ஓடிப் போயிடுங்க அப்படியே!

சில பேர் இருக்காங்க. எப்பவுமே ஃபுல் நெகட்டிவ் எனர்ஜியோடவே வளைய வருவாங்க. அவங்களை நீங்க பார்த்தாக்கூட உங்களுக்கும் அந்த நெகட்டிவ் எனர்ஜி அப்படியே தொத்திக்கும். சொல்லட்டுமா..?

காதலர் தினத்தன்னிக்கு ஜோடி இருக்கோ, இல்லையோ ரொமான்டிக்கான விஷயங்களை உலகமே ஷேர் செய்த வண்ணம் இருக்கும். ஆனால் இவங்க மட்டும் ஒரு பொண்ணு, ஒரு கையில் கத்தியும் இன்னொரு கையில் இவன் இதயத்தை வெட்டி எடுத்து ரத்தத்தோடு நடந்து செல்லும் குலை நடுங்க வைக்கும் படத்தை ஸ்டேட்டஸாகப் போட்டு ‘பெற்றோர்களை மட்டும் காதலிப்போர் சங்கம்!’ என கெத்து காட்டுவதாய் நினைத்து மொக்கை போடுவார்கள். அப்போ யாரைடா கல்யாணம் பண்ணுவீங்க?

ஸ்டேட்டஸ் போடுவதாக இருந்தால்கூட ‘ரெண்டுமணி நேரமா பேங்க்ல க்யூவில நிற்கிறேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது பகவானே!’- ஃபீலிங் கடுப் எனப் போட்டு நொந்துகொள்வார்கள்!

கொடூர விபத்து வீடியோ, ஆட்டின் கழுத்தைப் பூசாரி அறுக்கும் வீடியோ, நீங்கள் உண்மையான இந்தியன்னா இதை ஷேர் செய்யுங்க என எதையாவது ஷேர் செய்து சமூக அக்கறையைக் கொஞ்சம் அக்கப்போராகக் காட்டுவார்கள்!

நேரிலோ போனிலோ பேசும்போது நாம் அக்கறையாக விசாரித்தால் பதிலுக்கு இப்படிச் சொல்வார்கள். ‘ஏதோ இருக்கேன் சார். ஒரு வாரமா காய்ச்சல். போன மாசம் பூரா தலைவலி படுத்தி எடுத்துச்சு. இப்போ காய்ச்சல். சனியன் எப்போ நிற்குமோ தெரியலை’ என லைட்டாய் இருமியபடி கேஸ் ஹிஸ்டரி சொல்லிப் பதற வைப்பார்கள்!

‘பசங்களை நிம்மதியா இருக்க விடுங்கடி’, ‘லைக் போடாட்டி ரத்தம் கக்கிச் சாவீங்க’, ‘காதல் தோல்வி காதலர்கள்’ என இவர்கள் லைக் செய்து வைத்திருக்கும் ஃபேஸ்புக் பக்கங்களே இவர்கள் யாரென்று சொல்லாமல் சொல்லும்!

அவங்களுக்கு கால் பண்ணீங்கனா ‘கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்..!’ போன்ற சோக ஷெனாய் பாட்டுகளை காலர் ட்யூனாக வைத்திருப்பார்கள்!

நீங்கள் எவ்வளவு உற்சாகமாகக் கை குலுக்கினாலும் செத்தவன் கையில வெத்தலை வெச்ச கதைதான். கடமைக்குனு கையைக் கொடுக்கிறதோட ‘என்ன பாஸு ஆளு செம உற்சாகமா இருக்கீங்க? செழிப்பா இருக்கீங்க போல..!’ என நம்ம மூடுல மூணு லாரி மண்ணை வாரி இறைப்பார்கள்!

தேர்ந்தெடுத்து அணியும் ஆடைகளின் கலரும் ச்சும்மா நசநசனு இருக்கும். சிமென்ட் கலர் பேன்ட், வெந்தயக் கலர் சட்டை. அடேய்!

‘ஆவாரம்பூ’ல வினீத் செம ஹேண்ட்ஸம்.’, ‘மோகமுள்’ அபிஷேக் செம!’ என ஆரம்பித்து, சூப்பர் சிங்கரின் எலிமினேஷன் ரவுண்டை அழுதுகொண்டே பார்த்து, அழுதுகொண்டே முகநூலில் ஷேர் செய்யும் நபராகவும் இருப்பார்கள்!

எதுக்கும் அவய்ங்க வந்தா பத்து அடி தள்ளி நிற்கவும்!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick