விழுவது 60... இது ஏர்போர்ட் காமெடி!

56...5...58...59...60... ம்ம்ம்ம்... இல்லை இல்லை 61. இல்லை இல்லை 62. ஆமாம் பாஸ். இப்படித்தான் ஆளாளுக்கு ஒவ்வொரு நம்பர் சொல்றாங்க, நம்ம சென்னை விமான நிலையத்தின் மேற்கூரையில இருந்து விழுற கண்ணாடியோட எண்ணிக்கையை! விமான நிலைய வட்டாரத்துல விசாரிச்சுப் பார்த்தா, எண்ணிக்கை சரியா 60தானாம். போறபோக்கைப் பார்த்தா, அது செஞ்சுரி போட்டுடும் போல. அதற்குள்ளாவது நம்ம கவர்ன்மென்ட் என்ன ஸ்டெப் எடுத்து தடுக்குதுனு ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்தத்தான் இந்த அட்ராசிட்டி. அதையே கேக் வெட்டி செலிபரேட் பண்ணலாமேனு தோணுச்சு. வாங்க 60 நாட் அவுட் கேக் வெட்டிக் கொண்டாடி கவர்ன்மென்ட்டை நாக்-அவுட் பண்ணிய அந்த அட்ராசிட்டி செலிப்ரேஷனைப் பார்க்கலாம்.

இது அட்ராசிட்டியோட அடுத்த லெவல். காரில் ஆறு நண்பர்களோடு கிளம்பி ஒரு உச்சி வெயில் பொழுதில் விமான நிலையத்தை அடைந்தோம். எப்போதும் பரபரக்கும் அந்தப் பிரதேசம் வெயில் மண்டையைப் பிளந்ததால்  கூட்டமே இல்லாமல் இருந்தது. ‘ஈயம் பூசியதைப் போலவும் இருக்கணும்... பூசாததைப் போலவும் இருக்கணும்’ என்ற கவுண்டமணியின் வாக்கிற்கிணங்க யாருக்கும் தொந்தரவு தராத இடமாகவும் கொஞ்சம் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் இடமாகவும் உள்நாட்டு விமான நிலையத்தின் முன்பு நுழைவு வாயிலின் அருகில் தேசியக்கொடிக்கு முன் இருக்கும் புல்தரையை கேக் வெட்டும் வைபவத்துக்குத் தேர்ந்தெடுத்தோம். கையோடு கொண்டுபோன பட்டர் ஸ்காட்ச் கேக்கில் ‘60* நாட்அவுட் சீலிங் ஃபால்ஸ் டௌன்’- என்ற  வாசகமும் கூடவே #SaveChennaiAirport என்ற ஹேஷ்டேக்கையும் விமான நிலையத்தின் கேக்கில்  பிரின்ட் செய்திருந்தோம். போலீஸ் பூத்தும், ஆட்டோ ஸ்டாண்டும் அருகில் இருந்ததால், கையோடு கொண்டுபோன நாற்காலியில் கேக்கை வைத்து ‘லண்டன் ஃபிரிட்ஜ் இஸ் ஃபாலிங் டௌன்’ ரைம்ஸை உல்ட்டா செய்து ‘சென்னை ஏர்போர்ட் சீலிங் ஃபாலிங் டௌன்...ஃபாலிங் டௌன் ஃபாலிங் டௌன்’ எனப் பாடத்துவங்கியதும் சிலர் அருகே வந்து விசாரித்தனர். நம்மில் மூன்று பேர் தலையில், கையில், முகத்தில் கட்டு மற்றும் பேண்டேஜ்கள் இருப்பதைப் பார்த்து (சும்மாதான் பாஸ்) அங்கே துப்புரவுப் பணியில் இருந்த பெண்களில் இருவர் நிஜம் என நம்பி, ‘‘உச்ச்சுச்சு... இவர் கண்ணாடி விழுந்து தலையில அடிபட்ட ஆளா? ரொம்பவா அடிபட்ருச்சு?’’ என்று கேட்டுப் பரிதாபப்பட்டார்கள்.

‘‘ஏங்க செம போங்கு. இந்த மேட்டரைப் பார்த்தாச்சும் விமான நிலைய நிர்வாகம் நல்ல ஸ்ட்ராங்கான கண்ணாடியை மாட்டி வைக்கணும். ரத்தக்காவு வாங்காம விடாது போலிருக்கு. நல்லவேளை இதுவரைக்கும் உயிர்ச் சேதமோ, காயமோ யாருக்கும் பெரிசா ஏற்படலை. உங்க முயற்சிக்கு வாழ்த்துகள் ப்ரோ!’’ என்றார் ஒரு ஆட்டோக்காரர். ஆனால், போட்டோவுக்கு மட்டும் போஸ் கொடுக்கவில்லை. ‘‘ஆமா தம்பி. நாங்க பிழைப்பைப் பார்க்கிற இடம். ஏற்கெனவே ஆட்டோக்களை மட்டும் அஞ்சு வருஷமா உள்ளே விடாம துரத்தி அடிக்கிறாங்க. இதுல பேட்டி கொடுத்தோம். அம்புட்டுதான்!’’ என்றார்.

பெங்களூரு ஃப்ளைட்டில் இருந்து இறங்கி வெளியே வந்த ஒரு குடும்பத்துக்கு முதல் கேக்கை ஊட்டி, ‘‘சென்னை ஏர்போர்ட் மேற்கூரை 60-வது முறையா உடைஞ்சு விழுந்துருக்கே தெரியுமா?’’ என்று கேட்டோம். ‘‘அப்படியா...நேக்கு தெரியாதே. பத்து வாட்டி பதினோரு வாட்டில்ல நெனைச்சேன்! 60 னா ரிடிக்குலஸ்??!!’’ என்று ஷாக்கிங்கானவர் ‘‘இதையெல்லாமா கேக் வெட்டிக் கொண்டாடுவீங்க? பட், நல்ல ஐடியாவாத்தான் நேக்கு தோண்றது’’ என்றார் அந்தக் குடும்பத் தலைவர்.

இளைஞர்கள் இருவர், ‘‘செம ஆக்டிங். நல்ல இன்ஜினீயர்களை வெச்சு அதை உருவாக்கி இருந்தா, இப்படி பொசுக்கு பொசுக்குனு விழாம இருந்திருக்கும். ஆனா, ஒரே ஒரு டவுட் பாஸ். விழுறப்போ ஒவ்வொரு வாட்டியும் கரெக்ட்டா எண்ணுறது யார் பாஸ்? முடிஞ்சா கண்டுபிடிச்சு சொல்லுங்க. அண்ணா சாலையில் அந்த ஆளுக்கு சிலை வைக்கணும்!’’ என்றனர்.


கிளம்பும்போது கேக்கை வாங்கி ஒரே வாயில் திணித்துக்கொண்ட ஓர் இளைஞர், ‘‘சீக்கிரமே செஞ்சுரி அடிக்க வாழ்த்துக்கள் ஃப்ரெண்ட்ஸ்!’’ என்றாரே பார்க்கலாம்.

செஞ்சுரி போடுறதுக்குள்ள சென்னை ஏர்போர்ட்டைக் காப்பாத்துங்க மக்கா!

 

-ஆர்.சரண் படங்கள்: ஜெ.வேங்கடராஜ், தி.ஹரிஹரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick