இண்டர்நெட்டில் இதுதான் பண்ணுவோம்!

‘அந்த போன்ல அப்படி என்னதான் இருக்கு?’ - இது அவசரத்துக்குக்கூட மளிகைக்கடைக்குப் போகாத விரக்தியில அம்மாக்களும், நெட்கார்டு போட்டு கட்டுப்படி ஆகாத அப்பாக்களும் இன்றைய யூத்துகளைப் பார்த்துப் புலம்பும் ஸ்டேட்மென்ட்! இவ்வளவு இம்சை கொடுக்கிற இளசுகள் ஆன்லைன்ல அப்படி என்னதான் செய்றாங்க?

மீம்ஸ் மொமென்ட்: அரசியல், சினிமா, சமூகம்னு எதையும் விட்டுவைக்காம டிரெண்டிங்குக்குத் தகுந்த மாதிரி மீம்ஸ் போடுவோம். கொஞ்சம் சிரிக்க வைக்கிற மாதிரி இருந்தாலே லைக்ஸும் ஷேரும் அள்ளும். கவுண்டமணி, சந்தானம், வடிவேலு படங்களையே மீம்ஸ் போட்டு போர் அடிச்சுப்போன எங்களுக்கு மறுவாழ்வு கொடுத்ததே கேப்டன்தான். ‘தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க’ நம்ம கேப்டன் போட்ட போடுக்கு இன்னைக்கு வரைக்கும் ஷேரிங் சிதறுது. வரலாறு முக்கியம் அமைச்சரே!

வெச்சு செஞ்சிருவோம்ல: தன் போட்டோவைத் தானே ஃபேஸ்புக், ட்விட்டரில் போட்டு அதுக்கு மேலே ஒரு தத்துவம் போடுறவங்களைக் குண்டர் சட்டத்துல கைது பண்ணலாம். ஆனா, நம்ம நண்பர்களே கமென்ட் பாக்ஸில் வெச்சி செஞ்சுருப்பாங்க. அதைப் படிச்சுப் பார்த்து பரவசமடையறதோட நின்னுடக் கூடாது. நம்ம பங்குக்கு ஏதாச்சும் கொளுத்திப்போட்டு வருவோம். தத்துவத்துக்கே இந்த நிலைமைனா, அறிவுரை சொல்றவங்களுக்கு என்னாகும்? என்ன ஃபீலிங்கா? உன் மொக்கையைப் படிச்சுட்டு எனக்குத்தான்டா ஃபீலிங்கு!

லாஸ்ட் சீன் நெவர்: நண்பர்கள் பட்டாளம்னாலே நல்லவன் ஒருத்தன் இருப்பான். அந்தக் குழந்தையை பட்டி டிங்கரிங் பண்ணி, இந்த உலகத்துக்குக் கொடுக்கிறது எங்கள் கடமை. அவனைப் பழக்கப்படுத்துறதுக்காகவே ஒரு குரூப் ஆரம்பிச்சு, வாட்ஸ்-அப் சாட்டிங்கைப் போடுவோம். எப்படி? திடீர்னு பேசி வெச்சு, குரூப்ல இருக்கிற அத்தனை பேரும் அவன் ஒருத்தனையே டார்கெட் பண்ணி ஓட்டினாப் போச்சு. குரூப்ல இருந்து விலகினாலும், மீண்டும் இழுத்துப் போட்டு சாகடிப்பாங்கனு அவனே கொஞ்ச நேரத்துல பழகிடுவான். அப்படிப் பழகிட்டா, அடுத்த ஷிஃப்ட்ல நீங்களே அடுத்தவனைக் கலாய்க்கப் பழகிடுவீங்க. எவ்ளோ அடிச்சாலும் தாங்குறானே... நீ ரொம்ப நல்லவன்டா!

ஸ்மைலி வார்: ஹைக் மெசேஞ்சர் பயன்படுத்துறவங்க, ஸ்மைலியிலேயே பேசி, ஸ்மைலியிலேயே பழகி, ஸ்மைலியிலேயே கடிதம் எழுதுற அளவுக்குப் பழக்கப்பட்டிருப்பாங்க. இங்கதாங்க ‘ஸ்மைலி போர்’ங்கிற அக்கப்போர் நடக்குது. ‘விவாதக்களம்’ மொத்தமும் ஸ்டிக்கர், ஸ்மைலியிலதான் இருக்கணும்னு முடிவு பண்ணிட்டா, ஆயிரம் ஆயிரம் ஸ்டிக்கர்களுக்கு மத்தியில சிச்சுவேஷனுக்குத் தகுந்த மாதிரி டக்குனு ஒரு ஸ்டிக்கரை ஒட்டணும். இதுவே பெரிய கலை பாஸ். இந்த விஷயத்துல 4ஜி இல்லை... 7ஜி-யே வந்தாலும் நம்மாளுகளை மிஞ்ச முடியாது. பேச்சு பேச்சா இருக்கணும்!

குட்மார்னிங், குட்நைட் குரூரர்கள்: வேறென்ன? எழுந்திரிச்சதும் ‘காபி’ படத்துடன் குட்மார்னிங், மண்டை காயற மதிய வெயில்ல ‘லஞ்ச்’ போட்டோவுடன் ‘குட்-ஆப்டர்நூன்’, சாயங்காலம் அஞ்சு மணிக்கு ‘பேபி’ படத்துடன் ‘குட் ஈவினிங்’, ‘குட்-நைட்’ சொல்லும்போது மட்டும் ‘பேய்’ படம். என்னைக்காவது ஒருநாள், எனக்கும் பக்கத்து வீட்டோட வைஃபை பாஸ்வேர்டு கிடைக்கும். அப்போ இருக்குடா உங்களுக்கு. நீ புடுங்குறது பூராவுமே தேவையில்லாத ஆணிதான்!

நாமெல்லாம் அப்படியா பழகினோம்: புளியமரத்துல ஊஞ்சல் ஆடியது, குளோஸ்-அப்பில் எடுத்த கொடூரமான செல்ஃபினு ஃபேஸ்புக்ல போட்டு, உயிரை வாங்குறதோட விடாம, இன்பாக்ஸுல வந்து, ‘அதுக்கு லைக் போட்டியா? இதுக்கு லைக் போட்டியா?’னு கெஞ்சுவாங்க. லைக் போட்ட கையோட, ‘இதுக்கு ஏன்டா இன்பாக்ஸுல வந்து கெஞ்சுற?’னு கமென்டையும் தட்டிவிட்டு வருவோம். கடமை முடிஞ்சுது. உங்களையெல்லாம் பார்த்தா எனக்குப் பாவமா இருக்கு!

- அ.செளம்யா, தா.நந்திதா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick