அழகான இரட்டைக்கிளவி!

ரே மாதிரி இருக்கும் இரட்டையர்களில் பூனம் மற்றும் பிரியங்கா சகோதரிகள் செம ஹாட் மச்சி! தஞ்சாரா ஃபில்டர் காபி விளம்பரத்தில் இந்தச் சகோதரிகள் போட்ட ஃபியூஷன் ஆட்டம் செம வைரல். பரத நாட்டியத்தையும் ஹிப் ஹாப் வெஸ்டர்ன் டான்ஸையும் அழகாக மிக்ஸ் செய்து இவர்கள் ஆடும் ஆட்டம் போன வருடத்திய வைரல். ஐஸ்வர்யா பச்சன் நடித்த ‘தால்’ படத்தின் ‘ரம்தா ஜோகி’ என்ற பாடலுக்கு இவர்கள் போட்டிருக்கும் ஆட்டம்தான் இந்த ஃபியூஷன் டான்ஸ் விளம்பரத்துக்கான ஐடியாவாம்! ‘யாரும்மா நீங்க?’ என இணையத்தில் உலாவிப் பிடித்தால் கடகடவென கொட்டுகிறார்கள்.

‘‘எங்களுக்கு 24 வயசு ஆகுது. பூர்வீகம் இந்தியாவின் குஜராத் என்றாலும் பிறந்தது சிகாகோவில். சின்ன வயசுல இருந்தே பரதம்னா ரொம்பப் பிடிக்கும். எங்கள் குடும்ப நண்பர் மோகனா சுவாமி தமிழர்தான். அவர் மூலம் பரதநாட்டியம் கற்றுக்கொண்டு முத்ரா டான்ஸ் அகாடமியில் சேர்ந்தோம். அம்மா எப்போதும், ‘பரதத்துக்கும் நம் இந்திய பாரம்பர்யத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது’ என்று சொல்வார். அதை அனுபவப்பூர்வமாக கற்றுக்கொள்ளும்போது உணர்ந்தோம். ஃபியூஷன் நடனத்தைக் கொண்டு இணையத்தைக் கலக்க முடிவெடுத்தோம். லொக்கேஷன்களுக்காக மெனக்கெடவே இல்லை. வீட்டின் கிச்சன், பெட்ரூம் என நாங்கள் இயல்பான இடங்களில் ஆடி கேண்டிட் ஸ்டைலில் படம் பிடித்தோம். உடலைத் தளர்த்தி ஆடும் ஹிப்-ஹாப்பையும், இறுக்கமாக உடலை வைத்துக்கொண்டு ஆடும் பரதத்தையும் ஒரே புள்ளியில் இணைத்து ஆடுவது கொஞ்சம் சவாலான விஷயம்தான். நாங்கள் படிக்கும் இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் எங்கள் ஸ்டைல் ஆஃப் டான்ஸுக்குப் பெரிய ரசிகர் கூட்டமே உருவானது. நண்பர்களின் உற்சாகத்தோடு வீடியோக்களை யூ-டியூபில் வெளியிட்டோம். பாப்புலரானோம். விளம்பரப் பட டைரக்டர் கமல் சேது எங்கள் ஃபியூஷன் டான்ஸ் விளம்பரத்துக்கு எங்களை அணுகியபோது வானத்தில் பறப்பதைப் போலிருந்தது. இப்போது நிறைய ஃப்ரெண்ட்ஸ் ரெக்வெஸ்ட் வருகிறது!’’ என்கிறார்கள்.

வெல்டன் கண்ணுகளா!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick