அஸ்வின் உள்நாட்டில் நன்றாகப் பந்து வீசுகிறார். வெளிநாடுகளில் அவர் வேஸ்ட்’ என ட்வீட்ட, கடுப்பான அஸ்வின் ‘டேய், போய் புள்ளகுட்டியைப் படிக்க வையிடா... உன்னைக் கேட்டுதான் விளையாட வந்தேனா?’ என தமிங்கிலீஷில் ட்வீட்டி தெறிக்கவிட்டிருக்கிறார். ஆமாம் மக்களே, அஸ்வின் தமிழனேதான்...

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick