ரூம் போட்டு யோசிப்பேன்!

விதவிதமாய் சாதனை செய்யவே படம் எடுக்கும் பாபுகணேஷின் லேட்டஸ்ட் படைப்பு ‘காட்டுப்புறா’. உலகின் முதல் ‘குழந்தைகள் வாசனைப் படமான(?!)’ இதில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு, நடிப்பு, இசை என ஆல்-இன்-ஆல் அழகுராஜாவாகப் பணிபுரிந்து பட்டி டிங்கரிங் பார்த்திருக்கும் பாபுகணேஷிடம் பேசினேன். ‘‘கூகுள்ல உங்களைப் பத்தின குறிப்புகளெல்லாம் குதறிப்போட்ட மாதிரி கிடக்கும். கொஞ்சம் அடுக்கிச் சொல்லுங்களேன்..!’’ என்றதுமே, ஆர்வமாகிறார் பாபுகணேஷ்.

‘‘என்னையும் என் நண்பர்களையும் படிக்க வெச்சதே தலைவர் எம்.ஜி.ஆர்தான்! படிச்சு முடிச்சதும் அரசியலுக்கு வாங்கனு சொன்னார். நான் ‘ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல படிக்கப்போறேன்’னு சொல்லிட்டேன். தெலுங்குல டாக்டர்.ராஜசேகர் நடிச்ச ‘மகாடு’தான் நான் தயாரிச்ச முதல் படம். தமிழ்ல ‘மீசைக்காரன்’ங்கிற பெயர்ல ரிலீஸ் ஆச்சு. அப்புறம், சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கிய ‘சீர சாகரா’ கன்னடப்படத்தைத் தயாரிச்சேன். ரெண்டுமே ஹிட் படங்கள். அப்புறம்தான், ‘கடல் புறா’ங்கிற தமிழ்ப் படத்தைத் தயாரிச்சதோட 14 விதமான பணிகளைப் பார்த்துக்கிட்டேன். அது கின்னஸ் ரெக்கார்டு. தவிர, நானே இசையமைத்த இந்தப் படத்தோட பாட்டெல்லாம் செம ஹிட்! அப்புறம் நான் இயக்கித் தயாரிச்ச பெரும்பாலான படங்களுக்கு 14 வேலைகளைச் சேர்த்துதான் பார்த்தேன்!’’ என்று அட்ராசிட்டியை ஆரம்பித்தார் பாபுகணேஷ்.

‘‘மொத்தம் 25 படங்களில நான் நடிச்சிருக்கேன். இப்போ ரிலீஸாகப்போற ‘காட்டுப்புறா’ நான் இயக்குற பத்தாவது படம். ஒவ்வொரு படத்துக்கும் ஏதாவது புதுமையைச் செஞ்சுக்கிட்டே இருக்கணும்னு ஆசைப்படுவேன். நான் இயக்கிய ‘நாகலிங்கம்’ படத்துல மந்திரவாதி வர்ற சீன்ல தியேட்டர் முழுக்க அக்னி குண்டத்துல இருந்து வர்ற புகையைக் கிளப்பிவிட்டேன். கண்ணை மூடிக்கிட்டு அதை உணர்ந்ததா புது அனுபவமா இருந்துச்சுனு பல பேர் பாராட்டினாங்க. அதுக்காகவே ‘லிம்கா’ சாதனையில் அந்தப் படம் இடம்பெற்றது. அடுத்து, டூப்ளிகேட் ரஜினி, கமல், விஜய், அஜித்தை வெச்சு ‘ப்ளஸ் கூட்டணி’னு ஒரு படம் எடுத்தேன். முதலுக்கு மோசமில்லாம நல்ல வசூல் கிடைச்சது. போன வருடம் ரிலீஸான ‘நானே வருவேன்’ உலகின் முதல் வாசனைப் பேய் படம்! ஸ்கிரீன்ல பேயைக் காட்டும்போது மல்லிகைப்பூ வாசனை அடிச்சு விடறதுக்கு எல்லா தியேட்டருக்கும் ஒரு மெஷின் கொடுத்தேன். இதுவும் கின்னஸ் சாதனையில இடம்பெற்றது. 

இப்போ, ‘காட்டுப்புறா’வை உலகின் முதல் குழந்தைகள் வாசனைப் படமா எடுத்திருக்கேன். படத்துல முக்கியமான கேரக்டர்ல ஒரு குழந்தை நடிச்சிருக்கு. அந்தக் குழந்தையைத் திரையில காட்டும்போதெல்லாம் மல்லிகைப்பூ வாசனை அடிக்கும். இந்த மாதிரி ஒரு முயற்சியை உலகத்துல இதுவரை யாருமே பண்ணதில்லை!’’ என்று தாறுமாறாகத் தட்டிவிட்டவர், தொடர்ந்தார்.

‘‘இது ‘நானே வருவேன்’ படத்தோட பார்ட்-டூ! என் மகன் ரிஷிகாந்த் முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்கார். அவரும் பல சாதனைகள் செஞ்சவர். பாடி பில்டிங்ல ‘மிஸ்டர் தமிழ்நாடு’ டைட்டில் வாங்கினார். இப்போ இந்தியா லெவல்ல ஃபைனலுக்கு வந்திருக்கார். அடுத்து ஆசியா லெவல்ல சாதிக்கணும்னு ஆசையா இருக்கார்!’’ என்றவர், தன்னுடைய ‘சாதனை’ வெறிக்குக் காரணங்களைச் சொன்னார்.

‘‘தொடர்ந்து ஏழு படங்களுக்கு 14 விதமான வேலைகளைப் பார்த்து சாதிச்சிருக்கேன். இந்தியாவில் மட்டுமில்லை, உலகத்துலேயே இந்த மாதிரி சாதனையை யாரும் பண்ணியிருக்க மாட்டாங்க. இதுக்குக் காரணம் ஒண்ணுதான். கமல்ஹாசன் சார், ரஜினி சாரோட சாதனைகளையெல்லாம் கூகுள்ல, விக்கிபீடியாவுல தட்டினா தகவல்கள் கொட்டும். ஆனா, அவங்க உலக சாதனைகளைப் பண்றதுக்கெல்லாம் நேரம் இருக்காது. நான் சின்னத் தயாரிப்பாளர்தான். ஒரு கோடியில படம் எடுத்து, ஒன்றரை கோடிக்கு வசூல் பண்ணிடுவேன். அதனால, உலக சாதனை பண்றதுக்கெல்லாம் எனக்கு நிறைய நேரம் கிடைக்குது. ஆர்வமும் இருக்கு. கேமரா சொந்தமா வெச்சுருக்கேன். அதுல, ஹாலிவுட் குவாலிட்டியில விஷூவல் கொடுத்துடலாம். புதுசு புதுசா யோசிச்சுக்கிட்டே இருந்தா, உலக சாதனைகளும் வந்துக்கிட்டே இருக்கும். இதுவரை நான் பண்ண சாதனைகளை யாராச்சும் உடைப்பாங்கனு பார்த்தா, யாருமே உடைக்கலை. ஸோ... நானே உடைச்சு, அடுத்தடுத்த சாதனைகளைப் பண்றதுக்குத் தயாராகிட்டு இருக்கேன்! அடுத்த படம் ‘மிஸ் வேர்ல்ட்’னு இந்தியிலேயும், ‘உலக அழகி’னு தமிழ்லேயும் ஒரே நேரத்துல ரிலீஸாகப் போகுது. அதுக்கு புதுசா என்ன பண்ணலாம்னு யோசிக்கத்தான், மும்பை வந்திருக்கேன்!’’ என்றார் பாபுகணேஷ்.

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick