கல்யாணமே விளையாட்டுதான்!

‘ஏபிசிடி’ படத்தில் பஸ் கண்டக்டராக இருக்கும் வடிவேலு ஒரு பொண்ணுகிட்ட ‘இந்தாளு உனக்கு எத்தனையாவது’னு கேட்க ‘ஏழாவது’னு சொல்வாங்க. இது காமெடிக்கு. ஆனால் நிஜத்தில் ஏகப்பட்ட திருமணங்களை முடித்து விவாகரத்தும் செய்த ஆளுங்கதான் கீழே... 

கலிபோர்னியாவில் இருக்கும் க்ளின் வோல்ஃப் என்ற தாத்தா கல்யாண மன்னனாக இருந்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக 29 பெண்களைத் திருமணம் முடித்தவர், அதில் 28 பேரை விவாகரத்தும் செய்திருக்கிறார். இவர்களில் ஒரு பெண்ணுடன் அதிகபட்சமாக 11 வருடங்களும், குறைந்தபட்சமாக இன்னொரு பெண்ணுடன் 19 நாட்களும் வாழ்ந்திருக்கிறார். க்ளினுக்கு 19 குழந்தைகளும், 40 பேரக்குழந்தைகளும் அந்தப் பேரக்குழந்தைகளுக்கு 19 குழந்தைகளும் இருக்கிறார்கள். இப்படி ஒரு மகத்தான சாதனையை நிகழ்த்தியதால், உலகில் அதிகமாகத் திருமணம் செய்த ஆண் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 89 வருடங்களாக இப்படிக் கல்யாண விளையாட்டு விளையாடியிருக்கிறார். ‘மார்க்கெட்டில் விலை போகாம இருக்க நான் என்ன முத்தின கத்தரிக்காவா’ எனத் தெம்பாகக் கேட்கிறார் க்ளின் தாத்தா.

இதே மாதிரி அமெரிக்காவின் லிண்டா வோல்ஃப் என்ற பாட்டியும் கல்யாண கலாட்டாவில் ஈடுபட்டிருக்கிறார். ஒட்டுமொத்தமாக லிண்டா பாட்டி 24 பேரைத் திருமணம் முடித்திருக்கிறார். அடிப்படையில் இவர் ரொமான்ஸ் விரும்பியாம். முதல் முறையாக 1957-ல் தன்னுடைய 16 வயதில் 31 வயது ஜார்ஜ் ஸ்காட்டைத் திருமணம் முடித்து தன்னுடைய இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கிறார். அதிகபட்சமாக ஒருவருடன் ஏழு வருடங்கள் வாழ்ந்திருக் கிறார். குறைந்தபட்சமாக ஒருவருடன் 36 மணி நேரம் மட்டும் வாழ்ந்திருக்கிறார். குறிப்பிடத்தக்க விஷயம் ஜாக் கர்லே என்பவரை மூன்று முறை திருமணம் செய்து மூன்று முறையும் டைவர்ஸ் வாங்கியிருக்கார் (ஏன்ன்ன்ன்?). தன்னுடைய 24 கணவர்களில் கடைசி ஆளை மட்டும் பப்ளிசிட்டிக்காக கட்டிக்கொண்டதாக லிண்டாவே ஒப்புக்கொண்டிருக்கிறார். இவருக்கு மொத்தம் ஏழு குழந்தைகள். இவரின் இந்தச் சாதனைகளை புக் ஆஃப் ரெகார்ட் பதிவு செய்திருக்கிறது.

என்னை மாதிரி பேச்சுலர்ஸ் சாபம் உங்களைச் சும்மா விடாது!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick